செய்திகள்

மத்திய அரசின் பட்ஜெட் உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உருவாக்கும்: பாராளுமன்றத்தில் அண்ணா தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத்குமார் பேச்சு

புதுடெல்லி, பிப்.12–

மத்திய அரசின் பட்ஜெட் உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் என்று பார்லிமெண்டில் அண்ணா தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத்குமார் கூறினார்.

அண்ணா தி.மு.க. மக்களவை குழுத் தலைவரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்தரநாத்குமார் எம்.பி. 10–ந் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசியதாவது:–

‘வைய தலைமைக்குள்’ என்ற மகாகவி சுப்ரமணி பாரதியாரின் கவிதை வரிகளுக்கேற்ப, உலகத்திற்கே குருவாக நமது பாரதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட் ஜன்ஜாகாப் பட்ஜெட் என்றனர். ஆமாம், இது மக்கள் பட்ஜெட், உலகெங்கிலும் தமிழர்களின் பெருமையை எடுத்துரைக்கும் நரேந்திர மோடியை போலவே, பட்ஜெட் தாக்கலின் போது அவ்வை மொழியின் ஆத்திச்சூடியையும், தெய்வப்புலவர் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மத்திய நிதி இணை அமைச்சர் அனுராத் தாகூருக்கும், தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

பட்ஜெட் தாக்கலின் போது குமரிக் கண்டத்தின் தமிழையும், காஷ்மீரின் தமிழையும் மத்திய அமைச்சர் மேற்கோள் காட்டியது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே திட்டம் என்ற தேசநலக் கொள்கைகளை எடுத்துரைக்கின்றது. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வையும் மேம்படுத்தும் வகையில் 2022–க்குள் இந்திய விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

கீழடியையும் இணைக்கவேண்டும்

ஜெய் கிஷான், ஜெய் ஜவான் என்ற தேசிய முழக்கத்தை செயல்வடிவில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசால் மட்டுமே இது சாத்தியமாயிருக்கிறது. தமிழகத்தின் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு உலகறியும் வகையில், முந்தைய வரலாறுகளை மீட்டெடுக்கும் வகையிலும், உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதை தமிழக அரசின் பிரதிநிதியாக நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இதில் மதுரை கீழடியையும் இணைக்க வேண்டும் என்று அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோலே மத்தியஅரசின் தனிநபர் வருமான வரியில் செயல்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்களால் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். கல்வி துறைக்கு ரூ.99,300 கோடி, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதிக்காக ஜல் ஜீவன் திட்டத்திற்கு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் என்பதில் ஐயமில்லை.

விவசாயிகளுக்கு வரபிரசாதம்

100 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை தீர்ப்பதற்காக திட்டமும், உடான் திட்டத்தின் கீழ் 100 புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்பதும் 100 சதவீதம் பாராட்டுக்குரியதாகும். கிறிஷ்டி உடான், கிஷான் ரயில் சேவை என்பதெல்லாம் விவசாயிகளின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆக நாடு விடுதலை பெற்ற பிறகும் பல்வேறு வகையில் அடிமைப்பட்டு கிடந்த பாரத தேசத்தை மீட்டெடுத்த பெருமை சுதந்திர இந்தியாவில் பிறந்து பாரத பிரதமரான மோடியையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே சாரும், நல்லவைகளை வரவேற்று பேசும் வேளையிலே, அல்லவைகள் அங்கங்கே ஆர்பரிக்கத்தான் செய்யும், கண்களை கட்டிக் கொண்டு கல்யானையை தடவி, கையால் தடவி பார்த்தவர்களால் உண்மையான உருவத்தை ஒரு போதும் சொல்ல முடியாது.

கச்ச தீவினை தாரைவார்த்து தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் தீங்கு இழைத்தவர்கள், நாட்டில் சாதி, மத கலவரம், குண்டு வெடிப்பு என நாடே சீர்க்குலைந்து இருந்தது. 1998–ல் கோவை தொடர்குண்டு வெடிப்பு, 2008–ல் மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் என வெடிக்குண்டு கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து தேச நலனுக்கான எதிரான போராட்டக்காரர்களையும் தேசியக் கொடியை பிடிக்க வைத்தது மத்திய பாரதீய ஜனதா அரசு தலைமையிலான அரசு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சிப்பதா?

2009–ல் ஈழத் தமிழர்களுக்கான படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, தமிழர்களை பாதுகாப்பதற்காக உண்ணாவிரதம் என்று நாடாகமாடியவர்களை நம்முடைய தமிழக மக்கள் இன்றைக்கு புரிந்து கொண்டதால்தான் 2011லிருந்து இன்றைக்கு 10 ஆண்டுகள் தாண்டியும் தமிழகத்தில் வெற்றிகரமாக இந்த ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. அதேபோல தமிழகத்தில் மத்திய அரசின் கூட்டணியில் இருந்து மக்களவை உறுப்பினராக தனி ஒருவனாக இருப்பதை சிலர் விமர்ச்சித்திருக்கிறார்கள்.

தர்மம் வெல்வதற்கு தேவை எண்ணிக்கையல்ல, நம்பிக்கை. ஸ்ரீமத் பகவத்கீதை உருவாக காரணமான குருஷேத்ர போரில் பாண்டவர்களை விட கௌரவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் வெற்றி தர்மத்தின் பக்கம் நின்ற பாண்டவர்களுக்கே, அதேபோல நானும் தர்மத்தின் பக்கம் நிற்கின்றேன். இங்கு கிருஷ்ணரும் இருக்கின்றார், அர்ஜுனனும் இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிவார்கள்.

தேச நலனுக்காக நிறைவேற்றப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஓட்டு வங்கி அரசியலுக்காக எதிர்த்து வருகிறார்கள். அகிம்சை என்னும் உண்மை பயிரை அன்பினால் வளர்த்த தேசபிதா மகாத்மா காந்தியின் இந்திய மண்ணில் வன்முறையை வளர்க்கவும், தூண்டவும் ஜனநாயக விரோக போக்கினை வளர்க்கும் விதத்திலே எதிர் கட்சியினர் பேசுகிறார்கள், செயல்பட்டு வருகிறார்கள்.

உலக நாடுகளில் உயர்வான முன்னேற்றத்தை பெற்ற ஒரே நாடு பாரதம் என்னும் உன்னத நிலையை உருவாக்கும் லட்சியத்தை இன்று முன்னெடுத்து செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, இது மக்களுக்கான பட்ஜெட், இந்த பட்ஜெட் இந்தியாவை உலக அரங்கில் வல்லரசாக உருவாக்கும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை என்பதை தெரிவித்து, அண்ணா தி.மு.க.வின் சார்பாக இந்த பட்ஜெட்டை நான் மனதார வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *