நாடும் நடப்பும்

ஆன்லைன் ஷாப்பிங், உஷார்!

நவராத்திரி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி ஒன்றன் பின் ஒன்றாக வர இருப்பதுடன் புரட்டாசி மாதம் முடிவுக்கும் வருவதால் கல்யாணம் மற்றும் சுபகாரியங்கள் வரத்துவங்கி விடும். ஆக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆடை, ஆபரண விற்பனை கோலாகலமும் துவங்கிவிடும்.

கொரோனா பெரும்தொற்று அச்சத்தால் ஷாப்பிங் செல்ல தயங்குபவர்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகிறார்கள். இதை எல்லாம் மனதில் கொண்டே ஆன்லைன் விற்பனை ஜாம்பவான் நிறுவனங்கள் விழாக்கால சலுகை விற்பனைகள் என விளம்பரம் செய்து வருகிறார்கள்.

இவ்வாரம் துவங்கும் இந்த ஷாப்பிங் திருவிழா அடுத்த ஒரு மாதத்திற்கு சாமானியனின் கண்களில் ‘பளிச்’ என்று பட்டுவிடும்! குறிப்பாக ‘50 முதல் 80 சதவிகித தள்ளுபடி விலையில்’ போன்ற வாசகங்கள் கண்ணை பறிக்கும்படி இருக்கிறது.

இப்படி தள்ளுபடி விலை சாத்தியமா? பொருட்களின் தரம் எப்படி இருக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில், இது நவீன டிஜிட்டல் யுகம், இதில் எல்லாம் சாத்தியம்!

ஒரு பொருளை ஆடம்பரமான மால்களில் உள்ள கடையில் விற்பனை செய்தால் அதில் ‘குளுகுளு’ ஏசி வசதி, கடை வாடகை, ஆடம்பர உள்அலங்காரம், கடை ஊழியர்கள் சம்பளம் மற்றும் கடை முதலாளிக்கு நியாயமான லாபம் முதலிய செலவுகள் அடக்கவிலையில் இருக்கத்தானே செய்யும்!

ஆனால் ஆன்லைன் சமாச்சாரத்தில் விற்பனருக்கு அதிகபட்சம் 22 சதவிகித லாபத்துடன் உரிய வரிகள் போக, வேறு மேற்படி செலவுகள் ஏதும் கிடையாது! வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் முகவர்களும் மிக குறைந்த வாடகை தொகையில் செய்துவிடுவதால் வருடம் முழுவதும் விலை நிர்ணயிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

ஆனால் இந்த 50 முதல் 80 சதவிகித தள்ளுபடி என்பதில் சற்று கவனத்துடன் வாங்க வேண்டிய கட்டாயம் நுகர்வோருக்கு உள்ளது.

சலுகை விலையில் அதிகபட்சம் ரூ.500 மட்டும் என்று இருந்தால் அந்த பொருளுக்கு அதைவிட கூடுதல் சலுகை இருக்காது!

மேலும் பல பொருட்களுக்கு தள்ளுபடி விலை என்று அறிவிக்கப்பட்டாலும் அந்த தள்ளுபடியானது அடுத்த பொருட்களை வாங்கும்போது குறைத்துக் கொள்வார்கள் என்ற வாசகம் மிக சிறிய எழுத்துக்களில் இருக்க கூடும்!

ஆகவே ஏதேனும் பொருள் வாங்கும்போது மிக கவனமாக கொடுத்துள்ள விவரங்களை படித்து பார்த்து விட்டே ஆன்லைனில் வாங்குவது புத்திசாலித்தனமாகும். மேலும் ஆன்லைன் நிறுவனங்களின் நுகர்வோர் சேவையுடன் இமெயிலிலோ, போனிலோ அழைத்துப் பேசி விவரங்களை கேட்டுக் கொண்ட பிறகே முடிவெடுப்பது நல்ல யுக்தியாகும்.

சில பொருட்களுக்கு இன்றோடு சலுகை முடிவடைந்து விடும். அதனால் வாங்கி விட்டேன். ஆனால் பொருளின் தரம் எதிர்பார்த்தபடி இல்லையென்றால் பாதகம் வாங்கியவருக்கு தான். ஆகவே வாங்கும்முன் சில மணிநேரம் தாமதப்படுத்தி வாங்குவதில் தயக்கம் காட்டவே கூடாது.

மேலும் எந்த அதிக விலையுமின்றி மாதத் தவணை என்று ஆன்லைனில் ரூ.50,000 பொருளை மாதாந்திர தவணையில் மாதம் ஒரு தொகையை தந்தால் போதும் என்று வாங்க நினைத்தால் முதல் தவணையை செலுத்தும் முன்பு அந்த சேவையை ஆன்லைன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிதி நிறுவனத்தின் கொள்கைகளை தெரிந்து கொண்ட பிறகே வாங்குவது தான் சரி, காரணம் Processing Fee, அதாவது செயல்படுத்த சேவை கட்டணம், முதல் தவணைக்கு மட்டுமே வட்டி கிடையாது. மீதி தொகைக்கு வட்டி நிர்ணயம் என்ன? போன்றவற்றை ஆன்லைன் வாடிக்கையாளர் சேவையிடம் கேட்டு தெரிந்து கொள்வதுதான் சரியான முடிவாக இருக்கும்.

ஆன்லைன் வர்த்தகத்தில் இருக்கும் மிகப்பெரிய சௌகரியம் வாங்கிய பொருளை திரும்ப அனுப்பி விட்டு வேறு கலர், அளவு என்று மாற்றல் வாங்கிக் கொள்ள முடியும்! இப்படித் திரும்ப அனுப்பும் return policy என்ன? என்பதையும் ஒருமுறை படித்து பிறகு தான் வாங்க வேண்டும்.

உள்ளாடைகள், திண்பண்டங்கள் போன்றவற்றிற்கு திரும்ப அனுப்பி விடும் கொள்கை இருக்காது. சுப வைபவத்திற்கு ஒரு ஆடையை வாங்கிவிட்டு வேறு கலர் வேண்டும் என திரும்ப அனுப்பி பெறுபவர்கள் அதிகரித்து வருவதால் பல சமயங்களில் கிழிந்திருப்பதும், சாயம் போனதுமாக இருக்கக் கூடும். ஆகவே பொருளை சோதித்து விட்டு அதை படம் எடுத்து திரும்ப அனுப்பும்போது படத்தையும் அனுப்பிவிட வசதிகள் இருக்கிறது.

மத்திய அரசும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஆன்லைனில் வாங்க முன் பணம் செலுத்தப்பட்ட கூப்பன்கள் தருவது அதிகரித்து வரும் நிலையில் கையில்தான் பணம் இருக்கிறதே, ‘இதையும் கூடவே அதையும் வாங்கலாமே’ என ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தில் அந்த வலையில் வீழ்ந்தும் விடக்கூடாது!

முதலிலேயே ஒரு பட்டியல் போட்டு விட்டு, அதை மட்டும் பொறுமையாக பார்த்து வாங்கினால் தரமும் விலையும் உங்களுக்கும் மகிழ்ச்சி தரும், ஆன்லைன் ஷாப்பிங் அனுபவமும் இனிப்பானதாக இருக்கும். விழாக்கால கோலாகலம் கொண்டாட்டமாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *