செய்திகள்

சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுக்கும் ஆன்லைன் சூதாட்டம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தீவிர விசாரணை

சென்னை, ஜன. 23–

சென்னை நகரில் தொடங்கியுள்ள ஆன்லைன் சூதாட்டம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, அமைந்தகரையில், ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் ஆட்டத்தை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக அண்ணா நகர் துணைக்கமிஷனர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பணம், கை மாறுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. அது தொடர்பாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, அமைந்தகரை, லட்சுமி டாக்கிஸ் ரோடு என்ற இடத்தில் தி.நகரைச் சேர்ந்த ஜித்து என்ற ஜித்தேந்தரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வைத்து ஆன்லைனில் சூதாட்டம் ஆடியதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக இந்த கேமை விளையாடி வருவதாகவும் அதன் மூலம் ரூ.20 லட்ச ரூபாய் பணத்தை இழந்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஹூக்கா பாரில் அமைந்தகரையை சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக கிடைத்த நட்பில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஜித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து அமைந்தகரையில் சைக்கிள் உதிரி பாகங்கள் கடை வைத்திருந்த சுரேஷ் ஜெயின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் இந்த ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் தரகராக செயல்பட்டு பலரையும் சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதும், அவருக்கு பலருடன் சங்கிலி தொடர் போல் தொடர்பு இருந்ததையும் கண்டறிந்தனர். இந்த ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு செயல்படுகிறது என சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.

‘லோட்டஸ் புக் 247’

‘லோட்டஸ் புக் 247’ என்ற பெயரில் வெப்சைட் உருவாக்கி, அதன் மூலம் சூதாட்டம் நடத்தியுள்ளனர். இந்த வெப்சைட்டில் முதலில் பணம் செலுத்தி லாகின் மற்றும் பாஸ்வேர்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு விளையாட்டிற்கு ஏற்ப பாயிண்ட்கள் வாங்கி கொள்ள வேண்டும். எவ்வளவு பாயிண்ட்கள் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதன் பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் இரு அணியில் இருந்து விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பெயரில் பந்தயம் கட்டுவார்கள். மேலும் அவர்கள் விளையாடுவதை பொறுத்து பாயிண்ட்கள் ஏறும். அதை பணமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் வீரர்கள் எவ்வளவு ரன் அடிப்பார்கள், விக்கெட் எடுப்பார்கள் எனவும் பணம் பந்தயமாக வைப்பார்கள் என்பன போன்ற அதிர்ச்சித்தகவல்கள் தெரியவந்தன.

இந்த சூதாட்டத்தில் வெப்சைட்டை உருவாக்கிய முக்கிய தரகர்கள் யார் என சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில், இந்த வெப்சைட்டானது இங்கிலாந்தில் இருந்து செயல்படுவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமல்லாமல் டென்னிஸ், கால்பந்து என ஒவ்வொரு நாளும் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்ப ஆன்லைனில் பணம் கட்டி சூதாட்டம் நடத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் நடக்க போகும் சட்டமன்ற தேர்தலை வைத்து யார் வெற்றி பெறுவார்கள் என சூதாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

4 பேர் கைது

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் லோட்டஸ் என்ற பெயரில் செயலி உருவாக்கி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கும், கைதான கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் பிடிபட்ட ஒவ்வொருவரையும் விசாரிக்கும் போது, அடுத்தடுத்த சங்கிலி தொடர்போல் பல தரகர்கள், முக்கியப்புள்ளிகள் தொடர்பு இருப்பதாலும், வெளிநாட்டிலிருந்து வெப்சைட் நடத்தி ஆன்லைன் சூதாட்டம் நடத்தப்படுவதாலும் இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கு அரசு தடை விதித்த நிலையில், இந்த வகையான ஆன்லைன் சூதாட்டம் தலை தூக்க துவங்கியுள்ளதால் இது குறித்து விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *