செய்திகள்

1 கிலோ விலை ரூ. 100 எதிரொலி: ஓட்டல், டீக்கடைகளில் ‘வெங்காய பஜ்ஜி’ விற்பனை நின்றது

Spread the love

வெங்காயத்திற்கு பதில் வெள்ளரி, கேரட் பச்சடி

ஆம்லெட்டில் முட்டைக்கோஸ்: 

ரூ. 25க்கு விற்றது – இப்போது ரூ.35

சென்னை, நவ. 28–

நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் மிகவும் முக்கியமான ஒன்று வெங்காயம். இதில் சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டு வகைகள் உள்ளன. காய்கள் ஏதும் இல்லாமல் கூட சமையல் செய்யலாம். ஆனால் வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது.

சமையலுக்கும், மருத்துவ குணங்களுக்கும் பயன்படும் வெங்காயத்தின் விலை தற்போது ‘கிடுகிடு’ வென்று உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் ரூ. 100 வரை உயரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இல்லத்தரசிகள் சமையலில் வெங்காயத்தைக் குறைத்துள்ளனர்.

இந்நிலையில், உணவு விற்பனை நிலையங்களில் வெங்காயத்திற்குப் பதிலாக முட்டைக்கோஸ், வெள்ளரியை பயன்படுத்துகின்றனர். மேலும், வெங்காய பஜ்ஜி, வெங்காய பச்சடியையை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு ஓட்டல் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு, ‘ஓட்டல்கள் தங்களது உணவுப் பட்டியலில் இருந்து வெங்காய ஊத்தாப்பத்தை நீக்கியுள்ளனர். சாம்பாரில் வழக்கத்தைவிட வெங்காயத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. பச்சடியில் வெங்காயத்திற்குப் பதிலாக காரட், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது’ என்றார்.

வெங்காய விலை உயர்வால் உணவின் விலையை அதிகரிக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெங்காயம் வாங்குவதைக் குறைத்துவிட்டோம்

தியாகராய நகரில் டீக்கடை நடத்தி வருபவர் ஆசைத்தம்பி. இவர் தனது கடையில் சமோசா, வடை, பஜ்ஜி விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்துப் பேசிய ஆசைத்தம்பி, ‘வடையிலும், சமோசாவிற்காக செய்யப்படும் மசாலாக்களிலும் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் அளவை நாங்கள் குறைத்துள்ளோம். வெங்காயத்தின் விலை ரூ. 90 வரை விற்பனையாகிறது. அதனால் நாங்கள் உணவுகளின் விலையை உயர்த்த முடியாது. வழக்கமாக 3 கிலோ முதல் 4 கிலோ வரை வெங்காயம் வாங்கும் நாங்கள் தற்போது 2 கிலோ மட்டுமே வாங்குகிறோம். வெங்காயத்தை பயன்பாடுத்தாமல் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்கிறோம்’ என்றார்.

இங்கு யாரும் வெங்காயத்திற்குப் பதிலாக முட்டைக்கோசு பயன்படுத்துவதைப் பற்றி சிந்திக்கவில்லை. மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் வெங்காய விளைச்சல் நலிவுற்றதே இதற்கு காரணம்.

உணவுகளுக்கு பிரபலமான நகரமான மதுரையில் உள்ள உணவகங்களில் வெங்காயத்தைக் குறைவாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும், சில்லறை சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 100 ஐ தொட்டவரையில் வெங்காய பஜ்ஜி, வெங்காய பச்சடி போன்ற பெரும்பாலான உணவுகள் உணவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள பல உணவகங்கள் 90% வெங்காயம் உள்ள பொருட்களின் விலையை ரூ. 100 ஆக உயர்த்தியுள்ளது.

500 கிலோ / 300 கிலோ ஆனது

மதுரை மாவட்ட ஓட்டல் சங்கத் தலைவர் கே. எல். குமார், ‘தினமும் அரை டன் வெங்காயத்தை வாங்கும் மதுரையில் உள்ள ஓட்டல்கள், இப்போது சிரமப்பட்டு 300 கிலோ வெங்காயம் மட்டுமே வாங்குகின்றன. சுவை சமரசம் செய்யப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம்’ என்றார்.

மேலும் அவர், ’பெரும்பாலான ஓட்டல்கள் வெங்காய பச்சடியை நீக்கியுள்ளன. வெங்காயம் நிறைந்த ஆம்லெட்டுகளின் விலையை அதிகரித்துள்ளது. ஒரு ஆம்லெட்டில் ரூ. 10 மதிப்புள்ள வெங்காயம் உள்ளது. வெங்காய விலை உயர்வின்படி, ஆம்லேட்டுகளின் விலை அதிகரிக்கப்படாததால் நாங்கள் தளர்வாக இருக்கிறோம்’ என்றார். வழக்கமாக விற்பனை செய்யப்படும் ஆம்லெட்டுகளின் விலை ரூ.25. இதனுடன் ஒப்பிடும்போது தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து ஓட்டல்களிலும் வெங்காயத்திற்குப் பதிலாக முட்டைக்கோசை பயன்படுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *