செய்திகள்

லஞ்ச வழக்கில் டெல்லி துணை முதல்வரின் சிறப்பு அதிகாரி கைது

Spread the love

டெல்லி, பிப். 7–

டெல்லி சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வரின் சிறப்புப் பணி அலுவலர் கைது செய்யப்பட்டது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பல்வேறு தேர்தல் பணிகளுக்கு இடையே, சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டம் என டெல்லி பரபரப்பாகக் காணப்பட்டது.

டெல்லியில், பாஜக, காங்கிரஸ், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி ஆகியவை தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 67 தொகுதிகளில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜக பல்வேறு இடங்களில் மத்திய அரசுகளின் சாதனைகளை விளக்கியும், ஆம் ஆத்மிக்கு எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதுபோன்று ஆம் ஆத்மி தனது திட்டங்களை எடுத்து கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், 13,750 வாக்குச்சாவடிகளில் நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காசியாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிறப்புப் பணி அலுவலர், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மணீஷ் சிசோடியாவின் சிறப்புப் பணி அலுவலராக கோபால் கிருஷ்ண மாதவ், கடந்த 2015ல் நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நள்ளிரவில் துணை முதல்வரின் சிறப்புப் பணி அலுவலர் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா, ”யார் லஞ்சம் பெற்றாலும் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ள இந்த கைது நடவடிக்கையால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *