புளோரிடா, மார்.1–
‘‘நான் புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை’’ என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் பொய்யானது என்று கூறிய அவர், அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் பிடன் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், தங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளதென்றும், அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளதாகவும்; புதிய அரசியல் கட்சியைத் துவக்கத் தேவையில்லை என்றும் கூறினார்.
2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும், ஜனநாயக கட்சியினரை மூன்றாவது முறையாக, அடுத்த தேர்தலில் தோற்கடிக்க தனக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்றும் டிரம்ப் கூறினார். அதைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள் கைதட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.
முன்னதாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், தோல்வியை தழுவினார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
90 நிமிட பேச்சில் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களை தாக்கினார். பிடனின் கொள்கைகளையும் அவர் சாடினார். ஜனநாயக கட்சியினரின் சட்ட விரோத செயல்களே தனது கட்சியின் தோல்விக்கு காரணம் என்று மீண்டும் குற்றஞ்சாட்டினார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள், தனக்கு விரோதமாக செயல்பட்டு விட்டார்கள் என்று ஆவேசமாகக் கூறியவர், அவர்கள் பெயரை வெளியிட்டார். அவர்களை நம்மிடமிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று மீண்டும் ஆவேசமாக சொன்னபோது கூட்டத்தினர் ஆரவாரம் செய்தார்கள்.