நாடும் நடப்பும்

குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினர் கிடையாது

உலக நாடுகளை தனது பரந்து விரிந்து அமைந்திருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் அச்சுறுத்தி வந்த இங்கிலாந்து கடந்த இரண்டு வாரங்களாக உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா தொற்று கிருமியினால் அஞ்சி நடுங்குகிறது.

ஐரோப்பிய நாடுகளும் ஆசிய கண்ட நாடுகளும் இங்கிலாந்துக்கு செல்பவர்களுக்கும் அங்கிருந்து வருபவர்களுக்கும் தடை விதித்துவிட்டது.

இந்த நிலையில் தான் தனது இந்தியப் பயணத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். இதை அவர் ஏற்றுக் கொண்டார்.

இதனிடையே பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தியா வருகையை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட போரிஸ் ஜான்சன், மீண்டும் பிரிட்டனில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்சமயம் தான் பிரிட்டனிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளை கவனிக்க வேண்டி இருப்பதால் இந்தியா வரமுடியாத நிலையையும் அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த முடிவு இந்திய தரப்பில் ராஜாங்க உறவு விவகாரங்களை உருவாக்கும் நிபுணர்களுக்கு வருத்தத்தைத் தரத்தான் செய்யும்.

இந்தியா வரும் ஒரு நாட்டின் தலைவர் நம்மிடம் நேசக்கரம் நீட்டுவதுடன் நம்முடைய உதவியும் தேவைப்படும் காலக்கட்டத்தில் வருபவரை நமது ராஜாங்க யுத்திகளுக்கு ஏற்றபடிவளைத்துக் கொள்ளலாம். அந்த வாய்ப்பு நழுவி விட்டது!

பிரிட்டன் இந்த ஆண்டின் துவக்கம் முதல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டது. அதாவது ஐரோப்பிய யூனியன் சட்டத்திட்டங்களுக்கு இனி கட்டுப்பட வேண்டியது கிடையாது. மேலும் அவர்கள் போடும் உத்தரவுகள், வர்த்தக கட்டுப்பாடுகள் ஏதும் இங்கிலாந்தை கட்டுப்படுத்தாது.

அதுபோன்றே ஐரோப்பிய யூனியன் நாடுகள் சிலவற்றை கொடுக்கக் கூடாது என்று தடை அறிவிக்கலாம் அல்லது அதிக வரிச் சுமையை நிலைப்படுத்தலாம்.

மேலும் பாதுகாப்பு விவகாரங்களிலும் பிரிட்டன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கூடவே சீன பொருட்களின் சரமாரி தாக்குதலும் ஏற்பட இருக்கிறது.

ஆகவே இங்கிலாந்துக்கு இந்தியாவின் மனித வள சக்தியைப் பெற விரும்புகிறது. மேலும் தங்களது திறன்மிகு ஆயுத தயாரிப்புகளை வாங்க இந்தியாவுடன் பேரம் பேச ஆரம்பித்துள்ளது.

ஆக குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இரு நாட்டு வளர்ச்சிக்கும் அவசியமான வர்த்தக ஒப்பந்தங்கள், விஞ்ஞான ஆய்வு பரிமாற்றங்கள், சுற்றுலா கூட்டு முயற்சிகள், கல்வித் துறையில் பங்கேற்பு போன்ற பல்வேறு முடிவுகளை எடுக்க களம் அமைய இருந்தது.

கோவிட் உருமாற்றம் வீரியம் குறைந்தது தான் என்றாலும் அதன் தாக்கீது நோயாளிகளுக்கு மிகப்பெரிய உபாதையாகும்.

இங்கிலாந்து பிரதமர் வருகையையொட்டி எப்படியும் பல ஆயிரம் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பலர் இங்கிலாந்து பிரதமர் வருவதற்கு முன்னர் பாதுகாப்பு நிலையை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள்.

இப்படி பலர் உரிய கட்டுப்பாடுகளுடன் தான் வருகிறார்களா? என்பன பல அச்சங்களை ஏற்படுத்த தான் செய்கிறது.

ஆக அவரது வருகை ரத்து முடிவு ஒரு வகையில் நல்லது தான்! அவரது முடிவை வரவேற்போம்.

பிரிட்டன் 2004–க்குப் பிறகு நம்முடன் வர்த்தக ஒப்பந்தங்கள் எதையும் செய்து கொள்ளவில்லை. அவர்கள் நாட்டு ‘யூரோ பைட்டர் ‘ விமானங்கள் விற்பனை நின்றும் விட்டது. காரணம் நாம் பிரான்ஸ் நாட்டு ”ரபேல்’ விமானங்களை வாங்கிவிட்டோம்.

சுதந்திர இந்தியாவில் நம் வர்த்தகம் புரிய அனுமதி வாங்குவது சாத்தியமில்லை என்ற அரசியல் நெருக்கடிகளை சீராக்க போரிஸ் வருகை இங்கிலாந்து தொழில்துறைக்கு எதிர்பார்ப்பைத் தந்தது. அவர்களின் எதிர்பார்ப்பு முழுமையாக தகர்ந்து விட்டது என்றும் சொல்லிவிட முடியாது. காரணம் தனது பயண தேதி தான் மாறி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை அவர் இந்த ஆண்டே ஜூலை மாத வாக்கில் வரலாம்.

அவரது வருகையை சீனா அச்சத்துடனே தான் பார்க்கக்கூடும்.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடன் புது நேசத்தை வெளியிட்டு வரும் இந்நிலையில் ஐ.நா. அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடான இங்கிலாந்து இந்தியாவுடன் நெருக்கம் காட்டுவது சீனாவிற்கு வர்த்தக ரீதியாகவும் உலக அரசியலிலும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அவற்றுடன் தற்போது தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் புது வேகத்தை பெற்றும் வருகிறது. குடியரசு தின நாளில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை நடத்தி மூவர்ண கொடியை ஏற்றிட ஒத்திகைகள் நடத்தியும் வருகிறார்கள்.

பிரிவினை யுத்திகளால் இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாலும் நம்மிடம் இருக்கும் ஒற்றுமையில்லாத தன்மையும் அரசியல் நோக்கங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக மாறியுள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

ஆக இம்முறை குடியரசு தினத்தன்று 1950–க்குப் பிறகு எந்த விசேஷம் விருந்தினரும் இந்த ஆண்டு இருக்க மாட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *