செய்திகள்

பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் வேளாண் தொழிலுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவாதம்

Spread the love

சென்னை, பிப். 12–

கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் அமையவுள்ள பெட்ரோகெமிக்கல் ஆலையால் விவசாயிகள், பொது மக்கள் என யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அரசு இ–-வலைதள சந்தையில் (ஜெம்) அதிக அளவில் ஈடுபட்டு பயன்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில் ‘ஜெம் சம்வாத்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பெஞ்சமின், தொழில்துறை செயலர் என்.முருகானந்தம், சிறு குறு தொழில்கள் துறை செயலர் ராஜேந்தர குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:–

இந்திய அளவில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 865 விற்பனையாளர்கள் மற்றும் சேவை புரிவோர் மூலம் 18 லட்சத்து 63 ஆயிரத்து 545 பொருள்களை இந்த ஜெம் போர்ட்டல் மூலம் அரசுத் துறைகள் கொள்முதல் செய்யலாம். இதுவரை இந்திய அளவில் ரூ. 45 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு ‘ஜெம் போர்ட்டல்’ மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

‘ஜெம் போர்ட்டல்’ மூலம் தமிழக அரசால் ரூ.892.19 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 985 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்து தங்கள் உற்பத்தி பொருள்களை, ரூ.311.38 கோடி அளவுக்கு விற்பனை செய்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 22 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. மேலும் பல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், அரசின் இ-வலைதள சந்தையில் ஈடுபட்டு அதிக அளவில் பயனடைய வேண்டும்.

இவ்வாறு எம்.சி.சம்பத் பேசினார்.

பா.பென்ஜமின்

ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் பேசுகையில், ‘அரசு இ–வலைதள சந்தையில் தமிழக அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அதிக அளவில் இச்சந்தையின் மூலம் பயனடைய வேண்டும் என்றார்.

தமிழகத்தில் உள்ள 50 லட்சம் சிறு, குறு, தொழில் நிறுவனங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3 ஆயிரம் நிறுவனங்களே இதில் பதிவு செய்துள்ளன. மற்றவர்களும் பதிவு செய்ய வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் கருத்தரங்கங்கள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இத்திட்டம் குறித்து அரசு இ -வலைதள சந்தையின் கூடுதல் தலைமை நிர்வாக அலுவலர் எச்.ஆர். ஷர்மா, துணை தலைமை நிர்வாக அலுவலர் ஏ.வி.முரளிதரன் ஆகியோர் தொழில் நிறுவனங்களுக்கும் அரசு துறை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் கணினி படக்காட்சி மூலம் எடுத்துரைத்தனர். மேலும், இக்கலந்துரையாடலின் போது விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களின் சிற்சில சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன. இக்கூட்டத்தில் தொழில் துறை செயலர் என். முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அனு ஜார்ஜ், நிதித் துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி, தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் டி.பி.ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் எடப்பாடியின் அமெரிக்க பயணத்தில்…

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:–

சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இதனால், வருமான வரி பிரச்சினை ஏதும் வராது. தொழித்துறை சார்பாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றபோது, ஹால்டியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தினர் அவரை சந்தித்தனர். அப்போது ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் கடலூரில் பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு மையம் அமைப்பதாக கூறியுள்ளனர். இதனால் வேளாண் மக்களுக்கும் விவசாயத்துக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது. 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 25 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *