செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பிருக்காது: கலெக்டர் பொன்னையா உறுதி

காஞ்சீபுரம், மார்ச் 23–-

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பும் இருக்காது என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் காஞ்சீபுரத்தில் அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சீபுரத்தில் வெளி மாநில மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றுவதால் இந்த மாவட்டம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு யார் வந்தாலும், வெளியில் சென்றாலும், கை கழுவும் திரவத்தைப் பயன்படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் தேவையில்லாத நபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் குறைந்த அளவு பணியாளர்களை வைத்து பணியாற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தால் உடனடியாக மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில் யாருக்காவது கொரோனா பாதிப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டால், காய்ச்சலை அளவிடும் கருவியைப் பயன்படுத்தி காய்ச்சலை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம்.

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரேனும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ தகவல் தெரிவித்தால், அவர்களது இடத்துக்கு மருத்துவக்குழு சென்று அவர்களை பரிசோதிக்கும். அவர்களுக்கு வீட்டிலேயே மருத்துவம் பார்க்கப்படும்.

பிளஸ்–1 தேர்வில் அனைத்து மாணவர்களும் கை கழுவும் திரவத்தைப் பயன்படுத்திய பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவர்கள் குழு அவர்களை கண்காணிக்கும். 31ம் தேதி வரை அதிகமாக கூட்டம் கூடக் கூடிய பெரும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் எந்த தடையும் இருக்காது. மக்கள் அச்சப்படத்தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *