சிறுகதை

வேற வழியே இல்லை | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

மாலை நான் ஆய்ந்து, ஓய்ந்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது ஜானகி அழுது கொண்டிருந்தாள்..

அவள் அழுவது எதனால் என்று விளங்காத மடையன் அல்ல நான்..என்ன செய்வது?

விதி வலியது..

“தர்மசங்கடமான நிலையில் நான் இருக்கேன் ஜானு”என்ற என்னை பார்த்து,

“இதெல்லாம் தேவையாங்க நமக்கு? ரோட்ல போற ஓணானை எடுத்து…… … நான் இப்படி சொல்றேன்னு… தப்பா எடுத்துக்காதீங்க ”

“இல்லை..கோபிச்சுக்க மாட்டேன்..இது ஒரு பாடம் எனக்குனு எடுத்துக்குவேன்..”

“விடுங்க..இன்னைக்கு கடன் வாங்காதவங்க யாரு?”

“என்னை கிண்டல் பண்றியா ஜானு?”

“ஐயயோ..இல்லவே இல்லைங்க.. உங்க நண்பர் என்ன சொல்றார்னுதான் கேட்கிறேன்?”

“எனக்கு அவன்கிட்ட கேட்கவே சங்கோஜமாயிருக்கு.. அதனால் கேட்கலை.. பற்றும் பற்றாக்குறையோட நம் காலம் தள்றோம்.. ஊம். தலைவிதி.

இன்னைக்கும் கடன் கொடுத்தவர் வீட்டுக்கு வந்தாரா என்ன?”

“பின்ன, வராமா எப்படிங்க இருப்பாராம்? நாம் என்ன சொல்லி கடன் வாங்கினோம்..ஒவ்வொரு மாசமும் 2/3 தேதிக்குள்ள அந்தந்த மாச தவணையை தவறாம உங்க வீட்டாண்டவே வந்து கொடுத்துடறம்னு தானே! … செய்யறோமா இப்பல்லாம்..? ஒரு மனுஷனுக்கு வாக்கு சுத்தம் வேணுங்க.? ஏங்க நம்ம நிலைமை இப்படி ஆயிருச்சு..கடங்காரங்க வீட்டு வாசல்ல வந்து நின்னு கத்தினா நம்ம மானம் போயிடாது!! ஆனா…ஆனா..நமக்கு அதிர்ஷ்டவசமா,

இதுவரையில் அப்படியொரு தர்மசங்கடமான நிலை ஏற்படலை..நாங்களே உங்க வீட்டில் கொண்டு வந்து தரமாட்டோமா சார்னு சொன்னதும் “மன்னிச்சுக்குங்கம்மா..உங்க குடும்பத்தை பற்றி அறியாதவனாம்மா நான்?ஆனா,

இப்ப இரண்டு மாசமா கொஞ்சம் பணக் கஷ்டம்.. அதான் வீட்டு வாசலுக்கே வந்து கேட்க வேண்டியிருக்கு.. சார் மனச்சங்கடப் படுவார். எனக்கும் தர்ம சங்கடமான நிலைமை இப்ப…  என் நிலைமையை அவராண்ட நீங்கதான் எடுத்துச்சொல்லி விளங்க வைக்கணும். தப்பா நினைச்சுக்காதீங்க மேடம்னு பவ்வியமாதான் சொல்லிட்டு போனார்..இதுவே இந்த இடத்தில் வேற ஒரு கடன்காரரா இருந்தா வீட்டு வாசல்ல வந்து நின்னு கத்தி நாற அடிச்சிருப்பார்..

ஆமாம் மாசா மாசம் கொடுக்கற உங்க அருமை நண்பர்கிட்ட நீங்க இன்னம் பணம் கேட்கலையா என்ன?..”

“அது..அதான்.. அவங்கிட்ட கேட்கவே தர்மசங்கடமாய் இருக்குனு சொன்னேனே ஜானு.. அவனா கொடுப்பான்.. பார்ப்போம்.. நம்ம நிலைமை அவனுக்கு விளங்கலைனு மட்டும் நீ நினைக்காதே என்ன?”

“விளங்கலை போலத்தான் இருக்கு. உங்க நண்பருக்கு அப்படியிருந்தா இன்நேரம் நாம சங்கடப்படக் கூடாதுனு கொடுத்திருப்பார்ல. நமக்கென்ன வந்தது? கடங்காரன் அவங்க வீட்டிலதானே போய் நிக்கப்போறான்.

எதையாச்சும் சொல்லி அவங்க சமாளிச்சுக்கட்டுமேன்ற .. இது ஒரு escapism..அதாவது தப்பிச்சுக்கிற மனோபாவம்..இவர் தங்கை கலியாணத்துக்கு பணம் பத்தலைனு தவிச்சப்ப நாமதானே ஒருத்தர் கிட்ட வட்டியும் அதிகமில்லாம, சுலப மாச தவணைகளில் கொடுக்கறாப்பல பணம் கடன் வாங்கி கொடுத்தோம்.

நாலைஞ்சு மாசங்கள் ஒழுங்கா பணம் கொடுத்தவர் இப்ப முதல் தேதியோ, இல்லைனா,இரண்டு,மூணு தேதிக்குள்ளாறவாவது அந்த மாதத் தவணையை கொடுக்கணும்ல..நாம கையை விட்டு கொடுத்துட்டு அப்புறம் அவர் கிட்ட பணத்தை வாங்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போயிடுது..கேட்டா இரண்டு நாட்கள்,

மூணு நாட்கள் பொறுத்துக்க மாட்டாங்களாக்கும்..வட்டிதான் ஒழுங்கா கொடுக்கறம்லனு எகத்தாளமா கேட்கிறார். மிகக்குறைஞ்ச வட்டிக்கு அதுவும் ஒரு சுப நிகழ்ச்சிக்கு உதவுங்கனு நான் இன்னொரு நண்பர்கிட்ட, கெஞ்சி,கூத்தாடி கடன் வாங்கிக் கொடுத்தா இவர் நடந்துக்கிற விதம் கொஞ்சமும் நல்லா இல்லை.

பாவம் கடன் கொடுத்தவரும் நம்ம முகத்துக்காக தயவு, தாட்சிண்ணியம் பார்க்கிறார்..எத்தனை நாட்கள்தான் இப்படி கடன் கொடுத்தவர், soft ஆக இருப்பார்? ஒருநாள் வீட்டு வாசல்ல வந்து நின்னு கத்த ஆரம்பிச்சா, நம்ம மானம் போயிடும்..இதை அவங்கிட்ட சொன்னப்ப அவன்..

உன் மூலமா நான் கடன் வாங்கினதே தப்பு..சே..எப்ப பார்த்தாலும் தொண, தொணத்துக்கிட்டு..நான் ஒண்ணு பண்றேன் இப்ப..ஒரு 5/6 post-dated cheque போட்டு கொடுத்துடறேன். அந்தந்த தேதியில பாங்கில போட்டு பணத்தை வாங்கிக்கனு முதல் தேதி சம்பளம் வாங்கியதுமே கொடுக்காதவன் எப்படி அப்புறம் கொடுப்பான்? இவன் என்ன பிசினஸா பண்றான். அன்னைக்கு பணம் புரட்ட?ஒருகால் பாங்கில போட்ட செக் பௌன்ஸானா அவன் மேல கேஸா போட முடியும்?

அவனா பாவ புண்ணியம் பார்த்து மாச தவணைகளை கொடுத்தா

கொடுக்கட்டும். இல்லைனா நம்ம வீட்டுப் பெண் கலியாணத்துக்கு நாம கடன் பட்டதா நினைச்சுக்கிட்டு போறேன்.. வேற என்ன வழி? சொல்லு”,

என்று நாங்கள் வீட்டில் பேசிகொண்டிருக்கையில் வாயிலில் வாட்ட, சாட்டமாய் ஒருவர் நின்றுகொண்டு என்னைப்பற்றி விசாரித்திட,அக்கம்,

பக்கம் உள்ளவர்களும் என் வீட்டை அடையாளம் காட்ட எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது..

இந்த ஆளை நான் பார்த்ததில்லையே இதுவரை? அவன் தோற்றம் எனக்கு அச்சத்தை கொடுத்தது..ஒருகால் எனக்கு கடன் கொடுத்தவர் என்னை மிரட்டி கடன் வசூல் செய்ய இப்படியொரு ஆளை அனுப்பியிருப்பாரோ? வங்கிகளில் மற்றும் சில நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி, மாத தவணையை ஒழுங்காய்

கட்டாதவர்கள் வீடுகளுக்கு இதுபோல் அடியாட்களை அனுப்பி மிரட்டுவது பற்றி செய்திகளில் படித்திருக்கிறேன்.

கடவுளை பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன வழி என்று வாயிற்கதவை அரைகுறையாய் திறந்துகொண்டு,

“நீங்க யார்? என்ன வேணும் உங்களுக்கு?

உங்களை முன்னப் பின்ன எங்கேயும் பார்த்த ஞாபகம் இல்லையே” என்றார். அந்தாள்.

“வந்தவங்களை உள்ளே வானு கூப்பிட மாட்டீங்களா?” என்றவரை பார்த்து ஒருவித நடுக்கத்துடனே,

“வாங்க உள்ளே..என்ன விஷயம்னு சுருக்கமா சொல்லுங்க..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..வெளியே போகணும்”என்றபோது,

“அப்ப எனக்கெல்லாம் வேலை எதுவுமில்லாம உங்ககிட்ட அரட்டையடிக்க வந்திருக்கேன்னு நினைக்கிறீங்களா? ஏன் உங்க உடம்பு இப்படி

தடதடக்குது? வியர்த்து ஊத்துது..கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்குங்க..எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுக்க முடியுமா?” என்றார்.,

அவரை அங்கேயே விட்டு விட்டு கிட்சனுக்கு போகவும் பயமாய் இருந்தது, எங்கே அந்த ஆள் என்னைப் பின் தொடர்ந்து உள்ளே வந்து கத்தியை

காட்டி வீட்டில் உள்ளதையெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு போய் விடுவானோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது..

இந்த சமயமாய் பார்த்து மனைவியும் மார்கெட்டுக்கு போய் இருக்கிறாள். ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்றெண்ணியவாறு உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.

சில நொடிகளுக்கு பிறகு வந்த அந்த ஆள், “நான் பாட்டுக்கு உங்க வீட்டுக்குள்ள தட தடனு வந்தேன்.. தண்ணீர் கேட்டேன்..இங்கே இத்தனை வீடுகள் இருக்கச்சொல்ல ஏன் உங்க வீட்டை குறி வச்சு நான் வரணும்னு நீங்க நினைக்கலாம். இனியும்

சஸ்பென்ஸ் வேணாம்.. உங்க நண்பருக்கு கடன் வாங்கிக் கொடுத்தீங்களே பெண் கலியாணத்துக்குனு. நான்அவரோட மாமனார்.என் மருமகன் என் கிட்ட பணம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன். அதுகூட யாருக்கு? என் மகளுக்குத்தானே! அனாவசிய ஈகோ அவருக்கு. இப்பத்தான் என் மகள் என் கிட்ட சொல்லி அழுதா.

அதாவது, நீங்க என் மருமகனுக்கு கடன் வாங்கிக் கொடுத்ததையும் ஆனா சொன்னபடி அவர் கடன் தவணைகளை மாசா,மாசம் கொடுக்காம, உங்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி நீங்க சிரமப்படறதையும் எங்கிட்ட சொன்னா. அதான் அவர்கிட்ட கூட சொல்லாம உங்ககிட்ட அவர் வாங்கின பணம் மொத்தத்தையும் நான் கொண்டு வந்திருக்கேன். தயவு பண்ணி நீங்க இந்த பணத்தை ஏத்துக்கணும்” என்றார்.

அந்தப் பணத்தை ஏத்துக்கிட்டேன்.

ஒரு சில நொடிகளில் என்னவெல்லாம் நினைத்து விட்டேன்?

என் செய்கைகளை நினைத்து எனக்கே பைத்தியக்காரத்தனமாய் தோன்றியது.

ஓ.. இந்த உலகில் நம்மைப்போல நிறைய நல்லவர்களும் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *