சென்னை, ஜன.8-
தமிழகத்தில் நேற்று 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 487 ஆண்கள், 318 பெண்கள் என மொத்தம் 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 210 பேரும், கோவையில் 78 பேரும், திருவள்ளூரில் 48 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 3 பேரும், சிவகங்கையில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், விழுப்புரத்தில் புதிய பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 23 ஆயிரத்து 986 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 12 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் தமிழகத்தில் 12,200 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 911 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 4,239 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 7 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த மாதம் டிசம்பர் 23-ந்தேதி வரை தமிழகம் வந்த 2 ஆயிரத்து 300 பேரில், 2,146 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2,122 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 253 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்து கொரோனா பாதிப்பு இல்லாத 2,122 பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டு வந்த பயணிகளுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.