செய்திகள்

அண்ணா தி.மு.க. – அமமுக இணைப்புக்கு வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் பேட்டி

சசிகலா வருகையால் கட்சி, ஆட்சியில் எந்த பாதிப்பும் ஏற்படாது

சென்னை, ஜன.18-

சசிகலா வெளியே வருவதால் அண்ணா தி.மு.க. கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ரெயில் நிலையத்துக்கு சிறப்பு விரைவு ரயிலை பிரதமர் மோடி காணொலியில் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். அண்ணா தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 8 ரெயில்களையும் ஒரே நேரத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்ததும், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்த அனைவரும் பச்சை கொடி அசைத்து சென்னை – -கெவாடியா ரெயிலை வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–-

குடும்ப ஆதிக்கம் தலைதூக்கக் கூடாது என்று பாடுபட்டவர் எம்ஜிஆர். அவரது பிறந்த நாளில், புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் ஆட்சியிலும், கட்சியிலும், தமிழகத்திலும் எந்த அதிர்வலையும், எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. அவரும், அவரது குடும்பமும் இல்லாத நிலையில் இன்றைக்கு கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் கட்சியும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்பதுதான் கட்சியில் உள்ள 1½ கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது.

மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி

அதேநேரம் அவர்கள் ஒரு மாயையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு கானல் நீராகத்தான் இருக்கும். இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்போம். அண்ணா தி.மு.க.வில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார். அவர் ஒரு கருத்தை கூறியுள்ளார். ஆனால் அது நடக்காத விஷயம். அ.ம.மு.க.வை நாங்கள் ஒரு கட்சியாகவே பார்க்கவில்லை.

இந்த சூழ்நிலையில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சசிகலாவை சந்திக்கக்கூடாது என்று யாருக்கும் நாங்கள் தடை போடவில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் குழந்தைகள் அல்ல. கட்சி விரோத நடவடிக்கையில் யாராவது இறங்கினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. அண்ணா தி.மு.க. உண்மை தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *