சிறுகதை

நிவாரணம் | புதுகை கார்த்திக்

அன்று ஞாயிறு மாலை ஐந்து மணியிருக்கும்.

என்ன மதி! டைப் ரைட்டிங் கிளாசுக்குப் போயிட்டு வரும்போது சாந்தி ஜூவல்லர்ஸ்ல நகைச் சீட்டு தவணை கட்டிட்டியா? என்றான் கதிரவன் மடிக்கணினியில் டைப்பிங் செய்தவாறு தனது மனைவி மதிவதனி என்கிற மதியிடம்.

கட்டிட்டேங்க இது மூணாவது சீட்டு

சரி! இன்னக்கி யாரு லக்கி வின்னர்? என்றான் கதிரவன் மதிவதனியிடம்.

மச்சுவாடியில இருக்குற மாலினிங்கிறவங்களுக்கு கெடைச்சுருக்குங்க என்றாள்.

பரவாயில்ல. என்ன ஒன்னோட குலதெய்வம் உனக்கு ஹெல்ப் பண்ணலையா? என்று கிண்டலுடன் சிரித்தான் கதிரவன்.

அடப்போங்கங்க. மாலினியோட குலதெய்வம் இந்த மாசம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கு. எனக்கு வர்ற மாசங்கள்ல நிச்சயம் ஹெல்ப் பண்ணும். கிண்டல்லாம் பண்ணாதீங்க சாமி விசயத்துல. ஏங்க .. சாப்பிட கொஞ்சம் மிக்சர் கொண்டு வரவா?

வேண்டாம் மதி. லேசா தலைவலிக்கிற மாதிரி இருக்கு. அதனால தேநீர் மட்டும் போதும் என்றான்.

சரிங்க என்ற மதிவதனி அடுக்களை நோக்கி சென்றாள்.

கதிரவனோ மீண்டும் தனது மடிக்கணினியில் இன்டர்நெட்டில் குயிகர் டாட் காம் -ல் ஆன்லைன் டைப்பிங் ஜாப்புக்கு அப்ளை செய்து கொண்டிருந்தான்.

மதிவதனி கதிரவனிடம்,‘‘ என்னங்க ஆன்லைன் ஜாப் டேட்டா எண்ட்ரி ஜாப்க்கு அப்ளை பண்றீங்களா?’’ என தேநீரை கொண்டு வந்து வைத்தவாறே கேட்டாள்.

ஆமாம் என்ற கதிரவன் அப்ளை செய்து பார்ப்போம். நம்ம வருமானம் குறைவா இருக்குல்ல. நம்ம வாங்குன ஏசி கடனை ஓரளவாவது அடைக்க இந்த பார்ட் டைம் டேட்டா எண்ட்ரி வேலையை செய்வோம். பணம் வர்ற படி வரட்டும். பார்த்துக் கொள்வோம் என்றான்.

சில நாட்கள் கழித்து சென்னையிலிருக்கும் தனது நண்பன் இனியவனுக்கு போன் செய்து ஆன்லைன் டேட்டா எண்ட்ரி ஜாப் பற்றி விசாரித்தான்.

இனியவனும் அப்ளை பண்ணுடா நல்ல ஜாப்தான் வருமானம் கிடைக்கும். ஆனால் தொகை செலுத்த வேண்டியிருந்தால் அப்ளை பண்ணாதே என்றான் அறிவுரையுடன்.

ஒரு சில நாட்கள் கழித்து குயிகர்.காம் -ல் இருந்து நிர்மல் பேசுறேன். உங்க பயோடேட்டா பார்த்தோம். உங்களை எங்க டேட்டா எண்ட்ரி கம்பெனியில செலக்ட் பண்ணியிருக்கோம் என்ன வொர்க்ன்னா நாங்க 200 இமேஜஸ் பிடிஎவ் பைலை மெயில் அனுப்புவோம். அதை நீங்க எம்.எஸ் வோர்டில் டைப் செய்து இம்மாத இறுதிக்குள் எங்களுக்கு இமெயில் அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்பனும். உங்களுக்கு ஒரு அக்கவுன்ட் நம்பர் தருவோம். அதுல நீங்க சேலரி எடுத்துக்கலாம் என்றார் அந்நிறுவன ஊழியர்.

கதிரவன் அந்நிறுவன ஊழியரிடம் தனது சந்தேகத்தை தௌிவுபடுத்திக்கொள்ள பணம் கட்ட வேண்டியிருக்குமா சார்? ஏனென்றால் பணம் கட்டி ப்ராஜெக்ட் செய்ய எங்களிடம் போதுமான வருமானம் கிடையாது என்பதை தௌிவாக எடுத்துக் கூறினான். அதற்கு அந்நிறுவன ஊழியரோ இல்ல சார் பணம் கட்டத் தேவையில்ல. நீங்கள் ப்ராஜெக்டை டைப் செய்து வாட்ஸ் அப் அல்லது இ-மெயிலில் அனுப்பினா மட்டும் போதும் என்றார் நம்பிக்கையுட்டும் விதமாய்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவனது கல்லூரி தோழியான விமலாவும் ஆன் லைன் ஜாப் அப்ளை செய்திருந்தாள்.

ஆகவே கதிரவனும் அவனது தோழி விமலாவும் ஒருமனதாய் ப்ராஜெக்டை டைப் செய்ய முடிவு செய்து இரவு பகல் பாராது 200 பக்கங்களையும் ஆளுக்கு பாதியாக சேர் செய்து எம்.எஸ்.வோர்டில் டைப் செய்து முடித்தனர்.

கதிரவன் நிறுவன ஊழியர் நிர்மலிடம் தொடர்புகொண்டு வேலை முடிந்து விட்டது சார் அதை நான் அனுப்பி வைக்கலாமா என்றான். நிறுவன ஊழியர் நிர்மலோ கிறிஸ்துமஸ் வருது அதனால எங்களுக்கு ப்ராஜெக்டை சீக்கிரம் அனுப்புங்க. எங்களுக்கு விடுமுறை வந்துடும்.. அப்பதான் உங்களுக்கு சேலரி போட முடியும் என்றார்.

கதிரவனும் அந்நிறுவனத்திற்கு தனது ப்ராஜெக்டை இமெயில் அனுப்பிவிட்டான்.

சில நிமிடங்கள் கழித்து நிறுவன ஊழியர் நிர்மலுக்கு கதிரவன் போனில் தொடர்பு கொண்டு ப்ராஜெக்டை அனுப்பிட்டேன் சார் என்றான். நிறுவன ஊழியர் நிர்மல் நாங்க ப்ராஜெக்டை சரி பாத்து வேல்யு செய்துவிட்டு உங்களுக்கு சேலரி அனுப்புறோம் என்று பதிலளித்தார்.

ஒரு சில நாட்கள் கழித்து கதிரவன் நிறுவன ஊழியர் நிர்மலை தொடர்பு கொண்டபோது நிர்மலோ நான் மாற்றப்பட்டு விட்டேன். நீங்கள் நிமலியை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார்.

கதிரவன் நிமலியை தொடர்பு கொண்டபோது நீங்கள் ரூ.1500-ஐ கூகுள் பே அல்லது பேடிஎம் -ல் போட்டு விடுங்க. நாங்கள் எட்டு மணி நேரத்துல உங்க ப்ராஜெக்டுக்குரிய ரூ.6000 த்தை போட்டு விடுறோம் என்றாள் லாவகமாக ஏமாற்றும் எண்ணத்தில்.

கதிரவன் மீண்டும் சென்னையிலிருக்கும் தன் நண்பன் இனியவனுக்கு கால் செய்து விசயத்தை கூறி அபிப்ராயம் கேட்டான். இனியவனும் தனது நண்பரிடம் விசாரிச்சுட்டு சொல்றேன்டா என்றான்.

சில நாட்கள் கழித்து இனியவன் கதிரவனை செல்போனில் அழைத்தான். கதிரவன் செல்போன் பச்சை பட்டனை இழுத்துவிட்டு ஹலோ சொல்லுடா இனியவா என்றான்.

விசாரிச்சுடேன்டா கதிரவா. அது மோசடி நிறுவனம். பணம் கட்டச் சொல்வாங்க . ஆனால் பேமென்ட் தரமாட்டாங்க .அதனால பணம் கட்டி ஏமாந்துறாதே என்று எச்சரித்தான்.

கதிரவனும் புராக்ஜெக்ட் முடிந்து பணம் வரும் நாம் ஏசி கடனை ஓரளவாவது அடைச்சுடலாம் என்று நினைத்தவன் லேசான வருத்தத்துடன் சரிடா என்றான்.

தனது தோழி விமலாவிற்கும் கதிரவன் அட்வைஸ் செய்யும் எண்ணத்துடன் பணம் கட்டி ஏமாந்துடாதீங்க வேண்டாம் பார்த்துக்கலாம் என்றான்.

கதிரவன் மீண்டும் சில நாட்கள் கழித்து நிறுவன பெண் ஊழியர் நிமலிக்கு தொடர்பு கொண்டு பேமண்ட் எப்ப வரும் என கேட்டதற்கு அப்பெண் ஊழியரோ நீங்கள் ஒரு 1000 ரூபாயாவது பணம் கட்டுங்க. அப்படி கட்டலைனா உங்களுக்கு 15 நாள் கழித்து பேமண்ட் வரும். ஆனா அதுக்கு நீங்க பதினைஞ்சாயிரம் கட்டனும் என்றாள் அப்பெண் ஊழியர்.

அதற்கு கதிரவனோ மறுத்து விட்டான். எனக்கு உங்க பேமண்ட்டும் வேணாம் ; நான் பணமும் கட்ட மாட்டேன். மீண்டும் பணம் கட்டியும் நான் ஏமாற தயாரில்லை என்றான் விழித்து கொண்டவனாய்.

தனது தோழியான விமலாவோ அவளது அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் கூகுள் பேயில் பணம் போட்டு விடுங்க என்றார். இவளும் கூகுள் பேயில் பணத்தை போட்டு விட்டு அதிகாரியைத் தொடர்பு கொண்ட போது நாங்க உங்க புராஜெக்டுக்குரிய பேமென்டை எட்டு மணி நேரத்துக்குள்ள அனுப்பிடுவோம் என்றார்

ஆனால் சில நாட்கள் கழிந்த நிலையில்

கதிரவனும் விமலாவும் சேர்ந்து டைப் செய்த புராஜெக்டுக்குரிய பேமென்ட் இன்னும் வந்து சேரல இதன் மூலம் ஆன் லைன் ஜாப் மோசடியை தங்களது அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டனர்.

இது நடந்து சில மாதங்களான நிலையில் ஆன்லைன் மோசடியினை கிட்டத்தட்ட கதிரவன் மறந்து போய் விட்டிருந்த நிலையில்

அன்று கதிரவன் வேலை முடிந்து மாலை ஐந்து மணியைப் போல வீட்டிற்கு வந்தபோது வாசல் கிரில்கேட்டைப் பிடித்தபடியே அவனை எதிர்பார்த்து நின்றிருந்தாள் மனைவி மதிவதனி.

என்னாச்சு மதி மொகத்துல சந்தோசம் தாண்டவமாடுது ் உங்கம்மா எதுவும் வர்றேன்னாங்களா?

இல்லங்க. இந்த மாச நகை குலுக்கல் சீட்டு நமக்கு விழுந்துருச்சிங்க. இனி வரப்போற 16 மாசமும் பணம் கட்ட வேண்டியது இல்லங்க என்ற மதிவதனியின் முகம் முழுமதியாய் ஜொலித்தது.

பரவால்ல. உன்னோட குலதெய்வம் கருப்பணசாமி மனசு எறங்கிட்டாரு. நம்ம ஆன்லைன் நட்டத்துக்கு மேல ரெண்டாயிரம் கிடைக்கும். அது நம்ம மனசு வலிக்கு நிவாரண நிதி போல . என்னிக்கும் உழைப்பு வீண் போகாது; எப்படியாவது உழைப்பாளிக்குக் கிடைச்சிடும் என்ற கதிரவன் முகமலர்ச்சியுடன் முன்னே செல்ல, மதிவதனி மனதில் துள்ளலுடன் கணவனைப் பின்தொடர்ந்தாள்.

நமது வாழ்க்கையில வருமான நட்டம் ஏற்படலாம் உழைப்பு சுரண்டப்படலாம். ஆனால் எதிர்பாராத சில வரவுகள் அதை ஈடு செய்யும் என்கிற நம்பிக்கையே நம்மை வாழ வைக்கும் என்று எப்போதோ படித்தது கதிரவன் நினைவிற்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *