நாடும் நடப்பும்

நிதிஷ், பஸ்வான் கூட்டணி சிக்கல்: பீகார் தேர்தல் சூடு பிடிக்கிறது

ஒருபக்கம் சமூக விலகலை அறிவுரை செய்து வரும் மத்திய அரசு, பீகாரில் சட்டமன்ற தேர்தலை அறிவித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தால் மூன்று கட்ட தேர்தல் தேதியை அறிவித்து விட்டது. அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7–ம் தேதி என 3 நாட்களில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், தற்போது ஆட்சியிலிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா ஏற்படுத்திய கூட்டணி தொடரும் என்று கூறி வந்தாலும் உடன் இருக்கும் இதர கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருவதை பார்த்தால் கூட்டணி அமைவதில் சிக்கல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில் சிக்கல் இல்லை. காரணம் அவரது ஆட்சி திறனால் பீகார் மக்கள் திருப்தி அடைந்து இருப்பதை கூட்டணியில் உள்ள கட்சியினர் புரிந்து கொண்டு விட்டனர். ஆனால் கூடுதல் இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை பலரிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக லோக் ஜனதாதளம் சென்றமுறை கொடுத்ததை விட அதிக தொகுதிகள் வேண்டும் என்று கெடுபிடி செய்து வருவது பாரதீய ஜனதா தலைவர்களுக்கும் தலைவலியாய் மாறி வருகிறது.

நேற்று பாரதீய ஜனதாவும் எங்களோடு கூட்டணிக்கு வர தயாரா? என்றே லோக் ஜனதா கட்சியினர் கேட்டும் உள்ளனர்.

கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சியை ஓரம் கட்டினால் அக்கட்சியின் தலைவர் தற்போது மத்திய அமைச்சராகவும் இருக்கும் ராம்விலாஸ் பஸ்வான் கோபித்துக் கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறி விடுவாரோ? என்ற அச்சக்கேள்வி எழுந்துள்ளது.

பஸ்வானுக்கு தனது மகன் சிராக் மாநிலத்தில் ஒரு முக்கிய தலைவராக உயர வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார். சிராக் வளர்ச்சியை நிதிஷ்குமார் விரும்பப் போவதுமில்லை!

நிதிஷ்குமாரின் மகன் நிசாந்த்குமார் பிரதமரை ‘மாமா’ என்று அன்போடு குறிப்பிட்டு தான் பொது மேடைகளில் பேசி வருகிறார். இவர் பீகார் என்.ஐ.டி.யில் படித்த பொறியியல் பட்டதாரி ஆவார். தந்தையை விட ஐந்து மடங்கு பணக்காரர் என்று அவரது வருமானவரி கணக்குகள் கூறுகிறது.

தந்தை 15 வருடங்களாக ராஷ்டிரிய ஜனதா தளத்தையும் அதன் தலைவர் பிரபல அரசியல்வாதியுமான லல்லு பிரசாத் யாதவையும் வீழ்த்திய ஜாம்பவன் ஆவார். அதை மனதில் கொண்டு வாரிசு அரசியல் என்று இல்லாமல் தானே ஒரு நல்ல ஆட்சியாளராக உயரும் வாய்ப்பு அவருக்கு இருக்கும் நிலையில் அரசியல் பிரவேசம் ஒரு நாள் நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, ராம்விலாஸ் பஸ்வானின் கோரிக்கை அதிக தொகுதி ஒதுக்கீடு என்பதுடன் தன் மகன் சிராக் பஸ்வானின் அரசியல் வளர்ச்சியும் உள்ளே அடங்கி இருப்பதால் நிதிஷ் சற்றே தயக்கம் காட்டுவது புரிகிறது.

ஆகவே நிதிஷ் ஏற்படுத்திய மகா கூட்டணியின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் வருங்கால அரசியல் பாதையில் உள்ள பல்வேறு விவரங்கள் அடங்கியும் இருக்கிறது.

நிதீஷ் நடத்திய நல்லாட்சிக்கு நல்ல உதாரணங்கள் அங்குள்ள சாலைகள், தடையில்லா மின்சார சப்ளை ஆகும். ஆனால் அவருக்கு வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணம் மது சாராயத்தை ஒழித்தது. அவரது தீவிர மதுக்கடைகள் மூடல் பாமரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால் ஒரு சாரர் மீண்டும் லல்லு பிரசாத் குடும்பத்தையும் அவரது கட்சிக்கும் ஆதரவு தரத் தயாராகிவிட்டனர்.

மொத்தத்தில் சராக் பஸ்வானுக்கும் நிசாந்த் குமாருக்கும் நேரடி குஸ்திக்கு மேடை தயாராகி விட்டது புரிகிறது!

இப்படி பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பீகார் மாநில தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி லல்லு பிரசாத்தை கைவிடாது என்றும் உறுதியாக சொல்ல முடியாது!

ஆக அரசியல் தெளிவு வர காலதாமதம் ஆனாலும் வேட்பாளர் மனுத்தாக்கல் துவங்கும் நாள் நெருங்கிவிட்டது

இச்சிக்கல்களுடன் தேர்தல் பிரச்சாரத்தை எப்படி நடத்துவது? என்ற கேள்விக்கும் அங்குள்ள பிரபல கட்சிகள் ஆலோசித்து வருகிறது.

நிதிஷ் தற்போது தொடர்ந்து 3 வது முறையாக முதல்வர் பதவிக்கு களமிறங்குகிறார். எதிர்ப்பு அலை என்று ஏதுமில்லை என்றாலும் ஆட்சிக்கு எதிர்ப்பு, Anti Incumbency புயலாய் உருவெடுக்கும் சூழலை சமாளித்தாக வேண்டும்.

பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி முதலியய தலைவர்கள் சமூக விலகலை தாண்டி, களம் இறங்கினால் தான் இந்த எதிர்ப்பு அலையை நிதிஷ் கட்சி சமாளித்து மீண்டும் வெற்றி வாகை சூட முடியும்.

இவை எல்லாம் ஒருபுறமிருக்க தேர்தல் ஆணையம் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க தேர்தலை உரிய நேரத்தில் நடத்திட உறுதியாக செயல்படுவதும் புரிகிறது.

கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு வருகிறது, ஆனால் நிலைமையைப் புரிந்து கொண்டு திறமையாக தேர்தலை நடத்த வியூகம் அமைத்து விட்டனர்.

இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நீடிக்கும்.

வழக்கமாக 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படும். பிஹார் தேர் தலில் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப் படுகிறது. 3 கட்ட தேர்தலின்போது 46 லட்சம் முகக்கவசங்கள், 7.6 லட்சம் முகத் தடுப்புகள், 23 லட்சம் கையுறைகள், 6 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் பயன்படுத்தப்படும். தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *