செய்திகள் வாழ்வியல்

வேகம், விவேகம், ஞானம்: நித்யஸ்ரீயின் வீணா கானம்!

வசந்த வாழ்வின் வாசல் திறக்கும்

வேகம், விவேகம், ஞானம்: நித்யஸ்ரீயின் வீணா கானம்!

‘அது ஒரு பொன்மாலைப்பொழுது’ என்று சந்தோஷக் குரல் எழுப்பி, ஆனந்தமாய் நடைபோட வைத்த இசை நிகழ்ச்சி…

மீண்டும் அந்த இசை அரங்கேறும் நாள் பார்த்து காத்திருக்க வேண்டும் என்று மனசை துள்ள வைத்த இசை நிகழ்ச்சி …

அது டாக்டர் நித்யஸ்ரீயின் வீணை இசை விருந்து என்று வாய் மணக்கச் சொல்லலாம்.

பி.என். முரளீதரன் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி வரும் கலை கலாச்சார அமைப்பு ‘சுஸ்வரா’. இதன் சார்பில் டாக்டர் நித்யஸ்ரீயின் வீணை இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம், மணித்துளிகள் கரைந்ததே தெரியாத விதத்தில். இசையில் (மெய்) மறக்கச் செய்தார் என்பதே மெய்.

இசையில் இன்றைய தேதியில் முதுநிலை மட்டுமல்ல முதல்நிலை கலைஞர்களாகவும் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கும் பி.சிவராமனும் (மிருதங்கம்), குரு பிரசாத்தும் (கடம்) நித்யஸ்ரீக்கு வாய்த்தது, பால் பாயசத்தில் முந்திரியும், திராட்சையும் இணைந்த சுவையாய் இதயம் தொட்டது.

நித்யஸ்ரீயின் வீணை விரல்களுக்கு அனுசரணையாய் அமைந்து, ஒரு பிடி மேலே தூக்கி உயர்த்தி, ‘தம்ப்ஸ் அப்’ காட்ட வைத்தது, சிவராமன் குருபிரசாத்தின் வித்தையை, வித்வத்தைப் பேசிய விரல்கள்.

கம்பீரமான இசைக் கருவி வீணையை பயபக்தி பவ்யமாய் கையில் எடுத்து, நடு நாயகமாக அமர்ந்த நிலையில் இருந்த டாக்டர் நித்யஸ்ரீ சாந்த சொரூபி. ஸ்வரம் கூட்டி வீணையை வாசித்த அந்த 110 நிமிடத்தில்… தனி ஆவர்த்தனம் வந்தபோது தான்… அவரது உடல் அசைவை உணர முடிந்தது. அவரின் கைத்தாளமிட்டது. கால் விரல்கள் தரையை முத்தமிட்டது. தலை லேசாக இங்குமங்கும் நகர்ந்தது. முகத்தில் புன்னகை ரேகையும் ஓடியது.

அதற்கு முன்னால்… வீணையில் சஹானா வர்ணத்தில் துவங்கி, 9வது அயிட்டமான காஞ்சி சங்கரமடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது இயற்றிய பீலு ராகத்தில் அமைந்த ‘பஜரே குருனாதம்…’ வரை வீணை மீதும், அதன் தந்திக் கம்பிகள் மீதும், விரைந்தோடிய விரல்கள் மீதும் பதித்த பார்வையை லேசில் நகர்த்தவில்லை நித்யஸ்ரீ.

(நடமாடும் தெய்வமாய்த் திகழ்ந்த காஞ்சி பரமாச்சார்யாரின் (ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்) கனகாபிஷேக நிகழ்ச்சியில் அந்நாள் இளையவர் ஸ்ரீ ஜெயேந்திரர், தானே இயற்றி, பரமாச்சார்யாருக்கு குரு வந்தனமாக்கியது என்ற பெருமைக்குரிய பாடல்)

பக்கவாட்டில் தலை சாய்த்து, சுகமான இசையில் பக்க வாத்யக் கலைஞர்களின் ‘அனுசரணை’ தாளம் சங்கமிக்க நிகழ்ச்சியை நடத்திய விதம் அதை நிறுத்திய விதம், ஆஹா அபாரம்!


எம்.எஸ். அம்மா இசை:

மனசைப் பறிகொடுப்பேன் வீணையில் கர்னாடக இசை தவிர பிற இசைகள் வாசித்ததில்லை. இசைத்துறையில் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மி என்னை மிகவும் கவர்ந்தவர். சிறந்த இசைக்கலைஞனராக மட்டுமின்றி மனித நேயத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்தவர். வீணை இசையில் பிடித்தவர் ரங்கநாயகி ராஜகோபாலன். அவரின் வாசிப்பில் அழுத்தமும் பிடிகளும் மனதைக் கவரும். வீணை பாலசந்தர், சிட்டிபாபு, ராஜேஷ் வைத்யா, காயத்ரி அனைவருமே பெரும் மேதைகள். வணக்கத்துக்குரியவர்கள். இந்த இசைக்கருவியைக் கையாள்வதில் அவர்கள் கொண்ட மேலான்மை வியக்கத்தக்கது. ஆர்வத்தைத் தூண்டுவது. மேலும் சிறப்புற இசை பயின்று, வீணை இசைத்து, இந்த கலையினால் ஏற்படும் இன்பத்தினை பிறரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ஆசை.


பிறந்தது, வளர்ந்தது, பெற்றோர்கள்

சென்னையில் பிறந்தவர். தந்தை ஸ்ரீநிவாசன், தேசிய சிறுதொழில்கள் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றியவர். தாய் சாருகேசி இல்லத்தரசி. இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். சிறுவயதில் தந்தையின் வேலை நிமித்தமாக திண்டுக்கல்லில் கல்விகற்கத் துவங்கி பின்னர் சென்னை வாசியாக இருப்பவர்.

வீணையை இசைக்கக் கற்றுக்கொடுத்தவர் கல்யாணி கணேசன் தான். சென்னை அடையாறு அரசு இசைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியில் ஏ- டாப் மதிப்பீடு பெற்றவர். அவரோடு பல கச்சேரிகளுக்கும், வானொலி ஒலிப்பதிவுகளுக்கும் சென்றது இசையின் ஆழத்தை அறிய உதவியது. மேலும் கற்று சிறப்புற வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவித்தது.

அதுவே சென்னை பல்கலை கழகத்தின் இசைத்துறையில் பயின்று முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெறவும் வழி வகுத்தது.

தற்போது வயலின் இசை மேதை எஸ். டி. ஸ்ரீதரனிடம் இசை நுணுக்கங்களைப் பயின்று வருகின்றார்.

வி.டி.எஸ். ஆர்ட்ஸ் அகாடமி என்ற நிறுவனம் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மாதம்தோறும் கச்சேரிகளை ஏற்பாடு செய்து வருகின்றது. அதில் வாசித்ததே முதல் கச்சேரி. பிரபல திரைப்பட கலை வடிவமைப்பாளர் தோட்டாதரணியின் மனைவி சாரதா அக்கச்சேரிக்குத் தலைமை வகித்தார். ஒரு முழுமையான சபை கச்சேரி என இசைத்தது சென்னை ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் மார்கழி இசை விழாவில் தான். அதன் நிறுவனர் முரளீதரன் எனது இசைப்பயனத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பவர். இன்றளவிலும் பல விதங்களில் என்னை ஊக்குவித்து வருபவர்.

இதுவரை சுமார் 500 கச்சேரிகள் இசைத்துள்ளார். பல கச்சேரிகள் இசைத்தாலும் ஆண்டுதோறும் திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனையில் இசைப்பது மனதை நெகிழ்விப்பதாக இருக்கும். மேலும் எனது குருநாதர் வந்து கேட்கும் கச்சேரிகள் மறக்கமுடியாதவை.

முதன் முதலில் பெற்ற விருது கலா விபஞ்சி என்பது. இசைமேதை டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணாவின் கரங்களில் பெற்ற அந்த விருது மிகவும் பெருமை வாய்ந்தது. பின்னர் ட்ரினிட்டி ஆர்ட்ஸ் நிறுவனத்தில் (மக்கள் குரல் நடத்தும் இசை விழா) இசைச்செம்மல் என்ற விருதும் சுஸ்வரா நிறுவனத்தின் யுவ சங்கீத கலா ஜோதி என்ற விருதும் வழங்கப்பட்டது.


‘நவரச’ பாடல்கள்

1. சஹானா வர்ணம் 2. கம் கனபதிம் – கணபதி – (பாலமுரளி கிருஷ்ணா) 3. ஆனந்த நடன ப்ரகாசம் – (கேதாரம்) – தீக்‌ஷிதர் 4. மனபொய்கை – (கீரவாணி) – பி என் முரளிதரன் 5. மாரவைரி ரமணி – (நாசிகாபூஷனி) – தியாகராஜர் 6. கேலதி மம ஹ்ருதயே – (அடாணா) – சதாசிவ ப்ரம்மேந்த்திரர் 7. கபாலி – (மோஹனம்) – பாபநாசம் சிவன் 8. கற்பூரம் நாறுமோ – (கமாஸ்) – ஆண்டாள் 9. பஜரே குருனாதம் – பீலு – ஜயேந்திர சரஸ்வதிகள் (கீர்வாணி) பாலமுரளியின்

கீர்த்தனையில்…

* இசையில் ஒரு ‘பிதாமகர்’ என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மேதை என்றும் நினைவில் வாழும் பாலமுரளிகிருஷ்ணா. இவர் இயற்றிய ‘கம்… கணபதிம்… கணபதி…’ பாடல் ‘மாஸ்டர் பீஸ்’. 7 ஸ்வரங்களில் ‘ச ம ப…’ என்ற 3 ஸ்வரத்தில் மட்டும் இயற்றிய பாடலை நித்யஸ்ரீ வீணையில் வாசித்தது அருமை!

* தமிழ்த் ‘தியாகய்யர்’ என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மேதை என்றும் நினைவில் வாழ்பவர் பாபநாசம் சிவன். அவர் வாழ்ந்து மறைந்த மயிலையில் வீற்றிருக்கும் கபாலீசுவரர் மீது அவர் இயற்றிய ‘கபாலீ’… என்னும் பாடலை நித்யஸ்ரீ வாசித்தது, காலத்தே அவரின் பதிவு மிகவும் பொருத்தம், பெருமைக்குரியது. பாபநாசம் சிவனின் 130வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த ஆண்டில் மகள் டாக்டர் ருக்மணி ரமணி, பேரன் அசோக் ரமணி வழியில்… குரலிசையில் இவர்கள் என்றால் விரலிசையில் நித்யாஸ்ரீ, அருமையான இசையஞ்சலி.

* இசை நிகழ்ச்சியில் முத்தாய்ப்பு என்று முகம் மலர வைத்தது, முன் வரிசை பார்வையாளர்களை புளகாங்கிதத்தில் தாளம் போட்டு ரசிக்க வைத்தது, ஆஹா… என்னமாய் எளிமை வரிகள்… என்று சுகானுபவத்தில் பாராட்ட வைத்தது என்றால் அது நான்காவது பாடலாய் ஒலித்த ‘மனப் பொய்கையிலே வாழும்… என்று அடி எடுத்த பாடல்.

எழுதுகோல் பிடிக்கும் இயற்றமிழ் கலைஞனுக்கு சில வார்த்தைகள் ‘வா என்னைப்பிடி’ என்று வலுவில் வந்து விழும். அவனது பக்தி சிரத்தைக்கு சில வார்த்தைகள் கொஞ்சி எழும் என்று சொல்லக் கூடிய இடத்தில் வளர்ந்து வரும் ‘பாடல் வல்லான்’ பி.என். முரளீதரனின் ஆக்கத்தில் உருவான பாடல் மனப்பொய்கையிலே வாழும் மாணிக்க வீணை ஏந்தும் மாதங்கியே…!’ இது பல்லவி.

தினமும் கண்முன் நிற்கின்றாய், கலைக்கல்வியின் கற்பகத் தருவாய் இது அனுபல்லவி:

அறிவைத் தரவல்ல வேதனூலை- யேந்தும் அம்ஸ வாகினியே;

நெறிதனைக் குறிக்கும் ஜபமாலை- யேந்தும் ஞான ரூபினியே;

உறுதிமிகு மனந்தரு நீர்குடம்- யேந்தும் வனிதா மணியே;

அறியஸ்ருதி லய யாழினை- யேந்தும் பரிபூரண கீர்வாணியே. இது சரணம்.

சரஸ்வதிக்கு மகுடஞ் சூட்டி, அழகு பார்த்து, ஆராதிப்பது போல உணர்ச்சிகள் கொப்பளிக்கும் எழுச்சிப்பா இது. ‘சரஸ்வதி…’ வார்த்தையை திரும்பத்திரும்ப வீணையில் நித்யஸ்ரீ வாசித்தது, ‘ஆக்க்ஷன் ரீப்ளே’யில் அட்டகாசம்.

‘இசையறிந்தோர்

இரு கரம் தன்னில்

இசை தரும் வீணை

இதயத்துக்கு(ள்) சுகம்!

இனி பெறும் வாழ்க்கை

இனியவர் சேர்க்கை

இனி வரும் காலம்

நித்யஸ்ரீக்கு நித்தமும்

இனிய பொற்காலமே…!’

-வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *