நாடும் நடப்பும்

புதிய நரகாசூரன் கொரோனா வைரஸ்

தீபாவளிக் கொண்டாட்டம் என்றாலே பட்டாசுகளின் வெடிச்சத்தமும் மத்தாப்புகளின் வண்ணங்களும் நம் கண்முன் தோன்றும். புத்தாடை வாங்குவது; பலகாரங்கள் செய்து சுவைப்பது; அவற்றை உற்றார் உறவினர்களுடன் பகிர்தலும் தீபாவளியின் முக்கிய அம்சங்களாகவே இருந்து வருகிறது.

ஆனால் இம்முறை இவற்றிற்கு வழியில்லை! கொரோனா பெரும்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முழுமையாக விலகாத நிலையில் அங்காடி தெருக்களுக்கு வருவது குறைவாகத் தான் இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழகம் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை குறைத்துக் கொண்டு வருகிறது. காரணம் மாசு தூசு விவகாரம் தான்! பள்ளி மாணவர்களே இனி பட்டாசு வேண்டாம் என்று உறுதியாக இருப்பதை பார்க்கும் போது பெரியவர்களும் கூட இப்படிச் சுற்றுப்புறத்தை சீர்கெட வைத்து நச்சு தன்மையால் சேதப்படுத்துவது தேவை தானா? என யோசிக்கிறார்கள்.

வெடிகளில் நிரம்பி இருப்பது அலுமினியம்; இரும்புத் துகள்கள்; கந்தகம், பேரியம் நைட்ரேட் அல்லது பொட்டாசியம் நைட்ரேட் போன்ற உப்புகள்.

மத்தாப்பு – வாண வெடிகளில் நம்மைப் பிரமிக்க வைக்கும் பலவிதமான வண்ணங்கள் தோன்ற தாமிரம் (நீல நிறம்), பேரியம் (பச்சை நிறம்), சோடியம் (மஞ்சள் நிறம்), ஸ்டிரான்ட்சியம் (சிவப்பு நிறம்), கால்சியம் (ஆரஞ்சு நிறம்), மக்னீசியம் (வெள்ளை நிறம்) போன்ற உலோக உப்பு வகைகளே காரணம். இவற்றைப் பற்றவைக்க உதவும் திரியில் கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது பொட்டாசியம் பெர்கலேட் உப்புகள் சேர்க்கப்படுகின்றன.இயல்பாகவே பட்டாசுகளால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட், ஆன்டிமனி, ஆர்சனிக், ஈயம், லித்தியம், பாதரசம் ஆகியவற்றைப் பயன்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பொதுவாகவே வெடிச்சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசால் பறவைகள், உயிரினங்கள் பாதிக்கப்படும் என்றாலும்

பட்டாசு – வாண வேடிக்கைகளில் உள்ள வேதிப்பொருள்களால் ஏற்படும் காற்று மாசால் வெடிக்கு அருகில் உள்ள மனிதர்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கண்களில் எரிச்சல், தோல் அழற்சி போன்றவை ஏற்படு வதுடன், அவற்றின் அதீத சத்தத்தால் காதுகேளாமை, மாசுப்புகையால் விபத்துகள் எனப் பல்வேறு வகைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதில் பட்டாசுப் புகையால் ஏற்படும் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்றவை கோவிட்–-19க்கு உதவும். அத்துடன் நுரையீரலின் அமைப்பையும் நம் உடலின் எதிர்ப்புச் செயல்பாடுகளில் ஒன்றான தும்மல், இருமல் ஆகியவை எப்படி உருவாகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சென்ட் பாட்டிலை அமுக்கினால் எப்படி ஸ்பிரே ஆகுகிறதோ, அதுபோன்றே ஒருவர் தும்மினால் காற்று மண்டலத்தில் வெகுதூரம் வரை ஸ்பிரே அடித்து விடுகிறோம். அதில் கொரோனா வைரஸ் நுண்கிருமிகள் பரவுகிறது. மற்றவர்களுக்கும் தொற்றுகிறது.

இப்படித் தும்மலின்போது சாதாரணமாகக் காற்றில் மிதக்கும் நீர்த்திவலைகள், நுண் திவலைகள் தீபாவளிப் புகையில் கூடுதல் நேரம் காற்றில் மிதக்கக்கூடும்.

ஏற்கனவே தசரா கொண்டாட்டங்களின்போது வட மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கம், ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசத்தில் அதிகரித்த கொரோனா தொற்று நமக்கு ஓர் எச்சரிக்கை மணி.

பசுமைப் பட்டாசு என அழைக்கப்படும் புகை குறைந்த, மாற்று வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும்.

முறையாகக் கைகளைக் கழுவி, முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

கடைசியாகக் கடைக்குக் கும்பலாகச் செல்வதையும் கூட்டத்தையும் தவிர்க்கவேண்டும். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப கட்டத்தில் நமது பிரதமர் மோடி ஒரு நாள் மாலை பொழுதில் தீபம் ஏற்றி கைகளை தட்டி வழிபடச் சொன்னார் அல்லவா?

அதே போன்று இம்முறை தீபாவளி கொண்டாட விரும்பும் குடும்பங்கள் தீப ஒளி ஏற்றி வெடிச்சத்தத்திற்கு பதில் கை தட்டி ஓசை எழுப்பலாம்; வீட்டில் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம்;, பக்தி பாடல்கள் பாடியும் கேட்டும் மகிழ்ந்து கொண்டாட முடிவெடுக்க வேண்டும்.

பட்டாசுகளை அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளதை ஏற்று அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து கொண்டாடலாம்.

தீபாவளிக் கொண்டாட்டம் மனமகிழ் சமாச்சாரம் என்பது தான் உண்மை. அதைச் சமுதாய சிந்தனையுடன் இன்றைய கொரோனா பெரும் தொற்றை மனதில் கொண்டு அடக்கமாக கொண்டாடுவது தான் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *