செய்திகள்

அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள்: மத்திய அரசு அனுமதி

Spread the love

சென்னை, ஜன.29-

அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் எம்.பி.பி.எஸ். இடங்களில் தமிழகம் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது வரலாற்று சாதனை ஆகும்.

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

அவற்றில் 6 கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும், அந்தக்கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களான அரியலூர், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகியவற்றிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக சமீபத்தில் டெல்லியில், மத்திய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு பிரதிநிதிகள், மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசு அனுமதி

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் 2 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அவற்றுக்கான நிதியை ஒதுக்கி உத்தரவிடப்படுகிறது. அந்த வகையில், அரியலூர் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்காக ரூ.325 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.195 கோடியும், மாநில அரசின் பங்கான 40 சதவீதம் தொகையான ரூ.130 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்படுகிறது.

அதுபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உருவாகும் புதிய மருத்துவக் கல்லூரிக்காக இதே அளவில் தொகை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த புதிய கல்லூரிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான நகலில் கையெழுத்திட்டு, மத்திய சுகாதாரத்துறைக்கு விரைவில் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிக எம்.பி.பி.எஸ். இடங்கள்

ஏற்கனவே, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் அமைய இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.137 கோடியே 16 லட்சத்தை மத்திய அரசும், ரூ.100 கோடியை மாநில அரசும் நிதி ஒதுக்கி இருந்த நிலையில், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு முதற்கட்டமாக ரூ.70 கோடியை மாநில அரசு அண்மையில் ஒதுக்கி இருக்கிறது.

தமிழகத்தில் புதிதாக அமைய இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் மூலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* * * 

ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் பெற்று வரலாற்று சாதனை

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி:பிரதமருக்கு எடப்பாடி நன்றி

அரியலூர், கள்ளக்குறிச்சியில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்து, அதற்கான முன்மொழிவுகள் தமிழக அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனது கோரிக்கையினை ஏற்று அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, 23.10.2019 அன்று தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 அரசு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும், 27.11.2019 அன்று மேலும் 3 அரசு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல், தற்போது கூடுதலாக 2 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 11 கல்லூரிகள்

ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென ரூ.3,575 கோடிக்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் ரூ.2,145 கோடி வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ.1,430 கோடி வழங்கப்படும்.

இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *