செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று

* பெரம்பலூரில் 2-வது நாளாக புதிய பாதிப்பு இல்லை

* சென்னை பாதிப்பு 500க்கு கீழே குறைந்தது

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று

சென்னை, நவ.18-

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் தொடர்ந்து 2-வது நாளாக புதிய பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,032 ஆண்கள், 620 பெண்கள் என மொத்தம் 1,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 36 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் புதிய பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 492 பேரும், கோவையில் 170 பேரும், செங்கல்பட்டில் 112 பேரும், குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 5 பேரும், விருதுநகர், ராமநாதபுரத்தில் தலா 4 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 61 ஆயிரத்து 568 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 60 ஆயிரத்து 105 ஆண்களும், 3 லட்சத்து 1,430 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 26 ஆயிரத்து 858 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 96 ஆயிரத்து 460 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

7 மாவட்டங்கள்

தமிழகத்தில் அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளது. இதே போல ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தென்காசி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் 100க்கும் குறைவானவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 12 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 513 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 314 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 970 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 15 ஆயிரத்து 85 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் 66 அரசு நிறுவனம், 146 தனியார் நிறுவனம் என மொத்தம் 212 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நேற்று 61 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *