நாடும் நடப்பும்

இயற்கை நாசமே சர்வ நாசம்! 2020 சுட்டிக் காட்டும் பாடம்

2020–ன் இறுதி நாட்கள் வந்துவிட்டது, நடப்பு நூற்றாண்டில் 20 சதவிகித வருடங்களை தாண்டிவிட்டோம்!

கடந்த நூற்றாண்டின் சாதனை கண்டுபிடிப்புகளான புகைப்பட கேமரா, அதிவேக கப்பல்கள், விமானங்கள், மோட்டார் கார்கள் என்பன எல்லாமே 1920–க்குள் உருவானவையாகும்.

ஆனால் அடுத்த 50 ஆண்டுகளில் அவையெல்லாமே புதுப்புது கருவிகளின் வருகையால் அதிவேகமாக இயங்கின, மிக பாதுகாப்பானதாக மாறியது. கூடவே புதுப்புது ஆபத்துக்களையும் நம்மிடம் கட்டவிழ்ந்து விட்டது.

மேலும் முதல் 20 ஆண்டுகளில் 19–ம் நூற்றாண்டு முன்னோர்கள் பெரும் தொற்று நோயின் தாக்கத்தையும் சந்தித்து பல லட்சம் உயிர்ச்சேதங்களை கண்டனர். முதல் உலக யுத்தமும் அரங்கேறி மேலும் மனித அழிவை கண்டது.

ஆனால் நாகரீகத்திலும் வாழ்க்கை தரத்திலும் நிறைவுடன் நின்று விடாமல் அவற்றையெல்லாம் விரிவாக்கிக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால் அதற்கு முந்தைய 18–ம் நூற்றாண்டின் போது இருந்த பூமியின் இயற்கை வளங்களை மெல்ல இழந்து வருகிறோம். கேள்வியே படாத பல்வேறு இயற்கை சீற்றங்கள் கடுமையாக தாக்கி வருவதை புரிந்து கொண்டாலும் உதாசீனப்படுத்திதான் வருகிறோம்!

21–ம் நூற்றாண்டில் நுழைய இருக்கும் நாம் இன்று எதையெல்லாம் வசப்படுத்தி இருக்கிறோம்? மேலும் எதையெல்லாம் எட்டிப்பிடிக்க இருக்கிறோம் என்பதை பற்றி யோசித்தால் பெரும் வியப்பாகவே இருக்கிறது.

ஆனாலும் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் முன்னணி பொருளாதாரங்கள் எல்லோருமே கடந்த 9 மாதங்களாக முடங்கி செய்வதறியாது தவிப்பதையும் காண்கின்றோம்!

கொரோனா பெரும் தொற்று நிரந்தரமானது இல்லை.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அறிவியலும் மருத்துவமும் ஆரம்பத்தில் தட்டு தடுமாறினாலும் மனிதகுலத்தை காக்க புதிய வேகத்துடன் செயல்பட்டு உலக சமநிலையை சீர் செய்து கொண்டுதான் இருக்கிறது.

காடுகள் அழிப்பும் உயிரினங்கள் அழிப்பும் அதிவேகமாக இருக்கும் 20–ம் நூற்றாண்டின் துவக்கம் முதலே ஏதேனும் புதுப்புது கிருமிகளின் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் தற்போதைய ‘கோவிட்–19’

2020 முடியும் நிலையில் தான் தடுப்பூசி தயாராகிவிட்டது. ஆனாலும் அதன் வீரியம் ஆரோக்கியத்தை காப்பாற்றும் திறன் ஏதுமே தெளிவாக தெரியவில்லை. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, மின்சார உற்பத்தி, தொழிற்சாலை செயல்பாடுகள், வாகனப் போக்குவரத்து உள்ளிட்டவை சரிந்ததால் காற்று மாசுபாடு குறைந்தது. தலைநகர் டெல்லியில் 2018 ஜூலைக்குப் பிறகு காற்று மாசுபாடு குறைவான நிலைக்குச் சென்றிருப்பதாக நாசா செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் தெரிவித்தன.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து இமயமலைப் பகுதி தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இது எல்லாமே தற்காலிக மாற்றமாக மட்டுமே எஞ்சியது. இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் காற்று மாசுபாடு 115 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 17 லட்சம் பேர் காற்று மாசுபாட்டுக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்று லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-–2020யை கடந்த ஆண்டு வெளியிட்டது. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986–ன்கீழ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006 ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக புதிய வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

சுரங்கம் தோண்டுதல், பாசனத்துக்கான அணை, தொழிலகம், கழிவு சுத்திகரிப்பு நிலையம் போன்றவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அறிவியல்பூர்வமாக மதிப்பிடுவதுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு. இந்த விதிகளில் மக்களிடம் கருத்துக் கேட்பதற்கான வழிவகை உண்டு; ஆனால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கத்துடன் புதிய வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக நாடெங்கிலும் சுற்றுச்சூழல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் அமேசான் காடுகளிலும் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு அரங்கேறும் காட்டுத்தீ இந்த ஆண்டும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

2021ல் அவை குறையுமா?

விசாப்பட்டினத்தில் நச்சு கசிவு ஏற்படுத்திய தொழிற்சாலையின் ஒரு கிலோ மீட்டர் அருகாமையில் இருந்த பலருக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தி மயங்கி விழ செய்தது.

2021ல் அவை வராது இருக்குமா?

இப்படி பல்வேறு சிக்கல்கள், பல்வேறு கேள்விகளுக்கான விடையை தேடி மனிதகுலத்திற்கு புதிதாக நேரத்தை ஒதுக்கி கொடுத்தது கொரோனா தொற்று! காரணம் அது ஏற்படுத்திய உலகளாவிய ஊரடங்கு.

பஞ்சாபில் மாசுதூசு சமீபமாக மிகவும் குறைந்து விட்டதால் இமயமலை சாரலே கண்ணில் தெரியும் அளவிற்கு காற்று மண்டலம் சுத்தமாக இருக்கிறதாம்!

இயற்கையின் மிக முக்கியமான ஓர் அங்கமாக இருப்பது நீர், அதையும் இழந்து வருகிறோம். 2020ல் பல்வேறு நாடுகளில் ‘சொட்டு தண்ணீர் கூட இல்லாத நாட்கள்’ (Zero day) வந்துள்ளது.

அடுத்த 20 ஆண்டுகளில் தண்ணீர் விலை அதிகமான ஓர் ஆடம்பர பொருளாக மாறிவிடும் அபாயத்தை மறந்து விடக்கூடாது.

ஆக 2021 துவங்குகிற நாளில் மாசுதூசு ஒழிப்பிற்கும் நீர் பாதுகாப்புக்கும் புதிய அங்கீகாரத்தை வழங்கி இயற்கையை போற்றுவோம்.

கொரோனாவிடம் சிக்கியது போல் மீண்டும் ஏதேனும் ஒரு கிருமியிடம் சிக்குண்டு அலைக்அழியாமல் இருப்பது

இயற்கையை வணங்கிப் போற்றி தூய்மையாகச் சிறப்புற பராமரிப்பதில்தான் இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *