போஸ்டர் செய்தி

விக்ரம் லேண்டரின் சிதறிய பாகங்களை கண்டறிந்த நாசா

Spread the love

வாஷிங்டன், டிச. 3–

சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை, சென்னை விஞ்ஞானி சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. கடந்த மாதம் 17ம் தேதி திட்டமிட்டப்படி சந்திரயான்-2ன் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், நிலவில் இருந்து 2.1 கிமீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ தொடர்ந்து செய்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்து வருகிறது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்க திட்டமிடப்பட்ட இடத்தின் படங்களை நாசா வெளியிட்டது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த படங்களை நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் எடுத்து இருந்தது. மாலை நேரத்தில் படங்கள் எடுக்கப்பட்டதால் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி புதிய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை செப்டம்பர் 17ல் எடுக்கப்பட்டவற்றை விட, நல்ல வெளிச்சத்தில் உள்ளன. இதனை தொடர்ந்து விஞ்ஞானிகள் இவற்றை ஆய்வு செய்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. இதனை, சண்முக சுப்பிரமணியன் என்ற, சென்னை என்ஜினியர் கண்டுபிடித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் கூறும்போது, விண்வெளி அறிவியலாளர் சண்முக சுப்பிரமணியனின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக, நாசாவின் உதவியுடன் அவர் இதனை சாதித்துள்ளார் என்று பெருமையுடன் கூறி உள்ளனர்.

விக்ரம் லேண்டர் தரையிறக்க நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா, விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் சிதறி கிடக்கும் விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *