சிறுகதை

நல்லது செய்யப் போய்….! | ராஜா செல்லமுத்து

Spread the love

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை மைதானத்தில் சுயநலச்சூரியன் தான் சுரீரென்றுச் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்தக்கோட்பாட்டு எதுவும் இல்லாமல் வாழ்பவன் நரேன் . விவேகானந்தரின் இயற்பெயரைக் கொண்டதால் என்னவோ? அவன் இயல்பே ரொம்பவும் வீரமாகவும் விவேகமாகவும் இருக்கும்.

அவன் அலுவலகத்திற்குப் போக ரயில், பேருந்தையே பெரும்பாலும் பயன்படுத்துவான். அன்றும் அவன் அலுவலகத்திற்குச் செல்ல பேருந்துக்காகவே காத்துக் கொண்டிருந்தான்.

இயல்பை விட பேருந்து நிலையத்தில் அன்று கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே நிரம்பி வழிந்தது.

‘‘என்ன நரேன் போகலியா..?’’ என்ற நண்பனின் கேள்விக்கு

‘‘இச்’’ என்று ஒரு உச்சரிப்பை மட்டுமே உதிர்த்தான் நரேன்.

‘‘இவரு பெரிய கேரளத்து மலையாளி..உச்சஸ்தாயில உச்சுக்கொட்டி, இச்ங்கிறாரு, வாயத்தெறந்து பதில் சொல்றா இவனே..’’ என்று ஏளனக் கேள்வி கேட்டான் நண்பன்.

‘‘இப்ப என்ன.. இந்த கூட்டமான பஸ்ல.. என்னைய ஏறச் சொல்ற..? அவ்வளவு தானே.. என்னால ஏறவே முடியாது. நான் வரல..’’ என்ற பதில் வார்த்தையை நண்பனுக்குப் பகிரங்கமாகவே உரைத்தான்.

‘‘சரி அப்ப நான் வரவா..?’’ என்று சொல்லிய நண்பன் பஸ் ஏறுவதற்குள் அவனை முண்டியடித்து ஒருத்தி ஏற முற்பட அவளை ஒட்டியே ஏறப் போன ஒரு பயணி, பேருந்தில் ஏறுவது போல ஏறப்போய் ‘பட்’ என அவளின் கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடினான்.

‘‘ஐயய்யோ.. என்னோட பையி.. என்னோட பையி..’’ என்று அவள் அழுதாள். மெல்லப் புறப்பட்ட பேருந்து இவளின் கூக்குரல் கேட்காததால் இப்போது வேகம் எடுத்திருந்தது. உடன் ஏறிய நரேனின் நண்பன் கூட நகரும் பேருந்தில் ஏறியவன் இப்போது வேகமெடுத்திருக்கும் பேருந்திலிருந்து இறங்க முடியாமல் தவிக்க, கைப்பையைப் பிடிங்கி ஓடியவனை நோக்கி ரொம்பவே வேகமாக ஓடினான்.

நிரம்பி வழியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அத்தனை பேரும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தார்களேயொழிய தவறியும் திருடனைப் பிடிக்கத் திராணி காட்டவில்லை.

‘‘ஏங்க.. திருட்டுப் பய ரொம்பவே வேகமா ஓடுறான் பாருங்க.. என்ன ஸ்பீடு, என்ன எனர்ஜி, என்ன ஒரு வெறி..’’ என்று திருடனைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான் ஒருவன்.

‘‘ஆமாங்க.. திருடன், ரொம்ப நல்லாவே ஓடுறாங்க.. எனக்கு ஒரு ஆச்சர்யமான விசயம் ஞாபகத்துக்கு வருதுங்க.. எங்க ஊர்ல.. இதே மாதிரி ஒரு திருட்டுப் பய எதையோ திருடிட்டு ஓட, அவன ஒரு போலீஸ் வெரட்டிப்போனார் ஆனா..! அவன அந்தப் போலீஸால பிடிக்கவே முடியல..’’

‘‘அப்பிடியா..?’’

‘‘ஆமாப்பா.. ஒரு போலீஸ்னாலயே ஒரு திருடன ஓடிப்பிடிக்க முடியலன்னா.. அப்ப அந்தத் திருடன் போலீஸ விட பயங்கரத் திறமைசாலி தான்..’’ என்று அவன் சொன்னான்.

‘‘அங்க தான் ஒரு விசயமே ஒளிஞ்சிட்டு இருக்கு..’’ என்று அந்த நிகழ்வைச் சொன்னவன் மேலும் சொல்ல

‘‘என்ன..?’’ என்றான் கேட்டவன்.

‘‘போலீசுக்கு எப்பிடியாவது பிடிக்கணும்ங்கிற லட்சியம்.ஆனா..! திருடனுக்கோ..? இவன் கிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சிரனும்ங்கிற ஒரு வெறி, அதான் போலீச விட திருடனால இவ்வளவு வேகமா ஓட முடிஞ்சது..’’ என்று இரண்டு பேரும் திருடனுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருந்தனர்.

‘‘ஹலோ.. திருட்டுப் பய ஒரு பொண்ணு கிட்ட இருந்த கைப்பைய பிடுங்கிட்டு ஓடுறான்.. அவனவெரட்டிப் புடிக்க வக்கில்ல.. அவனுக்கு போயி சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. அவன வெரட்டிப்போற ஒரு நல்ல மனுசனப் பத்தி நாலு வார்த்த சொல்லுங்க..’’ என்று ஒருவர் நரேனுக்குச் சப்போர்ட் செய்ய

‘‘இல்ல சார்.. எப்பவுமே நல்லத பத்தி மட்டுமே யோசிக்க கூடாது. கெட்டத பத்தியும் கொஞ்சம் சிந்திக்கணும்..’’என்று ஒருவன் சொன்னான்,

‘‘ஹலோ.. என்னோட பையில.. ஆதார் அட்டையில இருந்து பால் அட்டை வரைக்கும் எல்லாமே அதுலதான் இருக்கு. அது காணாம

போச்சுன்னா.. அவ்வளவுதான் என்னோட வாழ்கையே சூன்யமாயிரும்..’’ என்று கைப்பையைப் பறி கொடுத்த பெண் பேசத் திருடனுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அமைதியானார்கள்.

‘‘இல்லங்க.. சும்மா ஒரு ஒப்பீடு தான் பாத்திட்டு இருந்தோம்..’’ என்று ஒருவன் சொன்னான்.

‘‘அடுத்தவங்களோட இழப்பு உங்களுக்கு இனிப்பா இருக்கா..’’ என்றாள் பையைப் பறி கொடுத்தவள். பேசிய இருவரும் வாயடைத்துப் போனார்கள்.

திருடனை ஓடிப்போய் பிடித்த நரேன் அவனைப் பிடித்து நையப் புடைத்தான். அவன் கையிலிருந்த பையைப் பிடுங்கிய போது அவனை தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான் அந்த திருடன்.‘சரி, பை தான் கிடைச்சிருச்சே..’ என்ற உணர்வில் திருடன் ஓடியதை நரேன் லட்சியம் செய்யவில்லை. திருடு போன அந்தப் பையுடன் அந்தப் பெண்ணிடம் வந்த நரேனை அந்தப் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

‘‘இவர் தாங்க உண்மையான ஆம்பள.. நாமெல்லாம் திருடன பிடிக்காம வேடிக்கை தான் பாத்திட்டு இருந்தோம் – ஆனா..! இவரு தாங்க.. தன்னோட உசுரக்கூட பெருசு படுத்தாமப் போயி பைய பிடுங்கிட்டு வந்திட்டாரு..’’ என்று நரேனைப் புகழ்ந்தனர்.

பையைப் பறிகொடுத்த அந்தப் பெண், ‘பசக்’ என நரேனைக் கட்டிப்பிடித்தாள்.

‘‘ரொம்ப நன்றிங்க.. இந்த உதவிய என்னைக்கும் நான் மறக்க மாட்டேன்..’’ என்று கண்கள் குளமாக நன்றி சொன்னாள் அந்தப்பெண். அப்போது வேகமாக ஒரு பேருந்து வர அந்தப் பேருந்தில் ஏறினாள் அந்தப் பெண்.

நரேனுக்கு நன்றிப் பெருகோடு கை கூப்பியவளைப் பார்த்து நரேனும் பதிலுக்கு நன்றி தெரிவித்தான்.

பேருந்து இப்போது வேகம் எடுத்திருந்தது. ஆட்கள் அந்த இடத்தை விட்டு மெல்லக் கலைந்தனர். தன்னுடைய ஜீன்ஸின் பின்பக்க பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்த நரேனுக்கு பகீர் என்றது. அவன் ‘பர்ஸ்’ காணாமல் போயிருந்தது.

‘‘ஐயோ.. யாரு நம்ம பர்ஸ எடுத்தது. அதில நிறைய பணம், டெபிட் கார்டு , கிரிடிட் கார்டுன்னு எல்லாமே இருந்துச்சே..’’ என்று நரேன் புலம்பினான்.

அவனின் பர்ஸைத் திறந்து, அதிலிருந்த பணத்தை ரொம்ப லாவகமாக எடுத்து எண்ணிக்கொண்டிருந்தாள் பையைப் பறி கொடுத்து, அதை நரேனிடமிருந்து வாங்கிய அந்தப் பெண். அவள் அருகே உட்கார்ந்திருந்தான் பையைத் திருடி ஓடிய அந்தத் திருடன்.

‘‘இப்பத்தாங்க.. ஒரு திருடன் கிட்ட இருந்து ஒரு பொண்ணோட பைய காப்பாத்திக் குடுத்தாரு. ஆனா..! இப்ப பாருங்க.. அவரே தன்னோட பர்ஸ திருடு குடுத்திட்டு ஒக்காந்திருக்காரு..நல்லது செஞ்ச இந்த மனுசனுக்கு இப்பிடியொரு நிலைமையா..’’ என்று அங்கு இருந்த ஆட்கள் சொல்ல நரேன் செய்வதறியாது விழித்தபடியே உட்கார்ந்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *