சிறுகதை

நானும் ஒரு குழந்தை | செருவை.நாகராசன்

Spread the love

மாயூரம் – காரைக்குடி புகைவண்டி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. மாலைக்குளிர்காற்று மனதிற்கு இன்பமாக இருந்தது. குலை குலையாக காய்க்கும் தென்னைமரங்களும் பச்சைப்பசேலென்ற வாழை, மா, பலா காய்களும் நீலக்கடல் போன்று முடிவில்லாமல் விரிந்து கிடக்கும் பசும் நெற்பயிர்களும் தஞ்சையின் செழிப்பைக் கூறிய வண்ணம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக கமலிக்கு இருந்தது. அதனுடன் தான் விரும்பிய ஆசிரியைப்பணி நாளை முதல் ஆரம்பமாகப்போகும் நல்வாழ்வைப்பற்றியே நான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

சிறு வயதிலேயே தந்தையை பறிகொடுத்த கமலி தன் தாயின் அரவணைப்பில் வளர்ந்து கல்லூரிப்படிப்பை முடித்ததும் அம்மாவின் வரன் தேடிய வேலையும் முடிந்துவிட்டது .

உறவு என்று சொல்லிக்கொள்ள இருந்த என் அம்மாவுக்காக கல்லூரியில் என்னை மனமார விரும்பிய அந்த நல்லவரையும் புறக்கணித்தேன்.

அடுத்து நடந்த சம்பவம் அய்யோ அதை எப்படிச்சொல்வேன்.

உடல், பொருள் ,ஆவி மூன்றையும் இறுதிவரை எனக்கே அர்ப்பணித்த எனது அன்புத்தாயை இழந்தேன்.

திருமணக் கோலத்திலே என்னைக் காணத் துடியாய்த் துடித்த அன்னையின் ஆசையும் நிறைவேறவில்லை.

பின்பு நானும் திருமணத்தைப்பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டேன்.

காலச்சக்கரங்கள் வேகமாக உருண்டோடி பதினைந்து ஆண்டுகளைக் கடத்தி விட்டது.

அதற்குள் எத்தனையோ அலுவலகங்களில் வேலை பார்த்தேன். ஆண்டுக்கொரு அலுவலகம் மாறினாலும் ஆண்களின் காமப்பார்வை என் அமைதியை சீர்குலைத்தது. இதனால் புனிதமான ஆசிரியத் தொழிலில் நாட்டம் கொண்டேன். சிறு சேமிப்பின் உதவிகொண்டு ஆசிரியையாகப் போகிறேன் . இது என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம்.

நடுக்கடலில் தத்தளித்த நான் ஒழுங்காகக் கரை சேருவோமா? என்று முன்பிருந்த மனம் இப்போது அடியோடு மறைந்துவிட்டது.

மெல்லக்கரைசேர்ந்து விட்டேன். என் வாழ்வும் இனிமேல் ஆசிரியத் தொழிலின் புனிதத்திலேயே கரைந்து மறைந்து விடும்.

இனிமேல் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப்பார்க்க மாட்டேன்.

அப்பப்பா அதில் தான் எத்தனை ஏமாற்றங்கள்; எத்தளை துன்பங்கள்….

என் சிந்தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து வண்டி புதுக்கோட்டையில் நின்றது. வண்டியில் ஏறுவோர் இறங்குவோர் எழுப்பிய கூச்சலும் உணவுப் பண்டங்களை விற்கும் சிறுவர்களின் கூச்சலும் சேர்ந்து அங்கு நிலவிய அமைதியைக் கெடுத்துக்கொண்டிருந்தது.

நானிருந்த பெட்டியிலிருந்து அனைவரும் இறங்கிவிட்டனர். வண்டி புறப்படுவதற்கு அறிகுறியாக விசிலும் ஊதப்பட்டு விட்டது. ஒரு பாதிரியார் வேமாக வந்து நானிருந்த பெட்டியில் ஏறிக்கொண்டார்.

அவரது முகத்தை உற்று நோக்கிய அடுத்த வினாடியே

‘‘ஆ.. நீங்களா? ’’என்றேன்.

என் கண்கள் வியப்பால் அகல விரிந்தன.

நாடித்துடிப்பு சில வினாடிகளுக்கு நின்றுவிட்டது. இதயத்திலே இனம் புரியாத ஒரு உணர்ச்சி பரவியது. நான் என்னையே மறந்தேன்.

கடந்த காலம் என் கண்முன் வந்து நின்றது.

அன்றொரு நாள் …

மாலை மணி 4.15 .கல்லூரி மணி ஒரு முறை அலறி ஓய்ந்தது. வகுப்பறையிலிருந்து வெளியே வந்ததும் பல்கலைக்கழகத் தேர்வுக்குப்பணம்

கட்டுவதற்காக கல்லூரி அலுவலக அறையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தேன்.

அன்று தான் பணம் கட்டுவதற்கான கடைசி நாள். பணத்தை எடுக்க கைப்பைக்குள் கையை விட்ட மறு வினாடியே தீயை மிதித்தவள் போல் திடுக்கிட்டேன். பணமிருந்த பர்ஸைக் காணவில்லை. வரும் போது இடையில் எங்கேயோ விழுந்து விட்டிருக்க வேண்டும் . என்ன செய்வது என்று கையைப்பிசைந்து நின்று கொண்டிருந்தேன்.

நீர்த்திவலைகள் விழிகளின் ஓரங்களில் ஒதுங்கியது.

‘‘கமலி.. என்ற குரல் வந்த திசையை நோக்கினேன்.

எனது வகுப்பு மாணவர் சுந்தர் நின்று கொண்டிருந்தார் . அவருடைய கையில் என் பர்ஸ் இருந்தது எனதிரு கண்களாலேயே நன்றியை அவருக்கு உணர்த்திவிட்டு அன்று அவரிமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். அன்று முதல் நானும் அவரும் அடிக்கடி சந்தித்து பேசினோம். அவருடைய பேச்சிலிருந்த பண்பும் நல்ல பழக்க வழக்கங்களும் என்னை அவர்பால் ஈர்த்தது.

பழகிய ஆரம்பத்தில் தினம் அவருடன் ஒரு சில நிமிடங்களே பேசி வந்த நான் போகப் போக அவருடன் பேசும்போது நான் என்னையே மறைந்திருக்க நேரம் சென்றுகொண்டிருக்கும்.

தேர்வு நாள் நெருங்கிவந்து கொண்டிருந்தது. தேர்வு நெருங்க நெருங்க நானும் அவரும் எதிர்காலத்தை பற்றி என்னவெல்லாமோ பேசினோம் . எதிர்கால வாழ்வை நினைத்து எங்களையே மறைந்திருந்தோம். தேர்வும் வந்தது. அன்று தேர்வின் இறுதிநாள் வெற்றிகரமாகத் தேர்வை எழுதிமுடித்துவிட்டு வீட்டு வாசலை மிதித்த எனக்கு அம்மா தெரிவித்த செய்தி தலையை சுக்கு நூறாகப் பிளந்தது.

எனக்குத்தெரியாமல் வரனை நிச்சயித்து முகூர்த்த நாளையும் அம்மா குறித்துவிட்டார்கள்.

நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடக்கும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற என்னை நானே படுகுழியிலே தள்ளிக்கொண்டேன்.

அடுத்த இரண்டு நாளிலேயே அம்மா இறந்து விடுவார்கள் என்று தெரிந்திருந்தால் நான் சுந்தரிடம் இதைத் தெரிவித்திருக்கமாட்டேன்.

எப்படியோ அடுத்த நாள் நான் ஒரு நடைபிணமாக சுந்தரைக் காணச்சென்றேன் நானிருந்த நிலையைக்கண்டு அவர் பதறிய நிலையை இன்று நினைத்தாலும் அதை வார்த்தைகளில் வடிக்க முடியாது.

அவருடைய முகத்தை நிமிர்ந்து நோக்கக்கூட மனமின்றி நான் எழுதி வைத்திருந்த அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன்.

என் நிலையையும் திருமணத்தைப் பற்றியும் எழுதி என்னை மறந்துவிடுமாறு அதில் எழுதியிருந்தேன்.

கடிதத்தை வேகமாக என்னிடமிருந்து வாங்கிப் படித்தார். படிக்கப்படிக்க அவருடைய கண்களிலிருந்து நீர் ஊற்று பெருக்கெடுத்து கடிதத்தை மெல்ல மெல்ல நனைத்து கொண்டிருந்தது.

அதற்கு மேல் அங்கு நிற்க எனக்கு மனமில்லை.

விடு விடுவென்று வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன். தலையணையில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதேன்.

பின்னர் அம்மா இறந்ததும் திருமணமும் தடைப்பட்டு நான் தனிக்கட்டையானபோது சுந்தருக்குப் பல முறை கடிதம் எழுதினேன். பலனில்லாமல் போகவே நானே நேரில் சென்றேன். அங்கு அவரை நான் காண முடியவில்லை. பின்பு நான் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு என் வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்தேன். எல்லாம் ஒரு வினாடி தான் மீண்டும் சுயநிலைக்குத் திரும்பினேன் .

‘‘கமலி அந்த சுந்தர் தான் நான்..

அவருடைய பேச்சில் முன்பிருந்த துடிப்பு இல்லை.முன்பு என்னுடன் பேசும்போது அவருடைய் கண்களிலில் மின்னும் ஆர்வம் இப்போது இல்லை.

மீண்டும் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

என் நிலையைப் புரிந்துகொண்டோ என்னவோ அவரே மீண்டும் பேச ஆரம்பித்தார்:

‘‘கமலி என்று நீ.. என்னை என்றைக்கு பிரிந்தாயோ அன்றே எனக்கென்று இருந்த ஒரு வாழ்க்கை மடிந்துவிட்டது. மன அமைதியற்றுத் திரிந்தேன். பின்பு கிறித்தவ மதத்தில் சேர்ந்து பாதிரியாரானேன் .புனிதமான இத்தொழில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் இதைச் சொல்லிக்கொண்டு வரும்போதே என் கண்கள் குளமாயின கண்களைத் துடைத்துக்கொண்டு அவரது முகத்தை ஒருமுறை நோக்கினேன்.

முகத்திலே சாந்தம் தவழ்ந்தது பேச்சில் அமைதி தெரிந்தது.

கண்களிலே கருணை ; உடையிலே எளிமை ; என்னுடைய சுந்தரோ இப்படி மாறிவிட்டார் . நினைத்துப்பார்க்கக் கூட முடியவில்லை.

என்னைக் கண்டதும் அவர் என்னை அப்படியே கட்டித் தழுவி மறுவாழ்வு கொடுப்பார் என்று நினைத்தேன்.

ஆனால் …

இப்போது அவர் ஒரு பாதிரியார்.

எனக்கு இன்னும் மணமாகவில்லை சுந்தர். இதை அவரிடம் நான் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை: காரணம் அந்தத் தெளிந்த உள்ளத்தை மீண்டும் களங்கப்படுத்த விரும்பவில்லை. நான் திருமணம் செய்து கொண்டேன் குடியும் குடித்தனமாக இருப்பேன் என்ற அவருடைய எண்ணத்தையும் கெடுக்க நான் விரும்பவில்லை. மன அமைதியை நாடி அவர் பாதிரியாரானார் ; நான் ஆசிரியையானேன். குழந்தைகள் உருவில் இறைவனை நான் காண்கிறேன். அதனுடைய மழலை மொழியை விட மிகையான சுகம் இவ்வுலகில் வேறு என்ன இருக்கிறது.

வண்டி காரைக்குடியில் நின்றது. நான் அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டேன்.

அடுத்த பிறப்பு என்று ஒன்றிருக்குமானால் முருகா அங்கே அவரையும் என்னையும் பிரித்து விடாதே என்று வேண்டிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள்..

எனது வகுப்பினுள் நுழைந்தேன். உடனே குழந்தைகளெல்லாம் ஓடிவந்து ‘‘டீச்சர்.. டீச்சர்.. என்று என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அக்குழந்தைகளுடைய முகங்களை நோக்குகிறேன். அத்தனையும் தெய்வத்தின் முகங்களாகக் காட்சியளிக்கிறது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று தானே குழந்தைகள் உலகமே தனி

உலகம் . அங்கே கள்ளம் கபடமிருக்காது. தூய அன்பு இருக்கும் ; கவலை இருக்காது; களிப்பு இருக்கும்; புது உலகிற்கு நான் வந்து விட்டது போன்ற ஒரு மன நிறைவு.

இருள் மெல்ல மெல்ல விலகியது.

ஒளிமயமான எதிர்காலத்தை நான் காண்கிறேன்.

குழந்தைகளுடன் கலந்துவிட்டேன் நானும் ஒரு குழந்தையாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *