சினிமா செய்திகள்

‘‘என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள்; விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்’’: நடிகர் டி.ஆர். சிலம்பரசன் அறிக்கை

சென்னை, ஜன. 4

‘‘என் ரசிகர்கள் விஜய் அண்ணாவின் ‘‘மாஸ்டர்’’ படத்தைப் பாருங்கள்; விஜய் ரசிகர்கள் எனது ‘‘ஈஸ்வரன்’’ பாருங்கள்’’ என்று பிரபல நடிகர் டி.ஆர். சிலம்பரசன் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம், திரையுலகம் செழிக்க வேண்டும் என்று தன் எதிர்பார்ப்பையும் ஆசையையும் வெளியிட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக இன்று சிலம்பரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்!

“ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மீடியாவுக்கு மரியாதை

அதேசமயம் அண்ணன் விஜய் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

திரையரங்குக்கு மக்கள் வருவார்கள்

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கொராணா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும்.

திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *