சிறுகதை

மூக்கம்மாளின் உலகம் | ராஜா செல்லமுத்து

Spread the love

விஞ்ஞானம் இன்று பூமியின் வேர் வரை பாய்ந்திருக்கிறது. ஆகாயத்தின் நுனி வரை பரவிக் கிடக்கிறது. செல்போனின் செல்லரிப்பில் மனித இனமே இன்று மயங்கிக் கிடக்கிறது.

ஒட்டுமொத்த உலகமும் இன்று மாறியிருந்தாலும் இன்னமும் உலகம் அறியாத வெள்ளந்தி மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்தக் கள்ளங்கபடமற்ற மனிதர்களால் தான் இந்த பூமி இன்னும் ஈரமாயிருக்கிறது என்பதற்கு மூக்கம்மாளே முழு முதற்சாட்சி – பாம்படம் ஆடாத வெறும் சதைக்காதுகளைத் தொங்க விட்டு பின் கொசுவச் சேலையைக் கட்டி, இடது பக்கக் கன்னத்தில் ஒதுக்கிய வெற்றிலை பாக்குச் சீவலை இரண்டு பக்கக் கன்னங்களில் ஒதுக்கியவாறு

‘‘புளிச்.. புளிச்..’’ என்று வீதியைச் சிவப்பாக்கும் மூக்கம்மாளை இடைமறித்தான் ரங்கு

‘‘என்ன.. கெழவி வெத்தல எல்லாம் ரொம்ப பலமா இருக்கு.. விட்டா வீதியெல்லாம் செகப்பாக்கிப்புடுவ போல.. போயி ஓரஞ்சாரமா துப்பு ஆத்தா.. மக்க மனுச நடமாடுற எடத்தில பூராம் நீயே எச்சியத் துப்பி வச்சா..இங்க வார நாலு நல்ல மனுசங்க.. நம்மளயில்ல தப்பா நெனப்பாங்க..’’என்று ரங்கு கொஞ்சம் முறுக்கினான்.

‘‘என்னடா.. குட்ட மூக்கா.. விட்டா, காது கிழியுற வர பேசுவ போல.. ஏல பாலக மிதிக்கிற எடத்துக்கு எந்தப் பெரிய மனுசன் என்னைக்கு வரப்போறானுக.. நான் எச்சி துப்புறேன்ற எளக்காரத்தில நீ பேசுற போல.. அப்படித் தானடா மொன்ன மூக்கா..’’ என்று எதுகை மோனையில் ரங்குவை விட்டு விளாசினாள் மூக்கம்மாள்.

‘‘ஏய் கெழவி.. ஒனக்கு ஒலகம் தெரியலன்னா.. எங்களுக்குமா தெரியாமப் போகும்..இன்னைக்கு நம்ம தெருவுக்கு யார் வாராங்க தெரியுமா..?’’ என்று பூடகம் போட்ட ரங்குவை

‘‘பெரிய ஆள் வாராங்க.பெரிய ஆள்வாராங்கன்னு.. தான் சொல்றானேயொழிய.. இன்னாருதான் வாராங்கன்னு வெரசா சொல்ல மாட்டேன்கிறானே..” என்று மூக்கம்மாளுக்குக் கோபம் முன்னுக்கு வந்தது.

‘‘ஏய் கெழவி.. என்னமோ பேரச் சொன்ன. ஒடனே ஆளக் கண்டு பிடிக்கிற மாதிரி.. இம்புட்டு வேகமா கேக்குறியே..! இப்பச் சொல்றேன் கேளு, காந்தி பிறந்த நாளக் கொண்டாட நம்ம தெருவுக்கு கவர்னர் வாராரு..’’ என்று ரங்கு சொன்னபோது

‘‘டேய், காந்தியா..? யாருடா அவரு..’’ என்று கொஞ்சங்கூட பயமில்லாமலே கேட்டாள் மூக்கம்மாள்.

‘‘இந்தா பாத்தியா..? இப்பத்தான்..பேரச் சொல்லு.. ஆளக் கண்டு பிடிக்கிறேன்னு சொன்ன.. இப்போ காந்தின்னு சொன்ன ஒடனே கண்ணு முழி பிதுங்கிநிக்கிறியே..’’ என்று ரங்கு சொல்ல

‘‘ அது யாருடா காந்தி..? நம்ம மேலத்தெருவுல இருக்கிற ராசு மகனா..?’’ என்று மூக்கம்மாள் கேட்க

‘‘ஏய்.. ஆத்தா.. காந்தி தெரியாதா..? காந்தி, காந்தி..’’ என்று ரங்கு சொல்ல,

‘‘அட போடா.. எனக்கு ராசு மகன் காந்தி தான் தெரியும்.. வேற யாரையும் எனக்குத் தெரியாது..’’ என்று இன்னுமொரு கவள வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்ப ஆரம்பித்தாள் மூக்கம்மாள்.

‘‘ஒனக்கு காந்தியே தெரியலையே.. உன்கிட்ட போயி நேதாஜி யார்ன்னு கேட்டா ஒனக்கு எங்க தெரியப்போகுது..’என்று சலித்துக் கொண்ட ரங்கு, ரூவா நோட்டுல.. எல்லாம் சிரிச்சிட்டு இருக்காருல்ல..’’

‘‘ஆமா..’’ என்று வாய் பிளந்த மூக்கம்மாளிடம்

‘‘அவருதான் கெழவி காந்தி..’’ என்று காந்தியைப் பற்றி கொஞ்சம் விளக்கிச் சொன்னான் ரங்கு

‘‘ஓ..அவரா..? அவர் பேர்தான் காந்தியா..? நான் கூட இந்த ரூவா..நோட்ட கண்டு பிடிச்சவர்னு நினைச்சேன்..’’ என்று மூக்கம்மா சொல்ல ரங்குவுக்குத் தலையே சுற்றியது.

‘‘ஐயோ கெழவி நீயெல்லாம்.. இந்த ஒலகத்தில வாழ்ந்து என்ன பிரயோசனம்.. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் குடுத்த காந்தியும் தெரியல.. நேதாஜியும் தெரியல..’’ என்று நொந்து போன ரங்கு தேசியக் கொடியை எடுத்து மூக்கம்மாளிடம் நீட்டினான்.

‘‘இது என்னன்னு தெரியுதா..?’’ என்று தேசியக் கொடியைக் காட்ட கண்கள் இரண்டையும் கரகரவெனத் தேய்த்துக் கொண்டு பார்த்த மூக்கம்மாள்,

‘‘இது என்னன்னு எனக்கு தெரியல..?’’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

‘‘ஐயோ.. இந்தக் கெழவி உசுரோட இருந்தா என்ன..? செத்தா என்ன..?’’ என்று புலம்பிய ரங்கு

‘‘சரி.. இதுக போகட்டும்.. சினிமாவுல இருக்கிறவங்க யாராவது தெரியுமா..?’’ என்ற போது

‘‘ம்ம் ஆமா.. சின்னப்புள்ளையில சினிமா பாத்துக்கிறேன்.. – ஆனா..! அது நமக்கு ஒத்து வராது ராசா..’’ என்று மூக்கம்மா கிழவி விலக

‘‘ஏய்.. கிழவி.. ஒனக்கு சினிமாவுல யார் யாரெல்லாம் தெரியும்..’’ என்று ரங்கு விடாமல் கேட்க

‘‘எம்சியாரு.. சிவாசி.. செயலலிதா.. ன்னு சொல்லுவாங்க மத்தபடி அவங்க நடிச்ச படம் நான் பாத்ததில்ல..’’ என்று மூக்கம்மாள் சொல்ல,

‘‘சரி.. ரஜினி, கமல், அஜீத், விஜய் யாராவது ஒனக்குத் தெரியுமா..?’’ என்று ரங்கு கேட்க

‘‘இல்ல ராசா.. அவங்கல்லாம் யாரு..?’’ என்று ரொம்பவே வெள்ளந்தியாய்க் கேட்டாள் மூக்கம்மாள்,

‘‘சரி..ஏதாவது சினிமாப் படம் பாத்திருக்கியா..?’’ என்று ரங்கு கேட்டான்.

‘‘ம்.. பாத்திருக்கேன்..ஒரே ஒரு படம் மட்டும் பாத்திருக்கேன்..’’ என்று மூக்கம்மாள் சொல்ல

‘‘என்ன படம் ஆத்தா..?’’ என்று ரொம்பவே ஆவலாகக் கேட்டான் ரங்கு.

‘‘அது என்னமோ.. படம்ன்னு.. எனக்கு நெகா தெரியலப்பா.. சினிமா பாத்துட்டு இருக்கும் போது,படத்தில மழ பேஞ்சுச்சு, ஐயய்யோ, மழ பேயுது, வீட்டு வாசல்ல நெல்லு காயப் போட்டுட்டு வந்தோம்னு சினிமா கொட்டகையை விட்டு, வெளிய வாரேன் – வெளிய மழ பேயல.. – அவ்வளவு தான்.. அன்னைக்கு இருந்து சினிமா பாக்குறதே விட்டேன் தம்பி..’’ என்று மூக்கம்மாள் சொனன்னபோது, ‘களுக்’ என்று சிரித்து விட்டான் ரங்கு ‘உலகம், நாடு நடப்பு எதுவும் தெரியாத வெள்ளந்தியான இந்தக் கிழவியும் இங்கே வாழ்ந்து கொண்டு தானே..!’ இருக்கிறாள் என்று நினைத்துவிட்டு

‘‘ச்சே.. – பாவம்..’’ – மூக்கம்மாளின் முகத்தை உற்று நோக்கினான் ரங்கு,

‘‘ஏத்தா.. ஒனக்கு, அரசியலும் தெரியாது, சினிமாவும் தெரியாது.. இந்த உலகத்தில ஒனக்கு என்ன தெரியும் ஆத்தா..’’ என்று ரங்கு கேட்டபோது

கட கடவெனச் சிரித்த மூக்கம்மாள்,

‘‘எனக்கு என்னய்யா தெரியும்.. – எங்க வீட்டு ஆம்பள , எம் புள்ளகுட்டிக, பேரன் பேத்திகள், ஆடு மாடு, கோழி, இந்த ஊருச்சனம், நாலு சொந்த பந்தம் இத விட வேற எதுவும் எனக்குத் தெரியாதுய்யா.. – இது தான்யா என்னோட ஒலகம்..’’ என்று சொன்னபோது

‘பணம், புகழ், செல்வாக்கு என்று அலையாய் அலைந்து கிடக்கும் இந்த உலகத்தில் மூக்கம்மாள் போன்ற வெள்ளந்தி மனுசிகள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்’ என்று நினைத்த ரங்குவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *