செய்திகள்

யூ டியூப் மூலம் பூட்டை உடைக்க பயிற்சி எடுத்து பைக் திருடிய 2 பேர் கைது

சென்னை, அக். 26–

யூ டியூப் மூலம் பூட்டை உடைக்க பயிற்சி எடுத்து பைக் திருடிய 2 பேரை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பெருங்குடி, திருமலைநகரைச் சேர்ந்தவர் விவேக் (வயது 32). இவர் கடந்த 9ம் தேதி இரவு தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே தனது இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் துரைப்பாக்கம் உதவிக்கமிஷனர் லோகநாதன் தலைமையில் தலைமைகாவலர்கள் புஸ்பராஜ், தாமோதரன், திருமுருகன் மற்றும் முதல் நிலைகாவலர்கள் வெங்கடேஸ்வரன், வினோத் ஆகியோர் அடங்கிய தனிப்படை பைக் திருட்டு நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு நபர்கள் நள்ளிரவில் விவேக்கின் பைக்கின் பூட்டை உடைத்து மற்றொரு வாகனத்தின் மூலம் தள்ளிக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராவைப் பின்தொடர்ந்து கண்காணித்ததில் பெருங்குடி டோல் கேட் அருகே உள்ள சந்து வழியாக பைக் திருடர்கள் சென்றனர். அதன்பின்னர் கண்ணகிநகர் ஏகேடிஆர் கல்ப் ரோடு வழியாக வழியாக சென்று சந்திரசேகர் அவென்யூ மற்றும் விபிஜி அவென்யூ தெருக்களின் வழியாக துரைபாக்கம் மேட்டுக்குப்பம் சென்றனர். பின்பு மீண்டும் துரைப்பாக்கம் சங்கீதா ஹோட்டலின் பின் பகுதி வழியாக 200 அடி சாலையை அடைந்து காமாட்சி ஆஸ்பத்திரி ஈச்சங்காடு சந்திப்பு ஆகிய பகுதிகளை கடந்து பைக் திருடர்கள் சென்றுள்ளனர். பின்னர் வெள்ளக்கல் பகுதியில் திருடிய வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு மீண்டும் துரைப்பாக்கத்துக்கு வேறு பகுதி வழியாக வந்துள்ளது சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும் பைக் கொள்ளையர்கள் சென்ற பைக்கின் பதிவெண்ணை வைத்து ஆராய்ந்ததில் அவர்கள் துரைபாக்கம் பகுதியில் உள்ள நீலாங்கரை லிங்க் ரோட்டில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் நீலாங்கரையில் தங்கியிருந்த மன்னிவாக்கம், மதனபுரம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டியன் (வயது 23) மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த ஹரி நிகிஷ் (வயது 22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரிடமும் விசாரணை நடத்தியதில், தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த போது இருவரும் அறிமுகமாகியுள்ளனர். கஞ்சாபோதைக்கு அடிமையான இருவரும் வேலையை இழந்துவிட்டனர். மேலும் கஞ்சா வாங்க பணம் இல்லாததால் ஹரி நிகிஷ் தன்னுடைய டியோ இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்துள்ளார். பின்னர் தன்வாகனத்தை மீட்கவும், போதைக்கும் பணம் தேவைபட்டதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இருவரும் பைக் திருட முடிவு செய்துள்ளனர். யூடியூப் மூலம் பைக்குகளின் பூட்டை உடைப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டுள்ளனர். அந்த பாணியில் பெருங்குடி திருமலைநகரில் பைக்கை திருடியுள்ளனர். பெட்ரோல் இல்லாததால் தள்ளியபடி சென்ற அவர்கள் மெயின் ரோட்டில் சிசிடிவி கேமாராக்களில் போலீஸ் கண்ணில் சிக்காதபடி பதுங்கி பதுங்கி சென்றனர். மேலும் வெள்ளக்கல் பகுதியில் மறைத்து வைத்திருந்த பைக்கை தங்களது சொந்த ஊரான பட்டுகோட்டைக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து இரு சக்கரவாகனத்தை மீட்டனர். விசாரணைக்குப் பின்னர் கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *