சிறுகதை

தாயிற் சிறந்த கோவில் இல்லை | துரை.சக்திவேல்

Spread the love

வீட்டுக்குள் அங்கும் இங்கும் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்தான் கதிர்.

வீட்டு வாசலுக்கு ஓடினான் ;தெருவின் இரண்டு பக்கத்திலும் திரும்பிப் பார்த்தான்.

மீண்டும் வீட்டுக்குள் வந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்தவன்… நேரம் ஆக ஆக கோபத்தின் உச்சத்திற்கே சென்றான்.

மறுபடியும் வீட்டு வாசலுக்கு சென்று மீண்டும் தெருவின் இரண்டு பக்கமும் திரும்பி பார்த்து விட்டு வீட்டுக்குள் வந்தவன் கோபத்தில் கதவை ஓங்கி அடித்து சாத்தினான்.

பிரிஜில் இருந்து ஐஸ் வாட்டரை எடுத்துக் குடித்து விட்டு சோபாவில் சாய்ந்தான்.

அவனது கோபத்திற்கு காரணம்….

அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கோவிலுக்குச் சென்ற தனது மனைவி தனது தாய் சரோஜாவுக்கு காலை உணவு கொடுக்க வேண்டிய நேரம் நேருங்கியும் வீட்டுக்கு திரும்பி வராததுதான்.

கதிருக்கு அவனது தாய் சரோஜா என்றால் உயிர்.

கதிர் பிறந்த 6 மாதத்திலேயே அவனது தந்தை சந்திரன் இறந்து விட்டார்.

கணவர் இறந்ததால் தனது மகன் தான் தனது உலகம்… அவனை வளர்த்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன் இளமை கால கனவுகளை உதறி தள்ளிவிட்டு தனது மகனுக்காக வாழ்ந்தார் சரோஜா.

தன்னந்தனி ஆளாய் கஷ்டப்பட்டுக் கதிரை வளர்த்து ஆளாக்கினார்.

கதிர் நன்றாக படித்து அரசாங்கப் பணியில் வேலைக்கு சேர்ந்தான்.

உயிருக்கு உயிராக தன்னை வளர்த்த தாய் மீது கதிருக்கும் அளவுகடந்த பாசம்.

கோவிலுக்கு போகாத கதிர் தன் தாயை தெய்வமாகப் பார்ப்பான்.

சிறு வயதிலிருந்தே தனது தாயின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத கதிர் திருமணத்திற்கு பின்பும் அவ்வாறு நடந்து கொண்டான்.

அவனுக்கு ஏற்றாற் போல் அவனது மனைவி லதாவும் அமைந்து விட்டார்.

தனது மாமியாரை தனது தாய் போல் பார்த்துக் கொள்வார்.

வயதான காரணத்தினால் சரோஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார்.

அடிக்கடி விடுமுறை எடுத்து தனது தாயை கவனித்து வந்தான் கதிர்.

படுத்தபடுக்கையாக இருக்கும் சரோஜாவுக்கு அது பெரிய குறையாகவே தெரியவில்லை.

காரணம் தனது மகனும் மருமகளும் தன்னை எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டது தான்.

அன்று காலை தூங்கி எழுந்த லதா குளித்து முடித்து கோவிலுக்கு சென்றாள்.

வழக்கமாக காலை 8 மணிக்கு காலை உணவு சாப்பிடும் தனது தாய்க்கு காலை உணவு கொடுக்க வேண்டும்.

8.30 மணி ஆகியும் கோவிலுக்கு சென்ற தனது மனைவி வீட்டுக்குத் திரும்பாததால் அவன் கோபம் அடைந்தான்.

கோவிலுக்கு சென்ற மனைவி திரும்பி வந்ததும் அவளுடன் சண்டை போடுவதற்காக காத்துக் கொண்டு இருந்தான் கதிர்.

அப்போது படுக்கை அறையில் இருந்து அவனது தாய் சரோஜா அழைக்கும் சத்தும் கேட்டதும் வேகமாக ஓடினான்.

லதாவை எங்க காணோம் என்று சரோஜா கேட்க…

கோவிலுக்கு போயிருக்கா. இப்ப வந்துடுவா என்று பதில் கூறிய கதிர், தனது தாயின் அருகில் அமர்ந்து கொண்டு அவரது கையை பிடித்துக் கொண்டு அம்மா பசிக்கிதா ? நான் ஏதாவது சாப்பிட கடையில் போய் வாங்கிட்டு வரட்டுமா? என்று பாசமாக கேட்டான்.

உடனே சரோஜா…. இன்னைக்கு என்ன விசேஷம் லதா எதுக்கு கோவிலுக்கு போயிருக்கா என்று கேட்டான்.

இன்னைக்கு எங்களுக்கு முதலாம் ஆண்டு கல்யாண நாள்.

அது தான் லதா கோவிலுக்கு போயிருக்கா என்று கூறினான் கதிர்.

நீ அவள் கூட கோவிலுக்கு போகலையா? என்று சரோஜா திரும்பக் கேட்டார்.

நான் என்னைக்கு அம்மா கோவிலுக்கு போயிருக்கேன்.

நீங்க இருக்கும் இடம் தான் எனக்கு கோவில். நீங்க தான் எனக்கு தெய்வம்.

உங்களைத் தவிர நான் வேறு எந்த சாமியையும் வேண்டியது இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா என்று திரும்பி கேட்டான்.

அட போடா. இன்னும் எவ்வளவு காலம் தான் இப்படியே இருப்ப….

அவள் மனசு எவ்வளவு கஷ்டப்படும். அவளுக்காகாவது நீ கூட போயிருந்திருக்கலாம் என்று அறிவுரை கூறினார் சரோஜா.

இல்ல அம்மா… நானும் கோவிலுக்கு போயிட்டா உங்களை யார் பார்த்துக் கொள்வது என்று சமாதானம் செய்தான் கதிர்.

சிறிது நேரத்தில் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும் வேகமாக சென்று கதவைத் திறந்தான் கதிர்.

வாசலில் அவனது மனைவி லதா நின்று கொண்டிருந்தாள்.

அதுவரை எரிமலை போல் கோபத்தின் உச்சியில் இருந்த அவன் லதாவைப் பார்த்ததும் பனி போல் கரைந்தான்.

வா… லதா கோவிலில் கூட்டமா இருந்ததா? ஏன் இவ்வளவு நேரம் என்று அடுக்கடுக்கான கேள்வியை கேட்டான்.

அவனது கேள்வியை பற்றி எந்த கவலையும் படாத லதா, அவனிடம் விபூதியை நீட்டினாள்.

அதை எடுத்த கதிர் தனது நெற்றியில் வைத்துக் கொண்டான்.

நேராகப் படுக்கை அறைக்குள் சென்று அங்கு படுக்கையில் படுத்திருந்த தனது மாமியார் சரோஜாவுக்கு பிரசாதத்தை எடுத்துக் கொடுத்த லதா அவரது காலை தொட்டு வணங்கினார்.

தனது மருமகளின் தலையை தடவிய சரோஜா, அவனையும் கோவிலுக்கு கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தானே என்று கேட்டார்.

அவருக்கு சாமியை விட நீங்க தான் முக்கியம் என்றாள்.

இன்னும் எத்தனை காலம் தான் இப்படியே இருப்ப…. கோவிலுக்கும் போகனும்டா என்று தனது மகன் கதிருக்கு அறிவுரை கூறினாள் சரோஜா.

அம்மா என்னைக்கும் நீங்க தான் எனக்குத் தெய்வம் என்று தனது தாயின் தலையை தடவிக்கொண்டே பதில் கூறினான் கதிர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *