செய்திகள்

சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்காக ‘கண்காணிப்பு பலகை’

அதிகார மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் சி.பொன்னையன் தகவல்

சென்னை, பிப். 16–

தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் 12–வது மாநில அளவிலான அதிகார மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவில், காணொளி வழியாக நடைபெற்றது.

இந்த நிதியாண்டில் (2020–-21) 12–வது மாநில அளவிலான அதிகாரக்குழுக் கூட்டத்திற்கு ரூ.30 கோடியே 65 லட்சத்தில் 113 திட்டங்கள், பரிந்துரைக்கு முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணைத்தலைவர் சி.பொன்னையன் கூறியதாவது:–

கோவிட்–-19 (கொரோனா) அவசர காலத்தில், முதலமைச்சரின் தலைமையில் தமிழக அரசு நிர்வாகச் செலவைக் கணிசமாகக் குறைத்துள்ளது, இருப்பினும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் போன்ற மேம்பாட்டுத் திட்டத்திற்கு முழுத் தொகையான ரூ.75 கோடி இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் தலைவராக உள்ள நிலையில் கோவிட்-19 அவசர காலத்தில் சுகாதார திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக, சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் முதல் முறையாக சுகாதார துறை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாண்டு ரூ.13.60 கோடி மதிப்பிலான திட்டங்கள் சுகாதார துறைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பெருமளவில் பயனடைய வேண்டும் என்பது முதலமைச்சரின் நோக்கம், அதன்படி சமூகத்திற்கு பெருமளவில் பயனளிக்க சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய திட்டங்களான சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள், காடு வளர்ப்பு, குடிநீர் மற்றும் வடிகால், மனித விலங்கு மோதல், மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகும்.

சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக பிரத்தியேகமாக ஒரு ‘கண்காணிப்பு பலகை’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செயல்முறை மூலம் திட்டங்களின் செயலாக்கம் மற்றும் மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான திட்டங்களைத் திறம்பட மற்றும் விரைவாக கண்காணிப்பதற்காக வலை கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு துணைத் தலைவர் சி.பொன்னையன் தெரிவித்தார்.

ஜெயஸ்ரீ ரகுநந்தன்

இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் (திட்டம்) ஜெயஸ்ரீ ரகுநந்தன், கூடுதல் தலைமை செயலாளர் (சுற்றுச்சூழல்) சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (சமூகக்காடுகள்) கயரத் மோகன் தாஸ், கூடுதல் தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் (திட்டம்) பி.ராஜேஸ்வரி, அரசு இணைச் செயலாளர் (சுகாதாரம்) ஷில்பா பிராபாகர் சதிஷ்,

அரசு துணைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம்) எஸ். ராமநாதன், அரசு துணைச் செயலாளர் (நிதித்துறை) ஆர். புவனேஸ்வரி, குழுமத் தலைவர் (நிலப் பயன்பாடு), அர்ச்சனா கல்யாணி, மற்றும் திட்ட இயக்குநர் (மேம்பாட்டுத் திட்டம்) கே.எம். சரயு, மாவட்ட வன அலுவலர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *