நாடும் நடப்பும்

உலகத் தலைவர்களுடன் மனம் திறந்து பேசத் தயாராகும் மோடி

இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளுக்கு இது மிக பரபரப்பான மாதமாக மாறிவிட்டது.

காரணம் எஸ்சிஓ (SCO), பிரிக்ஸ் (Brics), அமைப்புகளின் வருடாந்திர கூட்டங்கள் நடைபெறுகிறது. இவற்றின் முக்கிய அங்கத்தினர்கள் சீனாவும் ரஷ்யாவும் இந்தியாவை எப்படி பார்க்கப் போகிறது? என்பது தெளிவாகிவிடும்.

வெளியேற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக உறவுகளை மேம்படுத்த முற்பட்டார். அதன் சாதக பாதகங்களை முழுமையாக உணரும் முன்பே அவர் தேர்தலில் தோற்று விட்டதால் அடுத்த ஜனாதிபதி ஜோ பிடன் பதவிக்கு வருகிறார்.

இந்த மாற்றங்களால் சீனாவின் அடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது புரியாத புதிராகவே இருக்கும். உலக வர்த்தகத்திலும் கொரோனாப் பெரும்தொற்று பாதிப்பாலும் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டு வருவதால் மீண்டும் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனைகள் செய்வதை விட வியாபார வளர்ச்சிகளுக்காக ‘வெள்ளைக் கொடி’ காட்ட முற்படலாம்.

மேலும் நமது பாதுகாப்பு விவகாரங்களில் பின் தங்கவில்லை. பதிலடி கொடுக்கத் தயார் நிலையிலும் இருக்கிறோம் என்பதை உணர்ந்து வாலாட்டுவது சரியில்லை என்று உணர்ந்து இருப்பதால் எல்லை பதட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில் தான் இந்தியாவுடன் கூட்டுப் போர் பயிற்சியில் அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் ‘நிமிட்ஸ்‘ இணைய உள்ளது.

இந்திய -– பசுபிக் பிராந்தியத்தில் அமைதியைப் பராமரிக்க சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் இணைந்து, ‘குவாட்‘ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகள் இணைந்து, மலபார் கூட்டுப் போர்ப் பயிற்சி மேற்கொள்கின்றன.

முதல் கட்டமாக மலபார் கூட்டுப் போர்ப் பயிற்சி நவம்பர் 3 ந் தேதி முதல் 7 ந் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரமாண்ட போர்க் கப்பல் நிமிட்ஸ், இந்திய கடற்படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இந்தப் பயிற்சி கோவா கடற்கரைப் பகுதியில் நடைபெற உள்ளது. இந்திய கடற்படையில் உள்ள விக்ரமாதித்யா போர்க் கப்பலுடன் இணைந்து நிமிட்ஸ் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்.

மேலும் இதனுடன் மிக்–-29 கே ரக போர் விமானங்கள், ஏப் –18 ரக விமானங்களும் இணையும் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பிரம்மாண்ட போர்க் கப்பலாக விளங்கும் (சிவிஎன் 68) என்ற போர்க் கப்பல் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலாக விளங்குகிறது. தற்போது இந்திய கடற் பகுதிக்கு நிமிட்ஸ் வர உள்ளது.

USS Nimitz (CVN 68)

நவம்பர் 17ந் தேதி முதல் 20ந் தேதி வரை இந்த கூட்டுப் போர்ப் பயிற்சியில் விக்ரமாதித்யா, நிமிட்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பானின் போர்க் கப்பல்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த 4 நாள் பயிற்சியில் சுமார் 70 போர்க் கப்பல்கள் பங்கேற்க உள்ளன என்று இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

நமது வளர்ச்சிகளிலும் பாதுகாப்பு அம்சங்களிலும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் ரஷ்ய தலைவர்களுடன் மனம் விட்டுப் பேச பிரதமர் மோடிக்கும் அடுத்த 15 நாட்களில் பல வீடியோ சந்திப்பு வாய்ப்புகள் காத்திருக்கிறது.

மேலும் ஜி–20 பணக்கார நாடுகளின் கூட்டமும் நடைபெற இருப்பதால் அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபாடு காட்டும் இதர நாடுகளும் மோடியுடன் கலந்து பேசி பல வளர்ச்சி திட்டங்களுக்கு வித்திட வாய்ப்புகள் காத்திருக்கிறது.

மொத்தத்தில் 2020 விடைபெற 50 நாட்களே இருக்கும் இந்நிலையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிகளுக்கு உத்வேகம் தரும் பல நல்ல செய்திகள் வர நவம்பர் புதிய எதிர்பார்ப்பை தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *