செய்திகள்

அடல் சுரங்கப் பாதை: பிரதமர் மோடி திறந்தார்

உலகிலேயே மிக நீளமான

அடல் சுரங்கப் பாதை: பிரதமர் மோடி திறந்தார்

* 9.02 கி.மீ. நீளம் * ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பு

‘‘வாஜ்பாய் கனவை நிறைவேற்றினோம்” என பேச்சு

சிம்லா, அக்.3–

இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான மிக முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கனவை நிறைவேற்றி உள்ளோம். மேலும் இப்பகுதி மக்களின் கனவும் கூட. இந்த சுரங்கப்பாதையால் மக்கள் பயண நேரம் குறைக்கப்படும். எல்லையோர பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆட்சியில் இது போன்ற பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. நாங்கள் அவ்வாறு அல்ல வேகமாக செயல்படுத்தி உள்ளோம் என்றார்.

இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்–ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்–ஸ்பிடி பள்ளத்தாக்கு ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதை கருத்தில்கொண்டு, மனாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே ரோடங் பகுதியில் 9.02 கி.மீ. நீளத்துக்கு மலையைக் குடைந்து சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை அமைக்க வாஜ்பாய் ஆட்சியின் போது 2002ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. எல்லை சாலை அமைப்பு, தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது. அவரது நினைவாக இந்த சுரங்கத்துக்கு அடல் என பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பயணம் செல்லும் வகையில், இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் நீண்ட நெடுஞ்சாலை சுரங்க பாதை ஆகும்.

அடல் சுரங்கப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவை தொடர்ந்து, லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிஸ்சு என்ற இடத்திலும் மற்றும் சோலங்கி பள்ளத்தாக்கிலும் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டு பேசினார்.

9.02 கி.மீ. நீளம்

இந்த சுரங்கசாலையின் நீளம் 9.02 கி.மீ. கடல் மட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த நெடுஞ்சாலைசுரங்கம் அமைந்துள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூ.4,000 கோடி மதிப்பில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

குதிரை லாடம் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப் பாதை மொத்தம் 30 அடி அகலத்துடன், 17 அடி உயரத்துடன் இரு வழி சாலையைக் கொண்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 3,000 கார்கள், 1,500 லாரிகள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஏற்ற திறனுடன் இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இது மனாலிக்கும் லேவுக்கும் இடையேயான பயண நேரத்தை 5 மணி நேரம் வரையிலும், 46 கி.மீ. பயண தூரம் வரையிலும் குறைக்க உதவும். அவசர காலத்தில், எல்லைக்கு நம் ராணுவம் செல்வதற்கும் இந்த சுரங்கம் மிகுந்த உதவியாக இருக்கும்.

அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனையப் பகுதி, 3,060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனைய பகுதி 3,071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

இந்த சுரங்க பாதையில் அவசர கால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள்.60 மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் தீயணைப்பு குழாய் வசதிகள்.250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, ஏதும் நிகழ்வுகளை தானாகவே கண்டறியும் வசதி. 1 கிலோ மீட்டர் இடைவெளியில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வசதி. சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி. 50 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீ பிடிக்காத தரம் கொண்ட காற்று சீர் செய்யும் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாசலப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *