செய்திகள்

எந்த வதந்திகளும் எங்கள் வெற்றியை பாதிக்காது: பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேச்சு

இடைத்தரகர்கள் போல் செயல்படும் எதிர்க்கட்சிகள்

எந்த வதந்திகளும் எங்கள் வெற்றியை பாதிக்காது:

பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேச்சு

பாட்னா, அக்.23–

பீகார் மாநில வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாடுபட்டதாக பிரதமர் மோடி கூறினார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சசாராம் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ராம்விலாஸ் பஸ்வானுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பீகார் அரசு சிறப்பாக கையாண்டது. பீகாரின் வளர்ச்சிக்கு நிதிஷ்குமார் கடுமையாக உழைத்தார். இங்கு, மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டுப்போட முடிவு செய்துவிட்டனர். இதனால், எந்த வதந்திகளும் வெற்றியை பாதிக்காது. அனைத்து கருத்து கணிப்புகளும் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவிக்கின்றன. அரசு வேலையை விற்றவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும். தொழில்கள் எளிதாக நடக்க வங்கிக்கடன் எளிதில் வழங்கப்படுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை.

எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்கள் போல் செயல்படுகின்றன. இடைத்தரகர்களிடம் இருந்து நாட்டை எங்கள் அரசு பாதுகாத்துள்ளது. ஆனால், இந்தியாவை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் இரட்டை என்ஜீன் கொண்டதாக திகழ்கிறது.

மாநிலத்தில் மின்சார நுகர்வு 3 மடங்கு அதிகரித்துள்ளது. மின்சாரம் மற்றும் மருத்துவ வசதி அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. புது சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.15 ஆண்டுகளாக மாநிலத்தை எதிர்க்கட்சிகள் கொள்ளையடித்தன.

எங்கள் ஆட்சியில் தான் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. மின்சார திட்டங்கள் விரைவில் துவங்க உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *