செய்திகள்

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை:

சென்னை, பிப்.13–

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த ஜனவரி 19ம் தேதி சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி – குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரெயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கவும் தமிழகம் வருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நாளை (14ந்தேதி) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

மெட்ரோ ரெயில்

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார். அங்கு 11.15 முதல் 12.30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். விரிவுபடுத்தப்பட்ட (வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர்) சென்னை மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான 4வது புதிய பாதை, விழுப்புரம் – கடலூர் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூர் தடத்தில் மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதைகளை திறந்து வைக்கிறார். சென்னை அடுத்த தையூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான சென்னை ஐஐடியின் புதிய வளாகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து 12.35 முதல் 12.50 வரை முக்கிய நபர்கள் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார்.

பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

இதைத் தொடர்ந்து, சாலை வழியாக மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து பகல் 1.35 மணிக்கு தனி விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

பிரதமரை வரவேற்க பாஜக சார்பிலும், அண்ணா தி.மு.க. சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கம், பிரதமர் பயணிக்கும் சாலைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அவர்களது ஆலோசனையின்பேரில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழா நடக்கும் அரங்குக்கு வெளியில் 4 அடுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்படுகிறது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடு படுத்தப்பட உள்ளனர். பிரதமர் வரும் வழித்தடங்களில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *