செய்திகள்

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குப்பதிவு முகாம்

காஞ்சீபுரம், மார்ச் 6-–

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு மாதிரி வாக்குப்பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.

இதற்காக 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

அதனடிப்படையில் காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு மாதிரி வாக்குச் சாவடி அமைத்து வாக்குப்பதிவு செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

பொதுமக்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தின் செயல்பாடு குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இம்முகாமில் மாதிரி சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்குபதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் எவ்வாறு தங்களது வாக்கை செலுத்துவது என்பது குறித்து நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அனைத்து வாக்காளர்களும் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *