திருவாரூர், டிச. 4–
திருவாரூர் நகராட்சி புதுத்தெரு, மஜ்ஸித் தெரு ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றும் பணியினை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் தமிழக அரசு பல்வேறு பேரிடர் காலங்களிலும் பொதுமக்கள் எந்த வித துன்பமும், துயரமும் அடைந்துவிட கூடாது என்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்கின்றை அரசாக திகழ்கிறது.
அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படா கூடாது என்ற நோக்கில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதனால் ஆங்காங்கே தேங்கிவரும் மழை நீரிர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுபோன்ற காலகட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் பல மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சைகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றென்றும், எந்தநிலையிலும் மக்கள் நலன் காக்கின்ற அரசாக தமிழக அரசு விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமரன், வட்டாட்சியர் நக்கிரன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.டி.மூர்த்தி, திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் எஸ்.கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.