செய்திகள்

அண்ணா தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்: எடப்பாடி உறுதி

Spread the love

கோவை, பிப். 25–

2011ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தான் என்பிஆர் கணக்கீடு நடத்தப்பட்டது. இன்று இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த திட்டமிட்டு தி.மு.க. பொய் பிரச்சாரம் செய்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் எந்த சிறுபான்மையான மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் உறுதிப்பட கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜெயலலிதாவின் 72வது பிறந்த நன்னாளில் தமிழகம் முழுவதும், அண்ணா தி.மு.க.வின் சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. சேலத்தில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொள்வதற்காக இப்பொழுது வந்திருக்கிறேன்.

கேள்வி: பெண்கள் பாதுகாப்பு தினம் அறிவித்திருக்கிறீர்கள் …

பதில்: அம்மா பிறந்த நாளை சிறப்பிக்கின்ற வகையிலே, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என்று நான் அறிவித்து, இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம், பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது, மத்திய அரசும் அறிவுறுத்தியிருக்கிறது. அந்த அடிப்படையிலே தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு சிறப்பான முறையிலே பேணிக்காக்கப்பட்டு, இன்றைக்கு பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரங்களில் கோயம்புத்தூர் நகரமும், பெருநகரங்களில் சென்னை நகரமும் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு சிறப்பான முறையிலே பேணிக் காக்கப்பட்டு இன்றைக்கு பெண்கள் அச்சமில்லாமல் இரவு நேரங்களில் கூட சாலைகளில் செல்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றோம். இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறுகின்ற குற்றங்கள் முழுவதையும் கட்டுப்படுத்துவதற்காக, நகரங்களில் சிசிடிவி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு இன்றைக்கு பெருமளவு குற்றங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமருடன் சந்திப்பு பற்றி…

பதில்: இரண்டு தலைவர்களும் சந்தித்து முடித்த பிறகு தான், நான் சொல்ல முடியும்.

கேள்வி: நீங்கள் டெல்லிக்குச் செல்கிறீர்களா?

டெல்லி செல்லாதது ஏன்?

பதில்: அம்மா பிறந்த நாள் நிகழ்ச்சி இருக்கின்ற காரணத்தினாலே நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது.

கேள்வி: இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: ஏற்கனவே, நான் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறேன், வருவாய்த் துறை அமைச்சரும் தெளிவாக சட்டமன்றத்திலே எடுத்துச்சொல்லி, ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்த சிறுபான்மையின மக்களும் அச்சப்படத் தேவையில்லை. மத்திய அரசைப் பொறுத்தவரை, மக்கள் தொகை சென்சஸ் கணக்கிட வேண்டுமென்றும், அதேபோல, என்பிஆர் எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்சஸ், மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பொறுத்தவரைக்கும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுவது, 2003ம் ஆண்டு மத்தியிலே பாரதீய ஜனதா ஆட்சியில் இருக்கும்பொழுது, அந்த ஆட்சியிலே தி.மு.க. அங்கம் வகித்த பொழுதுதான் என்பிஆர் என்ற ஒரு நடைமுறையை கொண்டு வருகின்றார்கள், என்பிஆர் சட்டத்தை இயற்றுகின்றார்கள். அதற்குப் பிறகு 2010 காங்கிரஸ் ஆட்சியில், அதை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

தி.மு.க. இரட்டை வேடம்

தமிழகத்திலே 2011 பிப்ரவரி மாதம் தி.மு.க. ஆட்சி இருக்கின்றபொழுது தான் முதன்முதலாக என்பிஆர் கணக்கெடுப்பையே அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள். இன்றைக்கு, வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும், இந்த ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும், அந்த நிலையிலே அரசியல் லாபத்திற்காக, சிறுபான்மையின மக்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகின்ற விதமாக, ஒரு தவறான, பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். என்பிஆர்-ஐ பொறுத்தவரை, ஏற்கனவே நடைமுறையில் இருந்ததை தி.மு.க. 2011-ல் என்பிஆர் கணக்கிடப்பட்டது. அதில் மூன்று அம்சங்கள் சேர்க்கப்பட்டது. ஒன்று மொழி, இரண்டாவது அவர்களின் தாய், தந்தை வசித்த இருப்பிடம், மூன்றாவது ஆதாரம், ஆதார அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இதனுடைய ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சேர்த்திருக்கின்றார்கள்.

மத்திய அரசு விளக்கம்

அதோடு இப்பொழுது, மத்திய சட்டத் துறை அமைச்சரே தெளிவுபடுத்தியிருக்கின்றார். விவரம் தெரிந்தால் சொல்லலாம், ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம், இது கட்டாயம் அல்ல என்று தெளிவுபடுத்திவிட்டார். ஆகவே, ஏற்கனவே தி.மு.க. 2011 பிப்ரவரி மாதத்தில் என்ன கணக்கீடு எடுத்தார்களோ, அதைத்தான் மத்திய அரசு எடுக்கச் சொல்கின்றது. அவர்கள் சேர்த்த முன்று அம்சங்களும் நீங்கள் விருப்பப்பட்டால் சொல்லலாம், விருப்பமில்லை என்றால் சொல்ல வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, எந்த சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

கேள்வி: மாநில அரசின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை பற்றி…

தி.மு.க. கடனுக்கு நாங்கள் வட்டி

பதில்: இவர் 1 லட்சம் கோடி கடன் வாங்கினாரே, என்ன வெள்ளை அறிக்கை விட்டார். தி.மு.க. ஆட்சியிலிருந்து இறங்குகின்ற பொழுது, 1 லட்சம் கோடி கடன். அன்றைய தினம் 1 லட்சம் கோடி கடன் என்றால், அன்றைய மதிப்பு பெரியது. இன்றைய பண மதிப்பிற்கு நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள். 2010-ல் கேமரா என்ன விலை, இன்றைய தினம் என்ன விலை? எத்தனை மடங்கு விலை உயர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன் வைத்த கடனுக்கு நாங்கள் தொடர்ந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம். இதையெல்லாம் சேர்க்கின்ற பொழுது, இன்றைக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதியை வாங்கி பயன்படுத்துகின்றோம். அதனால் கடன் தொகை உயர்ந்திருக்கிறது. பணத்தின் மதிப்பை நீங்கள் ஒப்பீடு செய்து பார்த்தால் தான் இந்தக் கடன் அதிகமா, குறைவா என்று தெரியும். இன்றைக்கு விலைவாசி உயர்ந்து விட்டது. இன்றைக்கு அதைவிட கூடுதலாக 3 லட்சம் கோடி இருக்கிறது, அவர்கள் வைத்துவிட்ட கடனை சேர்த்தால் நான்கரை லட்சம் கோடி. அவர்கள் வாங்கிய கடனுக்கும், இந்த பத்தாண்டுகளுக்கும் அம்மாவின் அரசு தான் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் சேர்த்துப் பாருங்கள். இந்த அரசு எந்த அளவுக்கு சிறப்பான முறையிலே நிர்வாகம் செய்திருக்கின்றது என்பது தெளிவாக உங்களுக்கே தெரியும்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வரமுடியாது

ஒவ்வொரு ஆண்டும் ஒரு அறிக்கை வெளியிடுவோம், ஒவ்வொரு திட்டத்தை வெளியிடுவோம். அதன்படி, இந்த ஆண்டு நாங்கள் அறிவித்திருக்கிறோம். இன்னும் 1 வருடம், 3 மாதம் இந்த ஆட்சி தொடரும், அடுத்து வருவதும் அம்மாவின் ஆட்சிதான். இவர் என்ன ஆட்சிக்கா வரப்போகிறார்? எப்பொழுது பார்த்தாலும் முதலமைச்சர் கனவில் தான் அவர் இருக்கிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்கின்றோம். எந்த நேரத்தில் சொன்னாலும், மனம் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம், அவரிடம் மனம் இல்லை. ஏனென்றால், நல்ல திட்டங்களை அறிவிக்கின்ற காரணத்தினால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அந்த கோபத்திலிருந்து வருகின்ற வார்த்தை தான் அந்த வார்த்தை.

கேள்வி: சிறுபான்மையினர் நடத்தும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கீறீர்கள்?

தி.மு.க.வின் தரக்குறைவு பேச்சு

பதில்: கட்டுப்படுத்துவது என்பது கிடையாது, இது ஜனநாயக நாடு, அனைவருக்கும் போராட்டம் செய்வதற்கு உரிமையுண்டு. அந்த அடிப்படையில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது, கட்டுப்படுத்துகின்ற அரசாங்கம் எங்கள் அரசாங்கம் இல்லை. அதனால் தான், தமிழகத்தில் எந்தப் போராட்டம் நடந்தாலும் அனுமதி கொடுக்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசுதான். யாரையும் நாங்கள் தடை செய்யவேயில்லை.

யார் போராடுகின்றார்கள் என்று ஊடகத்திற்குத் தெரியும். அந்த ஊடகத்தைப் பற்றியே கடுமையான விமர்சனம் செய்தார்கள், ஆர்.எஸ்.பாரதி கொச்சையான வார்த்தை, வாய் கூசுகின்ற வார்த்தையைச் சொன்னார். ஆனால் எந்த ஊடகமும், எந்த பத்திரிகையும் கண்டனம் தெரிவிக்கவில்லை, அதற்காக என்ன ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்? மிகவும் வேதனையாக இருக்கிறது. பத்திரிகையாளர்களையும், ஊடக நண்பர்களையும் இதைவிட கேவலமாக என்ன பேச வேண்டும், கீழ்த்தரமான வார்த்தையை வாய் கூசாமல் பேசினார், அதற்கு நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பத்திரிகைகளில், அவருடைய கட்சி சார்ந்த விளம்பரம் தான் வருகிறது, கட்சி சார்ந்த நியூஸ்தான் அடிக்கடி வருகிறது. நாங்கள் எவ்வளவோ நல்ல திட்டங்களை அறிவிக்கிறோம், ஆனால் ஒருமுறை காட்டுகிறீர்கள், அப்புறம் விட்டுவிடுகிறீர்கள். மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களையெல்லாம் நீங்கள் எடுத்துச் சொன்னால்தான், இப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பேச மாட்டார்கள்.

தி.மு.க. போட்ட பிச்சையா?

அதுமட்டுமல்ல, இன்னொரு கருத்தையும் தி.மு.க. சார்ந்த ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார். தி.மு.க. இருக்கும்பொழுது தான் நிறைய பேர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார்கள், அது நான் போட்ட பிச்சை, தி.மு.க. போட்ட பிச்சை என்று ஒரு தரக்குறைவான வார்த்தையை பேசியிருக்கிறார், ஆணவக் கொழுப்பில் பேசிய வார்த்தை. ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இப்படி விமர்சனம் செய்வது சரியா? உங்களைப் பற்றியும் பேசினார், தாழ்த்தப்பட்ட மக்களையும் கொச்சைப்படுத்திப் பேசினார். அதற்கு எந்த ஊடகத்திலும், பத்திரிகையிலும் முழுமையான செய்தி வரவில்லை. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர் சொன்னதை மட்டும் நீங்கள் போட்டிருந்தால் போதும்.

கேள்வி: அண்ணா தி.மு.க. மீது முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டை வைக்கிறாரே?

பதில்: அவர் கட்சியிலேயே கிடையாது. எத்தனை முறை தவறு செய்து, எத்தனை முறை ஜெயிலுக்குப் போனார் என்பது தெரியும். கே.சி.பழனிசாமி எப்படிப்பட்டவர் என்று கோயம்புத்தூரில் அத்தனை பேருக்கும் தெரியும். அப்படிப்பட்டவருடைய கருத்தையெல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கேள்வி: குடிமராமத்து என்ற பெயரில், அரசினுடைய கஜானா காலி செய்யப்பட்டிருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் இன்றைக்கு குற்றம் சாட்டியிருக்கிறாரே?

ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை

பதில்: அவர் விவசாயிகளிடத்தில் அக்கறையில்லாதவர். நான் விவசாயியாக இருக்கின்ற காரணத்தால், விவசாயி தமிழகத்தின் முதலமைச்சர் என்கின்ற காரணத்தினால், விவசாயி படுகின்ற துன்பங்கள், துயரங்கள் நீங்க வேண்டுமென்ற அடிப்படையிலே குடிமராமத்து என்ற திட்டத்தை நான் துவக்கினேன். அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விவசாயிகளிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு வந்த காரணத்தால், டி.டி.வி. தினகரனாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, ஸ்டாலினாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, விமர்சனம் செய்கிறார்கள். இன்றைக்கு உடலுக்கு உயிர் எப்படியோ, அதேபோல் விவசாயிக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை கொடுப்பது அரசினுடைய கடமை. அந்தக் கடமையை நாங்கள் சரியான முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாக செல்கின்றது. வீணாக செல்கின்ற மழைநீரை குடிமராமத்துத் திட்டத்தின் மூலம், ஏரியை பலப்படுத்தி, ஆழப்படுத்தி, நீரை தேக்கி வைத்து, கோடை காலங்களில், நிலத்தடி நீர் உயர்வதற்கும், குடிநீருக்குத் தேவையான நீர் கிடைப்பதற்குத் தான் இந்தத் திட்டம். இந்த அற்புதமான திட்டத்தை விவசாயிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவரும் பாராட்டுகின்றார்கள். ஆனால் மக்களிடத்திலே பிரசித்தி பெற்ற காரணத்தினால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, எதிர்க்கட்சியில் இருப்பவர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *