செய்திகள்

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி: அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் அடிக்கல்

திருப்பத்தூர், டிச. 21–

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் கட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் வாணியம்பாடி நகராட்சியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் வாணியம்பாடி கோட்டாட்சியர் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் அடிக்கல் நாட்டினார்கள்.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டடம் சுமார் 776 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகின்றது. தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கட்டப்படுகின்றது. இவ்வலுவலகத்தில் கணினி அறை, அலுவலக அறை, கோட்டாட்சியர் அறை, கூட்ட அரங்கம், நீதிமன்ற அறை, ஓய்வு அறை, கழிவறைகள் மற்றும் இதர வசதிகளும், முதல் தளத்தில் பதிவு அறை, உணவு அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்றை மற்றும் இதர வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் 137.7 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பிரபாகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார், மாநில அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் சதாசிவம், சாம்ராஜ், வட்டாட்சியர் சிவப்பிரகாஷம், பத்மநாபன், ஒப்பந்ததாரர் ரஜினிகாந்த் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *