செய்திகள்

போலீஸ் டி.ஜி.பி.யிடம் அமைச்சர்கள் புகார் மனு

சென்னை, பிப்.6–

சசிகலா வருகை – யார் தடுத்தாலும் பேரணி நடத்துவோம் என்ற தினகரன் பேச்சு, மனித வெடிகுண்டுகளாக மாறுவோம் என்ற சசிகலா – தினகரன் ஆட்களின் பேச்சு தொடர்பாக இன்று போலீஸ் டிஜிபியிடம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் புகார் மனு அளித்தனர்.

போலீஸ் டிஜிபியை இன்று அமைச்சர்கள் பி.தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், சென்னை மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி. வெங்கடேஷ்பாபு, தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் பலர் சென்றிருந்தனர்.

போலீஸ் டிஜிபியை சந்தித்து புகார் மனு கொடுத்து விட்டு வந்த பின் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நிருபர்கள் சந்தித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:–

டி.டி.வி. தினகரன் பேட்டி அளிக்கையில், சசிகலா தான் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர். அவர் அண்ணா தி.மு.க. கொடியை பயன்படுத்தியதில் என்ன தவறு? பொதுச் செயலாளர் என்ற முறையில் அவர் சென்னை வருகிறார். டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தாலும் சரி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் சரி. எங்களை தடுக்க முடியாது என்று தினகரன் கூறியிருக்கிறார்.

மனித வெடிகுண்டு

பெங்களூரில் சசிகலா, தினகரன் ஆட்கள் 100 மனி வெடிகுண்டுகளாக மாறி வருவோம் என்று கூறியிருக்கிறார்கள். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி இருக்கிறார்கள். பொது சொத்துக்கள், பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம், அவைத்தலைவராக மதுசூதனன், ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் ஆகியோர் தலைமையிலான அண்ணா தி.மு.க.வைத்தான் அங்கீகரித்துள்ளது. இரட்டை இலை சின்னமும் இவர்களுக்குதான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டும் கூறி விட்டது. சசிகலா தரப்பில் அது தொடர்பாக சீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி ஆகி விட்டது. அதன்படி அண்ணா தி.மு.க.வுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் சசிகலா தரப்பினர் சொந்தம் கொண்டாட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அண்ணா தி.மு.க. தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.

டி.டி.வி.தினகரனும் தான் விலகிக்கொள்வதாக கோர்ட்டில் கூறி விட்டு, புதிய கட்சியை தொடங்கி விட்டார்.

சசிகலா அண்ணா தி.மு.க. உறுப்பினர் கூட இல்லை.

எனவே அண்ணா தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது. சட்டப்படி அது தவறானது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

நீங்கள் அமைச்சர்கள், அப்படி இருக்கும்போது நீங்களே போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுப்பது சரியா? என்று நிருபர்கள் கேட்டார்கள்.

பிரதமராக இருந்தாலும் சரி, முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, பாதிப்பு ஏற்படும்போது சட்டப்படி மனு கொடுத்து தான் நிவாரணம் கேட்கவேண்டும். எனவே தான் நாங்கள் டிஜிபியிடம் மனு கொடுத்தோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சசிகலா சென்னை திரும்பும் நிலையில் அவர் அண்ணா தி.மு.க. கொடியை பயன்படுத்தக்கூடாது என்று போலீஸ் டிஜிபியிடம் அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று புகார் அளித்திருந்தனர்.

அ.ம.மு.க. மனு

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார்.

சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் சார்பில் சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா தலைமையில் நடத்தப்படும் பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *