செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு

Spread the love

சென்னை, மார்ச் 21–

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வருகை தரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை எப்படி மேற்கொள்ளப்படுகிறது, ரெயில் நிலையம், ரெயில் பெட்டிகள் எவ்வாறு துய்மைப்படுத்தப்படுகின்றன, ரெயில் ஊழியர்களுக்கு முகவசம், சானிடேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ரெயில்வே துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார். இதில் அனைத்து துறை செயலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு, பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போன்று மாநில எல்லைகளில் இதுவரை 86 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 101 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிப்பதோடு, பயணிகளும் வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க முதல்வர், அனைத்து துறை செயலாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அரசு தெரிவிக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, முற்றிலுமாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

தற்போது ரெயில் நிலையங்களில் எவ்வாறு பயணிகள் பரிசோதிக்கப்படுகிறார்கள், ரெயில் பெட்டிகள், ரெயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தப்படுகிறது என்பதை நானும் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆய்வு செய்தோம். ரெயில் ஊழியர்களின் பணி வெகுவும் பாராட்டதக்க வகையில் அமைந்துள்ளது. இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். ரெயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 30 அறிவுரைகளை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகள் ரெயில்வே அதிகாரிகள் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *