செய்திகள்

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சென்னை, ஜன. 22–

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த 16ம் தேதி தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.

42,947 பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில் 42,040 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும் 907 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாருக்கும் பக்கவிளைவுகளோ, உடல் உபாதைகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பலர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வேன் என்றும் ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று சென்னை ராஜீவ்கராந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டுக்கொண்டார். முன்னதாக அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால் 908வது நபராக, ஒரு மருத்துவராக மற்றும் ஐஎம்ஏ உறுப்பினராக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளேன்.

தமிழகத்தில் இதுவரை 42,947 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைவாகவே கோவேக்சின் போடப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அதனை போட்டு கொண்டேன்.

தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டு கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி தொடர்பாக எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *