செய்திகள்

புதுடெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி

Spread the love

புதுடெல்லி, பிப்.25-

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தனது பங்காக ரூ.2,145 கோடி நிதியுதவி செய்ய முன்வந்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை நேரில் சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், ஊட்டி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய அரசு 60 சதவீத நிதி, மாநில அரசு 40 சதவீத நிதி என்ற விகிதாச்சார அடிப்படையில் இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ.3,575 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் பங்கு ரூ.1,430 கோடி ஆகும்.

11 கல்லூரிகளுக்கும் ஒப்புதல் வழங்கியதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோர் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் விஜயபாஸ்கர் கூறுகையில், “ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் உத்தரவு பெற்று இருப்பது, தமிழக அரசுக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். மத்திய அரசு தனது பங்காக 60 சதவீத நிதியை (ரூ. 2, 145 கோடி) வழங்க முன்வந்துள்ளது. இதற்கு முதல்கட்டமாக தமிழக அரசு ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மிகப்பெரிய திட்டம். அதற்கான சாலை வசதி, சுற்றுச்சுவர் போன்ற பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜைக்கா நிதி நிறுவனத்திடம் நிதியை பெறுவதற்காக மத்திய அரசின் ஆய்வுகள் 3 முறை முடிந்து விட்டன. எனவே, பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படும்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர் ஹா்ஷ் வர்தன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்த 63, 769 பேர் பிரத்யேக வார்டுகளில் வைக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. இது தவிர சீனா உள்பட மற்ற நாடுகளில் இருந்து விமானத்தில் வந்த 2,652 பேர்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். இதில் 47 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான சந்தேகம் இருந்ததால், அவர்களிடம் முழுப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், யாருக்கும் அந்த நோய் தாக்குதல் இல்லை என தெரிய வந்தது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *