செய்திகள்

விரக்தியின் விளிம்பில் பேசுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு

Spread the love

சென்னை, ஜன. 29–

விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரியை பழிவாங்குகிறார்” என்ற எதிர்க்கட்சித்தலைவரின் அறிக்கைக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:–

நேற்றைய தினம் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள சில இந்திய ஆட்சிப்பணியிட மாறுதல் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது விந்தையாக உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடந்து வரும் நிகழ்வு ஆகும். இதற்கு உள் அர்த்தம் கற்பித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எத்தனையோ இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை அவ்வப்போது பணி மாற்றம் செய்தது நடக்காத நிகழ்வா என்ன? இவற்றுக்கு எல்லாம் மேலாக, அப்போதைய அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய உமா சங்கரை அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் குடும்பம் நடத்திய தனியார் தொலைக்காட்சிக்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தினால் தற்காலிக பணி நீக்கம் செய்ததையும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் முடக்கப்பட்டதையும் அன்றைக்கு அம்மா கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டார். அதனை மக்கள் இன்னும் மறக்கவில்லை, மு.க.ஸ்டாலின் இதனை மறந்துவிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது.

விரக்தியின் விளிம்பில்

பாரத் நெட் உள் கட்டமைப்பு திட்ட டெண்டரில் முறைகேடு என்ற அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போதுதான் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இன்னும் நிறுவனங்களிடமிருந்து தொழில் நுட்ப ஒப்பந்தப்புள்ளியோ, விலைப்புள்ளியோ பெறப்படாத நிலையில், ஊழல், ஊழல் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது தான் விந்தையாக உள்ளது. அவர் விரக்தியின் விளிம்பிலிருந்து பேசி வருகிறார்.

அம்மாவின் அரசு கடுமையான உழைப்பினால் பல துறைகளில் சாதனை புரிந்து, எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், அதன் நல்லாட்சிக்கு அத்தாட்சியாக வேளாண்மை தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.

அடிக்க வேண்டும் என்பதா?

குறிப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு இதனை பாராட்ட மனமில்லாது போனாலும் பரவாயில்லை. குறை கூறியது மட்டுமல்லாமல், முதல் இடத்தை தமிழ்நாட்டிற்கு அளித்தவர்களை அடிக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம், தேசிய குற்ற ஆவண காப்பகம், தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு, மத்திய அரசின் புள்ளி விவரம் ஆண்டு புத்தகம், தேசிய மாதிரி கணக்கெடுப்பு, இந்திய பொது நிதி புள்ளி விவரங்கள், கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு போன்ற அதிகாரபூர்வமான, நம்பத்தகுந்த மத்திய அரசுத் துறை புள்ளி விவரங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் ஆய்வறிக்கைகளில் உள்ள வளர்ச்சி குறியீடுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின், இத்தகு உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் புள்ளி விவரங்களையே தவறு என்கிறாரா? அந்நிறுவனங்களை அடிக்க வேண்டும் என்று கூறுகிறாரா? அல்லது அந்நிறுவனங்களின் அதிகாரிகளையா? அல்லது இந்த புள்ளி விவரங்களை தொகுத்து வழங்கிய மத்திய அரசு அதிகாரிகளையா? இதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *