செய்திகள்

மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் டீசல் விற்பனை நிலையம் அமைக்கும் திட்டப்பணி

நாகப்பட்டினம் செருதூர் மீனவ கிராமத்தில்

மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் டீசல் விற்பனை நிலையம் அமைக்கும் திட்டப்பணி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடக்கி வைத்தார்

நாகை, ஜன.4–

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் டீசல் விற்பனை நிலையத்தினை அமைப்பதற்கான பூமி பூஜையினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டர் பிரவீன்.பி.நாயர் தலைமை வகித்தார்.

டீசல் விற்பனை நிலையத்தினை அமைப்பதற்கான பூமி பூஜையினை துவக்கி வைத்து, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:–

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு, மீன்வளம் மற்றும் மீனவர்களின் மேம்பாட்டினை உயர்த்த, பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உலகத் தரம் வாய்ந்த கடலோர உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தமிழகத்தில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் அமைத்தல், மாற்று மீன்பிடிப்பு முறையான ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்க சுரை மீன் பிடிப்பிற்கு மானியம் அளித்தல் மற்றும் நவீன மீன் அங்காடிகள் அமைத்தல் போன்ற புதுமையான திட்டங்களை மீன்வள மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், மீன்பிடிப்பு, மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில்கள் உணவு வழங்குவதிலும், உணவுப் பாதுகாப்பினை அளிப்பதிலும், மிக முக்கியப் பங்கு வகிப்பதோடு, கடலோர பகுதியிலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்து, அவர்களது வாழ்வு மகிழ்ச்சியடையவும் மீன்வளத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் சுமார் 2000 மீனவர்கள் வசித்து வருகின்றனர். மேலும், இக்கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். செருதூருக்கு அருகிலுள்ள வேளாங்கண்ணி, காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய கிராமங்களில் சுமார் 565 படகுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் நாகப்பட்டினம் அல்லது ஆறுகாட்டுத்துறை கிராமங்களுக்கு சென்று படகுகளுக்கு அரசால் வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் பிடித்துவரவேண்டிய நிலை உள்ளதால் மீனவர்களுக்கு காலவிரயம் மற்றும் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.

இன்றைய தினம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செருதூர் மீனவ கிராமத்தில் சில்லரை டீசல் விற்பனை நிலையம் அமைத்திடும் பணி துவங்கி வைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு தலைமை மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், திருப்புண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.வேதையன், பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் பாலை செல்வராஜ், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *