செய்திகள்

மருத்துவமனையிலிருந்து அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்

சென்னை, பிப்.4–

கொரோனா தொற்றால் தீவிர நுரையீரல் பாதிப்புக்குள்ளான உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 5ந்தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தததையடுது்து வீடு திரும்பினார். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் சுயமாக சுவாசிப்பதில் பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாச சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன.

பின்னர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து முழுவதும் குணமடைந்த நிலையில் அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த 19–ந்தேதி அன்று முதல்வரும், துணை முதல்வரும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர் காமராஜின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் காமராஜை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது விஜயபாஸ்கர் கூறுகையில், கொரோனா தொற்றால் 95 சதவீதத்துக்கு மேல் நுரையீரல் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பின் தற்போது பூரணமாக குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார்.கொரோனா தொற்றால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால், அடுத்த 3 வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஓய்வுக்கு பிறகு அவர் முழு வீச்சில் களப்பணியாற்றுவார் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *