செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய 3 மீட்பு வாகனங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்

Spread the love

சென்னை, ஜன. 29–

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, டெலிஹாண்ட்லர் உபகரணம், ரீசைக்லர் வசதியுடன் கூடிய சக்ஷன் கம் ஜெட்டின் வாகனம் மற்றும் 3 நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய மீட்பு வாகனங்களை அம்மா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் கீழே விழுந்த மரங்கள், மரக்கிளைகள், மின்கம்பங்கள் போன்றவற்றை அகற்றி சீர்செய்யவும், 11 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்களில் அகப்பட்டுள்ள மனிதர்களை மீட்கவும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.39.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு இணைப்புகளுடன் கூடிய ஒரு டெலிஹாண்ட்லர் உபகரணத்தை நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக இன்று வழங்கப்பட்டது.

மேலும், மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள சேறு, சகதி மற்றும் கழிவுகளால் ஏற்படும் அடைப்புகளை அகற்றும் பணியை தொழிலாளர்கள் கால்வாய்களில் இறங்கி மேற்கொண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, மழைநீர் கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.32 கோடி மதிப்பீட்டில் கனரக வாகன அடிச்சட்டத்தின் மீது பொருத்தப்பட்ட ரீசைக்லர் வசதியுடன் கூடிய சக்ஷன் கம் ஜெட்டின் வாகனங்கள் 6 எண்ணிக்கையிலும், பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் 1 எண்ணிக்கையில் என மொத்தம் 7 வாகனங்கள் கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் 1 வாகனம் தற்பொழுது பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் கூடிய விரைவில் பெறப்படும்.

தொடர்ந்து, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சாலை மற்றும் தெருவோரங்களில் வசிக்கும் வீடற்றோர், முதியோர் மற்றும் மனநலம் குன்றியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க ஏதுவாக, சக்கர நாற்காலி, சாய்தளம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒளி, ஒலி அமைப்புகளுடன் கூடிய குளிர்சாதன வசதிகள் கொண்ட ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 3 நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய மீட்பு வாகனங்கள் வீடற்றோரை மீட்கும் பணிக்காகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் தலைவர்/மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் (சுகாதாரம்) .பி.மதுசுதன் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *