செய்திகள்

திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்: அமைச்சர் கே.சி. வீரமணி துவக்கி வைத்தார்

திருப்பத்தூர், ஜன. 20–

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பத்தூர் இந்திய மருத்துவசங்கம் மற்றும் ஒசூர் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமினை கலெக்டர் ம.ப.சிவன்அருள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் முன்னிலையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக அரசு சார்பிலும் தனியார் மருத்துவமனையின் சார்பிலும் மருத்துவ முகாம் நடத்தப்படவில்லை. இந்திய மருத்துவசங்கம் மற்றும் ஓசுர் காவேரி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்மருத்துவ முகாம் பொது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுகொள்ளலாம் என உயர்த்தியுள்ளார். பொது மக்கள் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சைக்காக அதிகபட்சம் ரூ.1 கோடி வரை சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்ற வழிவகைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு மருத்துவத்துறைக்கு முக்கியத்துவத்தை கொடுத்து அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள ஏழை, எளியோர்கள் அனைவரும் இம்முகாமை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், திருப்பத்தூர் இந்திய மருத்துவ சங்க தலைவர் பிரபாகர், காவேரி மருத்துவமனை இயக்குநர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் மணி, திலீப்பன், சுமதி, சிவக்குமரர் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *