செய்திகள்

3 அம்மா மினி கிளினிக்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை, பிப். 19–

கலசப்பாக்கம் தொகுதியில் கிடாம்பாளையம், சீட்டம்பட்டு, பனைஓலைபாடி ஆகிய 3 ஊராட்சிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர்.எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கிடாம்பாளையம், சீட்டம்பட்டு ஆகிய கிராம ஊராட்சிகள், மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பனைஓலைபாடி ஊராட்சி, என மொத்தம் 3 கிராம ஊராட்சிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் 3 அம்மா மினி கிளினிக்கை திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் கே. எம். அஜிதா தலைமையில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன் ஆகியோர் முன்னிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டு, கர்ப்பினி தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கிடாம்பாளையம் கிராம ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் கிடாம்பாளையம், தொப்பநந்தல், நேரு நகர், ஐயப்பன் நகர், கட்டவரம், சாலமேடு, ஒம்முடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 5000 பொதுமக்களும், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சீட்டம்பட்டு கிராம ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் சீட்டம்பட்டு, கோவூர், துர்கம், ஏ.கொளத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 4000 பொதுமக்கள், சிகிச்சை பெற்று பயன்டைவார்கள்.

விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது

தமிழ்நாடு முதலமைச்சர் நகரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 2000 ‘முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 23 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் 40 கிராமங்களில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், 10 நடமாடும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் செயல்படவுள்ளது.

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும். இந்த மினி கிளினிக்கில் இரத்தத்தில் சர்க்கரை, சிவப்பணுக்களின் எண்ணிக்கையை காணுதல், சிறுநீரில் உப்பு, கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சிறுநீர் பரிசோதனை, காசநோய் காணும் சளி பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, எடை மற்றும் உயரம் பார்த்தல், இரத்த அழுத்தம் பார்த்தல் ஆகிய சிகிச்சைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, பிரசவத்திற்கு வருபவர்களுக்கு உடனடி பரிசோதனை செய்து பரிந்துரை செய்தல், பச்சிளம் குழந்தைகள் பரிசோதனை, சிறு நோய் சிகிச்சை ஆகிய சிகிச்சைகளும், சளி, இருமல், காய்ச்சல், காயம் மற்றும் சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். வெறிநாய் கடிக்கு உடனடி சிகிச்சையும், தடுப்பூசியும் வழங்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தி தந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் கேட்டவரம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம். திருநாவுக்கரசு, புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கிடாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *