செய்திகள்

பெரும்பாக்கம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்: அமைச்சர் கே.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு, டிச.18 –

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் அ.ஜான்லூயிஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் சாதாரண காய்ச்சல், தொற்றா நோய் போன்ற நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் எங்கும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் நிறுவப்பட்டுள்ளது.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 அம்மா மினி கிளினிக் துவங்க அரசால் அனுமதிக்கப்பட்டு, அதில் முதல் கட்டமாக 13 இடங்களில் இம்மாத இறுதிக்குள் அம்மா மினி கிளினிக் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 13 அம்மா மினி கிளினிக்குகள் பெரும்பாக்கம், சரவம்பாக்கம் செங்காட்டூர், முதலியார்குப்பம் மணமை, வழுவதூர், பையனூர், கீரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, முடிச்சூர், திருநீர்மலை, திரிசூலம் ஆகிய கிராமங்களிலும் செம்பாக்கம் நகராட்சியில் ஒரு அம்மா மினி கிளினிக்கும் துவங்கப்படுகிறது. மீதமுள்ள 33 அம்மா மினி கிளினிக்குகள் பொதுமக்களுக்கு வேண்டிய மருத்துவ சேவை செய்வதற்காக துவங்கப்பட உள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் அ.ஜான்லூயிஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். பிறகு அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:

அம்மா மினி கிளினிக்கினால் பெரும்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 5,778 பொதுமக்களும் மற்றும் சரவம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 5,172 பொதுமக்களும் பயன்பெறுவர். அம்மா மினி கிளினிக் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். சனிக்கிழமை மட்டும் விடுமுறை. இங்கு அடிப்படை மருத்துவ சிகிக்சைகள் அனைத்தும் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மேலும், அடிப்படை மருத்துவ ஆய்வக பரிசோதனைகள், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு, சிறுநீரில் உப்பு, சிறுநீரில் சர்க்கரை, கர்ப்பம் உறுதி செய்தல் போன்ற பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் தொற்றாநோய்களுக்கான சிகிச்சைகள், புறநோயாளிகளுக்கான சிகிச்சை ,கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், வயது முதியோர்களுக்கான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. தொற்றாநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சிறு காயங்களுக்கான மருந்துகளும் வழங்கப்படும்.

மக்கள் வெகுதூரம் சென்று மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து அருகிலேயே அமைந்துள்ள அம்மா மினி கிளினிக்கை உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டரை கே.மனோகரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வீ.வேலாயுதம், அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன், செங்கல்பட்டு நகர செயலாளர் டாக்டர் வி.ஆர்.செந்தில்குமார், மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் கோ.அப்பாதுரை, மாவட்ட மாணவரணி பொருளாளர் செய்யூர் வழக்கறிஞர் ஜி.ஜெயச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் இலத்தூர் பி.ரஞ்சன், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எஸ்வந்த் ராவ், லாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ராஜி, இடைக்கழிநாடு பேரூராட்சி செயலாளர் டி .ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *