மேல்மலையனூர் அரசு பள்ளி மாணவி மருத்துவ படிப்பில் சேர ரூ. 1 லட்சம் உதவி:
அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
விழுப்புரம், நவ. 23–
மேல்மலையனூர் அரசு பள்ளி மாணவி மருத்துவ படிப்பில் சேர ரூ. 1 லட்சம் உதவித் தொகையை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகளான கலைதேவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து, மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வை எழுதி வந்தார். கடந்த 3 ஆண்டாக எழுதிய அவர், இந்த ஆண்டு 437 மதிப்பெண்கள் பெற்றார். தற்போது மாணவி கலைதேவிக்கு தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர இருக்கிறார். இதற்கிடையே நீட் தேர்வுக்கு படித்து வந்த காலக்கட்டத்தில், ஒரு கல்லூரியில் நர்சிங் படிப்பையும் கலைதேவி தொடர்ந்துள்ளார். 2-ம் ஆண்டு படித்து வரும் அவர், அந்த கல்லூரியில் இருந்து தனது சான்றிதழை பெற்று டாக்டருக்கு சேர வேண்டும் என்றால் அந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் ரூ. 1 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
இதை செலுத்த முடியாத நிலையில் இருந்த மாணவியின் பெற்றோர், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு இதுபற்றி தெரியப்படுத்தி கோரிக்கை வைத்தனர். அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று மாணவி மற்றும் அவரது பெற்றோரை அழைத்து கல்விக் கட்டணத்திற்கான ரூ.1 லட்சத்தை தனது சொந்த செலவில் இருந்து வழங்கி உதவினார்.
மாணவி கலைதேவி கூறுகையில், தனது டாக்டர் கனவை நினைவாக்கிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதோடு தான் பயிலும் கல்லூரியில் இருந்து சான்றிதழை பெற ரூ.1 லட்சம் தேவைப்பட்ட நிலையில், எனது பெற்றோர் வைத்த கோரிக்கையை ஏற்று, உடனடியாக எங்களை அழைத்து ரூ. 1 லட்சத்தை வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.