செய்திகள்

1,115 பெண்களுக்கு ரூ.5 கோடி முதிர்வு தொகை: அமைச்சர் வி.சரோஜா வழங்கினார்

Spread the love

சென்னை, பிப். 25–

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1,115 பெண்களுக்கு ரூ.4 கோடியே 93 லட்சம் மதிப்பில் முதிர்வு தொகைக்கான காசோலையை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா வழங்கினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சமூகநலக் கூடத்தில் சமூகநலத் துறையின் சார்பில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார்.

சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா முன்னிலையில் விழாவில் பங்கேற்ற அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியை ஏற்று கொண்டனர். அமைச்சர் சரோஜா வாசிக்க பெண்கள் உள்பட அரசு அதிகாரிகள் அதை பின்தொடர்ந்து வாசித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1,115 பெண்களுக்கு ரூ.4 கோடியே 93 லட்சத்து 5 ஆயிரத்து 226 மதிப்பிலான முதிர்வு தொகைகளுக்கான காசோலைகளை அமைச்சர் வி.சரோஜா வழங்கினார்.

பின்னர், விழாவில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:–

பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் அநீதியைத் தடுக்கவே தொட்டில் குழந்தைத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், 5,943 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 4,330 பெண் குழந்தைகள், 1,148 ஆண் குழந்தைகளாகும்.

இக்குழந்தைகளில் 4,035 பெண் குழந்தைகள், 1,413 ஆண் குழந்தைகள் தத்துவள ஆதார மையங்களின் மூலம் உள்நாட்டிலேயே தத்து அளிக்கப்பட்டுள்ளன. 391 பெண் குழந்தைகளும், 109 ஆண் குழந்தைகளும் வெளிநாட்டுக்கு தத்து அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் அவரவர் பெயரில் ரூ.1,432 கோடி நிலையான வைப்பு தொகையாக வைக்கப்பட்டு உள்ளது.

18 வயது அடையும்போது அளிக்கப்படும் முதிர்வுத் தொகை உயர்கல்வி, திறன்மேம்பாடுக்குப் பயன்படுவதாக அமைந்து வரு கிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களால் பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கிய பெற்றோர் அரவணைத்து பாதுகாக்கும் வகையில் மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சமூகநலத் துறைச் செயலாளர் எஸ்.மதுமதி, சமூகநலத் துறை ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா, விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வி.என்.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *