செய்திகள்

456 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி இலவச வீட்டுமனைப் பட்டா

ஆரணி, பிப். 22–

456 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆரணி, வந்தவாசி, சேத்பட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 456 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, 964 பயனாளிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் உத்தரவு ஆணை, உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், முதிர்கன்னி ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயலாமை உதவித்தொகை, ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தி தந்துள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மாவின் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துக்குமரசாமி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் ஜெயராமன், வட்டாட்சியர் செந்தில்குமார், அசோக்குமார், பாரி.பி. பாபு, பி.ஆர்.ஜி.சேகர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *