சினிமா

ஸ்ரீபிரியங்கா : தென்னிந்திய சினிமாவுக்கு பொக்கிஷம்; தேசிய விருதுக்கு முழுத் தகுதி!

Spread the love

2018, ஏப்ரல் 1ந் தேதி நிலவரப்படி – தமிழகக் காவல்துறை பணியில் இருக்கும் (5 டிஜிபியில் ஆரம்பித்து, ஹலில்தார், நாயக், போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 23 பிரிவு) 1 லட்சத்து 986 ஊழியர்கள், அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தினர் மட்டுமே பார்த்தால் போதும் – சுரேஷ் காமாட்சி (இயக்குனர்), ஜெகன்னாத் (கதாசிரியர் – வசனகர்த்தா), ” சாமந்தி ” கதாபாத்திர நடிகை ஸ்ரீ பிரியங்கா சங்கமத்தில் உருவாகியிருக்கும் ‘ மிக மிக அவசரம்’ மூன்றே நாளில் 3வது ஷோவிலேயே ‘ ஹிட் – சூப்பர் – டூப்பர் ஹிட்’ என்று முத்திரை குத்தப்பட்டுவிடும். (சுரேஷ் காமாட்சி அண்ட் கோ, சக்சஸ் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆனந்தக் கூத்தாடலாம்!)

‘நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!’ என்பதை பலரும் சொல்ல கேட்டு இருக்கிறோம். அந்த வார்த்தை பிரயோகத்திற்கு உண்மையான பொருள் இப்படியும் இருக்கலாம் என்பதை க்ளைமாக்ஸ் காட்சியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் அந்த புத்திசாலித்தனத்திற்கு சுரேஷ் காமாட்சியையும், ஜெகன்னாதனையும் கைகுலுக்கி கவுரவிக்கலாம்.

ஸ்ரீபிரியங்கா… மனசை தைத்திருக்கும் மறக்க முடியாத கதாபாத்திரம். சாமந்திக்கு உயிர் கொடுத்திருக்கும் உன்னதமான நடிகை என்று அவரை குண்டுக்கட்டாக உயரத் தூக்கி (பெண் என்றாலும் பரவாயில்லை, வரம்பு மீறினாலும் பரவாயில்லை, தப்பில்லை என்று மனசுக்குள் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம்) ஆனந்தக் கூத்தாடலாம், மீண்டும்.

கங்காரு, வந்தா மல, கோடை மழை… என்று முந்தைய 3 படங்களில் நன்றாகவே பரிச்சயமானவர், 4வதாக வந்திருக்கும் இந்த ” மிக மிக அவசரம்…” படம் மூலம், நடிக்கத் தெரிந்த நடிகைக்கு தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆலவட்டம் போடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

” ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்; ஆனால்… த்திரத்தை அடக்க முடியாது, கூடாது ” – இந்த வார்த்தைதான் ‘ மிக மிக அவசரம் ‘ படத்தின் முழுக் கதை.

உயர் போலீஸ் அதிகாரி சீமான், கோரிப்பாளையம் ஹரிஷ், வழக்கு எண் 18 முத்துராமன்.ஈ, ராமதாஸ், சரவணா, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், லிங்கா, வி. கே.சுந்தர் (பத்திரிகையாளர்) குழந்தை ஸனா இவர்களைச் சுற்றி வரும் திரைக்கதை – காட்சிகளில், மையப்புள்ளி சாமந்தி ஸ்ரீபிரியங்கா தான்.

இயற்கையின் உபாதை – ‘ சூழ்நிலை கைதியாய்… அவசரத்தை அடக்கிக்கொண்டு, அந்த தவிப்பை முகத்தில் காட்டும் நடிப்பு… ஸ்ரீபிரியங்கா, ஒவ்வொரு பிரேமும், ‘ஐயோ என்ன கொடுமைடா சாமி…’ என்று நம்மை புலம்ப வைத்து அனுதாபம் வரவழைக்கும். இருதயம் பலவீனமானவர்களின் விழியோரம் கண்ணீர் வரவழைக்கும். ஸ்ரீபிரியங்கா … தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் என்று புகழாரம் சூட்டலாம். தேசிய விருதுக்கு முழுத் தகுதி பெறும் நடிகை.

கழிப்பிடம் செல்ல முடியாமல் இடுப்புக்கு கீழே கை வைத்து அழுத்தியபடி தவிப்பதும், கால் மேல் கால் போட்டு அழுத்துவதும், இடுப்பு பெல்ட், பேண்ட் பட்டனை சற்று தளர்த்தி நிம்மதி பெருமூச்சு விடுவதும், தாகத்துக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தும் குடிக்கும் தண்ணீரால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமோ என்ற பதைபதைப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வதும், ஒதுங்கவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அடிவயிற்றில் லேசான வலியை உணர்ந்து ஓவென்று உரக்க கத்த முடியாமல் உள் மனசுக்குள்ளேயே புலம்பி வெடித்துச் சிதறும் போதும்… ஸ்ரீபிரியங்கா, ரசிகர்களை மொத்த குத்தகைக்கு எடுத்து விடுகிறார். ஸ்ரீ பிரியங்காவிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி’ இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?!

* * *

விஐபி, – விவிஐபிக்களின் வருகையையொட்டி பந்தோபஸ்துக்கு சாலையோரங்களில் நிறுத்தப்படும் போலீசாரின் நிஜம் நிழல் ஆகும் ஓர் கதை.

ஒரு மேம்பாலத்தில் நிறுத்தப்படும் பெண் போலீஸ் சாமந்தி ஸ்ரீபிரியங்கா., காலை 9 மணிக்கு பாதுகாப்பு பணிக்கு கொண்டு வந்து நிறுத்தப்படுகிறாள். அவளுக்கு, மிக மிக அவசரமாக ‘ ஒன் பாத்ரூம் ‘ போக வேண்டிய நிர்ப்பந்தம். பிற்பகல் வரைக்கும் இருந்த இடத்தில் நின்று கொண்டு, உயரதிகாரியின் கெடுபிடிக்கு கட்டுப்பட்டு, கதவுக்கு இடுக்கில் சிக்கிய எலிக்குஞ்சு கணக்காய்… தவிக்கும் தவிப்பு தான் முழு திரைக்கதையும்.

* * *

கோவில் திருவிழா .- ஈரோடு பவானி கூடுதுறை. விவிஐபி தரிசனத்திற்கு வருகை. போலீஸ் பாதுகாப்பு. பெண் போலீஸ் சாமந்தி மீது அக்கறை காட்டும் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் கான்ஸ்டபிள், உதவிக்கு ஓடி வரத் துடிக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர், டிபன், தண்ணீர் டெலிவரி பாய், கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம், இன்ஸ்பெக்டர் கேட்டபடி அவரது கட்டளைக்கு கீழ் பணிபுரியும் கான்ஸ்டபிள், குடிகார கண்டக்டர், டிரக் லாரி டிரைவர், டிரக் உரிமையாளரின் தம்பி, தரிசனத்திற்கு வரும் இலங்கை வாலிபர், அஸ்தி கரைக்க வரும் குடிகார இளைஞர் இவர்கள் மத்தியில் எப்படி நகரும் கதாபாத்திரங்களுக்கு நடுவில் குண்டு வெடிக்கும் விபரீதம் நிகழுமோ… என்ற பயத்தில் திரைக் கதை காட்சிகள்…

* * *

‘ மிக மிக அவசரம் ‘ ஓடும் நேரம் 95 நிமிடங்கள் மட்டுமே. ஜெகன்னாத் கதை வசனகர்த்தா, பால பரணி ஒளிப்பதிவாளர். இஷான் தேவ் இசையமைப்பாளர். திரைக்கதை இயக்கம் சுரேஷ் காமாட்சி.

இது எல்லாம் ஒரு கதையா… இதெல்லாம் ஒரு படமா… என்ன தான் சொல்ல வராங்கடா… இதையே வா சொல்லிட்டு போவான்… என்று ‘ அக்கப்போர் ‘ பேசும் கூட்டத்துக்கு முகத்தில் அறைந்தார் போல ஒரு க்ளைமாக்ஸ். யாரும் எதிர்பார்க்காதது. சீமானின் சீற்றத்தில்… வழக்கு எண் 18 முத்துராமனுக்கு வைக்கும் ஆப்பு… அருமை… அருமை… என்று தலையாட்ட வைக்கும்.

மேகம் கருத்து – கொட்டும் மழையில் காக்கி உடை முழுவதும் நனைந்து க்ளோசப்பில் சாமந்தி ஸ்ரீபிரியங்காவை காமிரா நெருங்க…

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு – எல்லார்க்கும் பெய்யும் மழை… என்று திரையில் ஓடும் எழுத்துக்கள்.

சிம்ப்ளி சூப்பர் ஜெகன்னாத்,

சூப்பர் சுரேஷ் காமாட்சி,

சூப்பரோ சூப்பர் ஸ்ரீபிரியங்கா!

முகமலர்ச்சி ஒரு பக்கம் கனத்த இருதயம் மறுபக்கம்.

வீட்டுக்கு நடையைக் கட்டுகிறபோது –

சபாஷ்,ஒத்த செருப்பு சைஸ் 7 ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு இன்னொரு ஒத்த செருப்பு அதே சைஸில் கிடைத்து விட்டதே…. வாரே வா… வாரே வா… என்று ஆனந்த வாழ்த்துக்களோடு மனுசு ரெக்கை கட்டிப் பறக்கும்!

  • வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *